செவ்வாய், 14 ஏப்ரல், 2015

ஆந்திர சம்பவம்: சாட்சியம் அளித்த இருவருக்கும் பாதுகாப்பு கேள்விகுறி?


ஆந்திர வனப் பகுதியில் கடந்த வாரம் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் இருந்து தப்பி வந்ததாக கூறப்படும் பாலச்சந்திரன் (29), சேகர் (54) என்ற இருவர், அந்த மாநில அதிரடிப்படையினருக்கு எதிராக தில்லியில் உள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் சம்பவம் தொடர்பாக திங்கள்கிழமை சாட்சியம் அளித்தனர்.
 சாட்சியம் அளித்த இருவருக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்கும்படி தமிழக காவல்துறை தலைமை இயக்குநருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
   ஆந்திர மாநிலம் சேஷாலம் வனப்பகுதியில் செம்மரக்கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி, கடந்த 7-ஆம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த 20 கூலித்தொழிலாளர்களை ஆந்திர மாநில செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிரடிப்படையினர் சுட்டுக் கொன்றனர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அச்சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றம், ஹைதராபாத், சென்னை உயர் நீதிமன்றங்கள் ஆகியவற்றில் பல்வேறு பொது நல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

 இந்நிலையில், ஆந்திர வனப்பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்ட கூலித்தொழிலாளர்களில் தப்பி வந்த, தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டம் புதூர் கொள்ளமேடு பகுதியைச் சேர்ந்த சேகர், தருமபுரி மாவட்டம், அரசுநத்தம் பகுதியைச் சேர்ந்த பாலச்சந்திரன் ஆகிய  இருவரும் தில்லியில் உள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு திங்கள்கிழமை வந்தனர். தமிழகத்தில் உள்ள "பீப்பிள்ஸ் வாட்ச்' என்ற மனித உரிமைகள் பாதுகாப்பு தன்னார்வ அமைப்பு, ஆணையத்தில் இவர்கள் ஆஜராக உதவி செய்தது.
 இந்த இருவரும் ஆணையத்தின் பதிவாளர் ஏ.கே.கார்க், செகரட்ரி ஜெனரல் ராஜேஷ் கிஷோர், மத்திய சட்டத் துறை இணைச் செயலாளர் ஏ.எல்.பஸ்கார் ஆகியோர் முன்னிலையில் சாட்சியம் அளித்தனர்.
 தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு அழைத்துச் செல்லப்பட்டது, அங்கிருந்து தப்பிவந்தது ஆகிய விவரங்கள் குறித்து அவர்கள் ஆணையத்தில் விளக்கினர். இதைத்தொடர்ந்து ஆணையத்தின் தலைவர் கே.ஜி. பாலகிருஷ்ணன், உறுப்பினர்கள் முருகேசன், சிரியாக்  ஜோசப், சரத் சந்திர சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு இருவரிடமும் சுமார் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தியது. 
 இதன் முடிவில் ஆணையம் பிறப்பித்த உத்தரவு: "ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட் தலைமையிலான நீதி விசாரணை நடத்த வேண்டும். சம்பவம் நடைபெற்றபோது பணியில் இருந்த வனத்துறை, காவல் துறை, சிறப்பு அதிரடிப்படைகளில் இருந்தவர்களின் பெயர்களை வரும் 22ஆம் தேதிக்குள் ஆந்திர மாநில அரசு சமர்ப்பிக்க வேண்டும். என்எச்ஆர்சி வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி, துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனையை நடத்த வேண்டும். துப்பாக்கிச்சூட்டில் பயன்படுத்திய ஆயுதங்கள், உயிரிழந்த நபர்களின் சடலங்களை  பாதுகாப்பாக பத்திரப்படுத்தப்படுள்ளதை உறுதிப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
 இந்நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மற்றொரு நபரான இளங்கோவன் (21) சாட்சியம் அளிக்க முன்வந்துள்ளார். எனினும் அவரால் தில்லி வரமுடியாத சூழ்நிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆணையத்தின் அதிகாரிகள் நேரில் சென்று அவரது சாட்சியத்தைப் பதிவு செய்வர்.
 ஹைதராபாத்தில் அடுத்த விசாரணை: தேசிய மனித உரிமைகள் ஆணையம் நடத்திய விசாரணைக்குப் பிறகு "பீப்ள்ஸ் வாட்ச்' அமைப்பின் நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் கூறுகையில், "ஆந்திர சம்பவம் குறித்து திருவண்ணாமலை மாவட்டம் மேலகனவாயூர் கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவனிடம் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி ஹைதராபாத்தில் ஆணையத்தின் அதிகாரிகள் சாட்சியம் மேற்கொள்ளவுள்ளனர்' என்றார்.

கருத்துகள் இல்லை: