வியாழன், 16 ஏப்ரல், 2015

காந்தப்படுக்கை விற்று ஜெயா சசி கும்பலையே Idiots ஆக்கிய ராதாகிருஷ்ணந்தான் நடிகன் ஆர் கே !

மத்திய சிறையில் சில காலம் குடிபுகுந்திருந்த காந்த படுக்கை திட்ட நிறுவனத்தின் தலைவர் திரு.ராதாகிருஷ்ணன்தான் இந்தத் திரைப்படத்தின் ஹீரோவான திரு.ஆர்.கே.
எல்லாம் அவன் செயல்’ என்று ஒருவனின் தலையில் பாரத்தைப் போட்டுவிட்டு நடப்பது சாமான்யனின் அன்றாட வாழ்க்கை. இதே தலைப்பில் ஒரு திரைப்படத்தைத் தயாரித்து, அதில் அறிமுக ஹீரோவாக நடித்து படத்தை குறிப்பிட்டுச் சொல்லும்படியாக பிரபலம் அடைய வைத்திருக்கிறார் திரு.ஆர்.கே! மலையாள இயக்குநர் திரு.ஷாஜி கைலாஷ் இயக்கியிருக்கும் இப்படம் திரைக்கு வந்தபோது எனக்கு ஆச்சரியமோ ஆச்சரியம்.எப்படி கைலாஷ் இவ்வளவு சஸ்பென்ஸாக படத்தை எடுத்து முடித்திருக்கிறார். கொஞ்சம் காஸ்ட்லியான இயக்குநராச்சே என்று அப்போதே நினைத்தேன். ரகுவரனும் நடித்திருப்பதால் படம் நீண்ட நாட்கள் தயாரிப்பில் இருந்திருக்கும் என்று நினைத்தேன். அது பொய்யில்லை. படத்தின் போஸ்டர்களை பார்த்தபோது ஹீரோவின் முகம் மட்டுமே எனக்குள் ஏதோ ஒரு ஞாபகத்தை உருவாக்கிவிட்டது.
எங்கயோ பார்த்து தொலைஞ்சிருக்கோமே என்று யோசித்து, யோசித்து ஒரு வழியாக கண்டு பிடித்துவிட்டேன். தெரிந்தவர்களிடம் கேட்டு உறுதியும் செய்து கொண்டேன். இப்படத்தின் ஹீரோவான திரு.ஆர்.கே.வின் நிஜமான பெயர் ராதாகிருஷ்ணன். போயஸ் கார்டன் சின்னம்மாவின் முதுகு வலியை ஒரே நாளில் ஓட, ஓட விரட்டியடிக்கிறேன் என்று சொல்லி காந்தப் படுக்கை என்ற வஸ்துவைத் தயாரித்து சகோதரிகளுக்கு வழங்கி, அதன் மூலம் அம்மணிகளுக்கு முதுகு வலி தீராததால், சகோதரியின் நெற்றிக்கண் திறக்கப்பட்டு உடம்பு வலியோடு சென்னை, மத்திய சிறையில் சில காலம் குடிபுகுந்திருந்த காந்த படுக்கை திட்ட நிறுவனத்தின் தலைவர் திரு.ராதாகிருஷ்ணன்தான் இந்தத் திரைப்படத்தின் ஹீரோவான திரு.ஆர்.கே.


காந்தப் படுக்கைத் திட்ட வழக்கில் ஜாமீன் பெற்று வெளியில் வந்தவுடன் Vcan என்னும் மல்டி லெவல் மார்க்கெட்டிங் கம்பெனியைத் துவங்கி அதையும் வெற்றிகரமாக இப்போதும் நடத்தி வருகிறார்.

முதன் முறையாகத் ஒரு திரைப்படத்தை தயாரித்து, அதில் தானே ஹீரோவாக அறிமுகமாகி ஜெயித்திருக்கிறார் எனில் அது நிச்சயம் பெரிய விஷயம்தான்.

கூடவே இத்திரைப்படத்தில் நடித்தவர்களுக்கும், பணியாற்றியவர்களுக்கும் பண விஷயத்தில் கஞ்சத்தனமே படாமல் சொன்னது போலவே செட்டில்மெண்ட் செய்திருக்கும் ஒரு நல்ல தயாரிப்பாளர் என்று ஸ்டூடியோ வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.

இந்த ஒரு திரைப்படத்தின் மூலம் ஒரு 100 குடும்பங்களாவது வாழ்ந்திருக்கும் என்கிறபோது, இந்த ஒரு காரணத்திற்காகவே கலையுலகில் வெற்றியாளராக நுழைந்திருக்கும் அவரை வாழ்த்தி வரவேற்கிறேன்.

ஒரு தவறு செய்தவன் திருந்தியிருக்க மாட்டானா..? அப்படீன்னு நீங்களும் நினைச்சுக்குங்க. ஆனா ஆள் யாருன்னு தெரியாம இருக்காதீங்க. அதனாலதான் இந்தப் பதிவு.

படத்தின் கதை என்னவோ ராகிங்கால் கொல்லப்பட்ட பெண்ணிற்கு நியாயம் கேட்டு ஒவ்வொருவரையும் தீர்த்துக் கட்டுவதுதானாம்.. படத்தை இன்னமும் நான் பார்க்கவில்லை. பார்த்த பின்பு விமர்சனம் எழுதுகிறேன்.

ஆனா பாருங்க. யாரோ எங்கயோ, எதுலயோ தலையைக் காட்டினாலே போதும்.. அவரோட ஜாதகம்வரைக்கும் புட்டுப் புட்டு வைக்கும் புலனாய்வு சிங்கங்களான நமது தமிழ்ப் பத்திரிகைகள்(நக்கீரன் உட்பட) இதை மட்டும் ஏன் கண்டுகொள்ளவில்லை என்பதை விசாரித்தால்..

பொதுவாக Press Show என்ற ஒன்றை படம் தியேட்டர்களில் திரைக்கு வருவதற்கு முன்பே படத்தின் தயாரிப்பாளர்கள் தங்களது செலவில் ஏதாவது ஒரு பிரிவியூ தியேட்டரில் திரையிடுவார்கள்.

அப்போது படம் முடிந்ததும் படம் நன்றாக இருக்கிறதா இல்லையா என்பதெல்லாம் கேள்வியாகாமல் அந்தப் படத்தின் PRO வசமுள்ள கவர்கள் பத்திரிகையாளர்களின் கைகளுக்கு பாஸ் ஆகும். சில வேளைகளில் படம் திரையிடலுக்கு முன்பே கொடுக்கப்பட்டுவிடும்.

அந்தக் கவரில் தயாரிப்பாளரின் நிலைமைக்கு ஏற்றாற்போல் சன்மானங்கள் புத்தம் புது நோட்டாக பவுசாக அமர்ந்திருக்கும். அது மெகா தயாரிப்பாளர் எனில் 1000, 500 என்று இருக்கும். சிறிய தயாரிப்பாளர்கள் என்றால் 300, 400 என்று இருக்கும். நிச்சயமாக 300-க்கு குறையாது.

ஆனால் நமது அண்ணன் திரு.ஆர்.கே. அவர்கள் வலையுலகத் தளபதி திரு.ஜே.கேரித்தீஷையே இந்த விஷயத்தில் தோற்கடித்துவிட்டார் என்கிறார்கள் பத்திரிகையாளர்கள். அண்ணன் திரு.ஆர்.கே., பிரிவியூவில் பத்திரிகையாளர்களுக்கு கொடுத்தது   2.500 அல்லது 3000 ரூபாய் மதிப்புள்ள Home System.
/www.truetamilan.com/

கருத்துகள் இல்லை: