வெள்ளி, 17 ஏப்ரல், 2015

வீடுகளை காப்பாற்ற ஆதிவாசியினர் 800 பேர் இஸ்லாமிய மதத்திற்கு மாறினர்

உத்தரபிரதேசத்தில் தங்களது வீடுகள் இடிக்கப்படுவதை தவிர்க்க ஆதிவாசியினர் 800 பேர் இஸ்லாமிய மதத்திற்கு மாறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது: உத்தரபிரதேசம் மாநிலம் ராம்பூரில், ஆதிவாசியினரின் வீடுகள் இடிக்கப்படுவதற்கு எதிராக அவர்கள் மாவட்ட அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். தொடர்ந்து எச்சரிக்கை எழுந்தநிலையில், அவர்கள் தங்களுக்கு எந்தஒரு வழியும் இல்லை என்று தங்களது நம்பிக்கையை மாற்றப்போவதாகவும், அம்பேத்கர் அவர்களின் 124 பிறந்தநாளின் போது இஸ்லாமிய மதத்திற்கு மாறப்போவதாகவும் கூறினர். அதன்படி நேற்று முன்தினம் தங்களது வீடுகள் இடிக்கப்படுவதை தவிர்க்க ஆதிவாசியினர் 800 பேர் இஸ்லாமிய மதத்திற்கு மாறிஉள்ளனர். கடந்த சிலநாட்களுக்கு முன்னர் ராம்பூரில் ஆதிவாசியினரின் வீடுகளில் சிவப்பு அடையாளம் குறியிடப்பட்டது என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அங்கு பீதி ஏற்பட்டது.


வீடுகள் இடிக்கப்பட்டு விட்டு அவ்விடத்தில் வர்த்தக நிலையம் கட்டப்பட உள்ளதாகவும், இது ராம்பூரில் பெரிய புள்ளியாக விழங்கும் உ.பி. மந்திரி அசாம்கான் பின்னணியில் நடைபெறுகிறது என்றும் குற்றம் சாட்டினர். அசாம்கானின் ஊடக தலைமை அதிகாரி அலிகான் பேசுகையில், “இஸ்லாமிய மதத்திற்கு மாறியவர்கள் ஒன்றை தெளிவாக தெரிந்துக் கொள்ள வேண்டும், என்னவென்றால் இதுபோன்று நடந்துக் கொள்வது அவர்களுக்கு உதவிசெய்யாது என்பதை… அரசு நிலம் எந்தஒரு சாதியினர் மற்றும் பிரிவினராலும் ஆக்கிரமிக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

ராம்பூரில் அரசு இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் அனைவரும் பெரும்பான்மையானோர் இஸ்லாமியர்களே,” என்று குறிப்பிட்டு உள்ளார். ஆதிவாசியினர் அதிகமானோர் இஸ்லாமிய மதத்திற்கு மாறியதை அடுத்து நேற்று அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அம்ரோகாவில் இருந்து வந்த மதகுரு அவர்களுக்கு மதமாற்றம் செய்து வைத்து உள்ளார்.

இஸ்லாமிய மதத்திற்கு மாறிய பிம் அனார்யா பேசுகையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் எங்களது இடத்திற்குவந்தனர். எங்களை அங்கியிருந்து வெளியேற கூறினார். அப்போது எங்களுடைய இயலாமையை அவர்களிடம் எடுத்து கூறினோம். அவர்கள்தான் எங்களது வீடுகள் இடிக்கப்படுவதில் இருந்து தடுப்பதற்கு இஸ்லாமிய மதத்திற்கு மாற அறிவுரை வழங்கினர். எனவே மதமாற்றத்தினால் எங்களுடைய குடியிருப்பு இடிக்கப்படாது என்று உணர்ந்தோம் என்று தெரிவித்து உள்ளார்.

மற்றொருவர் பேசுகையில் மாவட்ட மாஜிஸ்திரேட் எங்களுடைய வீட்டிற்கு ஒன்றும் ஆகாது என்று கூறினார். நாங்கள் அதிகாரிகளை நம்பவில்லை. நாங்கள் எழுத்து பூர்வமான உத்தரவாதத்தை கேட்கிறோம். நாங்கள் இஸ்லாமிய மதத்திற்கு மாற முடிவு செய்தோம், என்ன நடக்கிறது என்று பார்ப்போம். என்று தெரிவித்து உள்ளார்  elukathir.lk

கருத்துகள் இல்லை: