சனி, 18 ஏப்ரல், 2015

எச் எல் தத்து, கே.ஜி.பாலகிருஷ்ணன் மற்றும் சதாசிவத்தை விட மிக மிக மோசமான ஊழல் தலைமை நீதிபதி?


நாம் இப்போது பார்க்கப்போகும் சாத்தான், இந்திய தலைமை நீதிபதி தத்து.    செப்டம்பர் 2009ல் வெளிவந்த டெஹல்கா இதழுக்கு அளித்த பேட்டியில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், இது வரை இருந்த 16 தலைமை நீதிபதிகளில் எட்டு பேர் ஊழல் பேர்வழிகள் என்று பேட்டியளித்தார்.
சமீப காலத்தில் நமக்கு தெரிந்து மிக மிக மோசமான ஊழல் பேர்வழியாக இருந்த தலைமை நீதிபதிகள் இருவர்.   ஒருவர் கே.ஜி.பாலகிருஷ்ணன்.  கேஜி.பாலகிருஷ்ணன் தலைமை நீதிபதியாக இருந்த காலத்தில், தீர்ப்புகள் ஏலம் விடப்பட்டன என்று உச்சநீதிமன்றத்தில் பேசப்படும்.     அவர் மீதே வருமானத்துக்கு அதிமாக சொத்து சேர்த்த புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு தலைமை நீதிபதியான முதல் தமிழர் என்ற பெயரோடு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான சதாசிவத்தைப் பற்றி சொல்ல வேண்டியதேயில்லை.   அவர் தலைமை நீதிபதியாக செயல்படுவதை விட ஒரு வியாபாரியாக செயல்பட்டார் என்பதே பொருத்தமாக இருக்கும்.   துளியும் சுயமரியாதை இல்லாத ஒரு நபர் யாரென்றால் அது சதாசிவம்தான்.    பதவி சுகத்துக்காக காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளிடமும் பிச்சையெடுத்துத்தான் இன்று கேரள மாநிலத்தில் ஆளுனராக இருக்கிறார்.
    இந்தப் பதவியை அடுத்து, தற்போது தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக இருக்கும் கேஜி பாலகிருஷ்ணனின் ஓய்வுக்குப் பிறகு, அந்தப் பதவியை அடைய பெரும் லாபி செய்து கொண்டிருக்கிறார் சதாசிவம்.     இந்த சதாசிவம்தான் ஜெயலலிதாவை திருப்தி செய்வதற்காக ராஜீவ் கொலையாளிகளின் தூக்கு குறித்த தீர்ப்பு விரைவில் வெளிவரும் என்று சொல்லி, பின்னர் கருணாநிதி அதை வெளிப்படையாக கண்டித்ததும், அந்தர் பல்டி அடித்து, அதை அரசியல் அமர்வுக்கு மாற்றி, தற்போதைக்கு அந்த வழக்கு விசாரணைக்கே வராதபடி செய்தார்.
தற்போது தலைமை நீதிபதியாக உள்ள எச் எல் தத்து, கே.ஜி.பாலகிருஷ்ணன் மற்றும் சதாசிவத்தை விட மோசமான நபர் என்றே உச்சநீதிமன்ற வட்டாரங்களில் எச்.எல்.தத்துவைப் பற்றி கூறுகிறார்கள்.
கர்நாடகத்தில் சிக்மகளுர் மாவட்டத்தில் பிறந்தவர்தான் இந்த தத்து.   வழக்கறிஞராகி, வருமான வரித்துறையின் வழக்கறிஞராக இருந்து, 1995ம் ஆண்டு உயர்நீதிமன்ற நீதிபதியாக ஆனார்.  2007ல் சட்டீஸ்கர் மாநில தலைமை நீதிபதியாக ஆன தத்து, டிசம்பர் 2008ல் உச்சநீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்று, 5 செப்டம்பர் 2014ல் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொள்கிறார்.
இவர் பதவியேற்ற ஒரு சில வாரங்களிலேயே ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு சிறை செல்கிறார்.    ஜெயலலிதாவை தண்டித்து நீதிபதி மைக்கேல் டி குன்ஹா எழுதிய தீர்ப்பு எவ்வளவு விரிவான விபரமான தீர்ப்பு என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
ஆனால், அக்டோபர் 18 அன்று ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை, மற்ற அமர்வு முன்பு அனுப்பாமல் தானே விசாரிக்கிறார் தத்து.  எந்த நீதிமன்றத்தின் முன் தனது நெருங்கிய உறவினர்கள் நீதிபதியாக இருக்கிறார்களோ, அந்த நீதிமன்றத்தின் முன்பு வழக்கறிஞர்கள் ஆஜராகக் கூடாது என்பது, 1997ம் ஆண்டு நடந்த நீதிபதிகள் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவு.   ஆனால் தனது மகன் ரோஹின்டன் நரிமன் உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருப்பது தெரிந்தும், ஃபாலி நரிமன் ஜெயலலிதாவுக்காக உச்சநீதிமன்றத்தில் வாதாடினார்.
ஃபாலி நரிமன்
ஃபாலி நரிமன்
இந்த ஒரே காரணத்துக்காகவே, ஃபாலி நரிமனை நீதிபதி தத்து வாதாட அனுமதித்திருக்கக் கூடாது.  ஆனால்,  தத்துவிடம் நேர்மையை எதிர்ப்பார்க்க முடியுமா ?  வாதங்கள் தொடங்கியதும், தத்து, கர்நாடக உயர்நீதிமன்றம் ஜெயலலிதாவின் ஜாமீனை தள்ளுபடி செய்திதில் தவறிழைத்து விட்டது என்றார். ஊழல் என்பது மனித உரிமைகளுக்கு எதிரானது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் கூறியதை தவறு என்கிறார் நரிமன்.   மேலும், மேல் முறையீடு நிலுவையில் இருக்கையில் ஒரு குற்றவாளிக்கு ஜாமீன் அளிப்பது அவரது உரிமை என்கிறார் நரிமன் ஜாமீனை தள்ளுபடி செய்ததில் கர்நாடக உயர்நீதிமன்றம் எடுத்தாண்ட பல்வேறு தீர்ப்புகள் தவறு என்று வாதிடுகிறார் நரிமன். சரி இந்த வழக்கை முடிக்க எத்தனை ஆண்டுகள் எடுத்துக் கொண்டீர்கள் என்று கேட்கிறார் தத்து.    பல ஆண்டுகள் என்கிறார் நரிமன்.
இந்த  ஒரே காரணத்தை வைத்தே ஒரு நியாயமான நீதிபதியாக இருந்தால் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்திருக்க வேண்டும்.  ஒரு ஊழல் வழக்கை 18 ஆண்டுகளாக சட்டத்தின் ஓட்டைகள் அத்தனையையும் பயன்படுத்தி தாமதப்படுத்திய ஒரு குற்றவாளிக்கு, ஜாமீன் வழங்குவதில் மட்டும் என்ன அவசரம் என்று தத்து கேட்டிருக்க வேண்டும்.  ஆனால் அப்படி கேட்காமல், இப்போது தண்டனையை ரத்து செய்தால் இன்றும் இருபது ஆண்டுகள் எடுத்துக் கொள்வீர்கள் மேல் முறையீட்டை முடிக்க என்கிறார் தத்து.     நரிமன், இரண்டே மாதங்களில் மேல் முறையீட்டை முடிக்கிறோம் என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்கிறோம் என்கிறார்.
“இந்த வழக்கில் குற்றவாளி, விசாரணை நீதிமன்றம் முன்பாகவும், உயர்நீதின்றம் முன்பாகவும், ஏன் உச்ச நீதிமன்றம் முன்பாகவும் நடந்து கொண்ட முறையை நாங்கள் பரிசீலனையில் எடுத்துக் கொள்ளலாம் அல்லவா… ?  இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது” என்கிறார் தத்து.  உடனே நரிமன், இந்த வழக்கில் மொத்த தேசத்துக்கும் ஆர்வம் இருக்கிறது என்றார்.   தத்து, அந்த ஆர்வத்தைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை என்றார். உடனே நரிமன், இந்த மேல் முறையீடு முடியும் வரை, வேண்டுமானால் ஜெயலலிதாவை வீட்டுச் சிறையில் வைத்திருக்க உத்தரவிடுங்கள் என்று கேட்கிறார்.     உடனே தத்து, நாங்கள் அது போன்ற அசாதாரணமான உத்தரவுகளையெல்லாம் பிறப்பிப்பதில்லை.   ஜாமீன் கொடுப்பதா இல்லையா என்பதை மட்டுமே முடிவு செய்வோம் என்கிறார்.
CHIEF_JUSTICE_2129859f
மேல் முறையீட்டு ஆவணங்களை தாக்கல் செய்ய எத்தனை நாட்களாகும் என்று கேட்கிறார் தத்து.    ஆறு வாரங்களுக்குள் தாக்கல் செய்கிறோம்.  பிப்ரவரி மாதத்தில் மேல் முறையீடு முடிந்து விடும் என்கிறார் நரிமன். உங்கள் வார்த்தையை அப்படியே எடுத்துக் கொள்கிறேன்.     பிரமாண வாக்குமூலம் எதுவும் தேவையில்லை என்கிறார் தத்து.    இந்த வழக்கில் புகார்தாரரான சுப்ரமணிய சுவாமி தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது.  எங்கும் வன்முறை நிகழ்ந்து கொண்டிருக்கிறது.   நீதிபதிகளைப் பற்றி அவதூறான கார்டூன்கள் வெளி வந்து கொண்டிருக்கினறன என்கிறார். மேலும் ஜெயலலிதா நினைத்தால், ஒரே நாளில் இதற்கு முற்றுப் புள்ளி வைக்க முடியும் என்கிறார். உடனே நரிமன் இந்த விஷயம் அனைத்தும் ஜெயலலிதாவுக்கு தெரியப்படுத்தப்படும்.   நிலைமை சீராவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்கிறார் நரிமன்.
இதற்குப் பிறகு, தலைமை நீதிபதி தத்து சுப்ரமணியன் சுவாமியிடம் சொல்லியதுதான் முக்கியத்துவம் வாய்ந்தது. தண்டிக்கப்பட்ட ஒருவர் வேறு ஒரு நாட்டுக்கு தப்பிச் செல்ல முயற்சித்தால்தான் அது அசாதாரண சூழல்.   என்ன செய்வது.   அவர் கட்சியினர் வன்முறையாளர்கள்.    அவர்தான் வன்முறைக்கு உத்தரவிட்டார் என்பதற்கான ஆதாரம் இருக்கிறதா ?” என்று கேட்கிறார் தத்து.
அந்த வன்முறைகள் ஜெயலலிதாவின் தூண்டுதலில்தான் நடக்கிறது என்பதற்கு ஏதாவது ஆதாரம் வேண்டுமா என்ன ?   மேலும், உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கிய பிறகு, ஜெயலலிதா வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்று ஒரு அறிக்கை வெளியிட்டதும் அமைதி திரும்பியதா இல்லையா ?
இவையெல்லாம் தத்துவுக்கு தெரியாதா ?இரண்டு மாதத்துக்குள் ஆவணங்கள் தயார் செய்யப்பட வேண்டும்.   அதற்கு மேல் ஒரு நாள் கூட அவகாரம் தரப்பட மாட்டாது என்று கூறி, ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார் தலைமை நீதிபதி தத்து.
மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட லாலு பிரசாத் யாதவுக்கு எத்தனை நாட்கள் கழித்து ஜாமீன் கிடைத்தது   தெரியுமா ?    ஒரு ஆண்டு.
முன்னாள் ஹரியாணா முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு எத்தனை நாட்கள் கழித்து ஜாமீன் வழங்கப்பட்டது தெரியுமா ?   இரண்டு மாதங்கள்.
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஒய்.எஸ்.ஆர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எத்தனை நாட்கள் கழித்து ஜாமீன் கிடைத்தது தெரியுமா ?  ஒரு ஆண்டு.
கணக்கு முறைகேட்டில் ஈடுபட்ட ராமலிங்க ராஜுவுக்கு எத்தனை நாட்கள் கழித்து ஜாமீன் கிடைத்தது தெரியுமா ?   இரண்டு வருடம் எட்டு மாதங்கள்.
கனிமக் கொள்ளையடித்ததற்காக கர்நாடக தொழில் அதிபர் காலி ஜனார்த்தன ரெட்டிக்கு எத்தனை நாட்கள் கழித்து ஜாமீன் கிடைத்தது தெரியுமா ?  மூன்று வருடம். எட்டு மாதங்கள்.
கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் ஆறு மாதங்களுக்கு மேல் சிறையில் இருந்தனர்.
இந்த வழக்குகளில் பெரும்பாலான வழக்குகள் விசாரணை வழக்குகள்.  சவுதாலா மற்றும் லாலு பிரசாத் வழக்கைத் தவிர மற்ற வழக்குகள் அனைத்தும் விசாரணை வழக்குகள்.  ஆனால் ஜெயலலிதாவின் வழக்கு எப்படிப்பட்டது ?
18 ஆண்டுகளாக, ஒரு வழக்கை எப்படியெல்லாம் இழுத்தடிக்க முடியுமோ, அப்படியெல்லாம் இழுத்தடித்து, சட்டத்தையும் நீதிமன்றத்தையும் கேலிக்கூத்தாக்கி, நீதிபதிகளை அவமானப்படுத்தி, 18 ஆண்டுகள் தாமதத்துக்குப் பின் தண்டனைக்குள்ளாகிய ஒருவருக்கு 21 நாட்களில் ஜாமீன் வழங்கியுள்ளார் தத்து.
அப்படி என்ன அவசரம் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்குவதில் ?   18 ஆண்டுகள் வழக்கை இழுத்தடித்த ஒரு குற்றவாளி இரண்டு மாதங்கள் சிறையில் இருந்தால் குடியா முழுகி விடும் ?    சரி ஜெயலலிதாவுக்குத்தான் உடல் நிலை சரியில்லை என்று ஏதாவது காரணத்தை சொல்லலாம்.    சசிகலா, இளவரசி, மற்றும் சுதாகரனுக்கு என்ன கேடு ?  எதற்காக அவர்களுக்கும் 21 நாட்களில் ஜாமீன் வழங்கினார் தலைமை நீதிபதி தத்து ?   இந்தக் கேள்விகள்தான் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் அனைவர் மத்தியிலும் விவாதிக்ப்பட்டது.
jaya-cry_650_092714075249
செப்டம்பர் 2014 அன்று உள்ளபடி, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை எத்தனை தெரியுமா ? 63,843.   இந்த வழக்குகளில் எல்லாம் காட்டாத அவசரத்தை தத்து ஜெயலலிதா வழக்கில் மட்டும் ஏன் காட்டினார் என்பதுதான் கேள்விக்குறிய விஷயம்.
ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட பிறகு, இது குறித்து பத்திரிக்கைகளில் பேசிய உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் துஷ்யந்த் தவே, இவ்வாறு கூறினார். இணைப்பு    “அரசுத் தரப்பு வாதம் என்ன என்பதை கேட்டறிந்த பிறகே, ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்குவது குறித்து உச்சநீதிமன்றம் முடிவு செய்திருக்க வேண்டும்.  அரசுத் தரப்புக்கு நோட்டீஸ் அனுப்பி அவர்களின் கருத்தை கேட்ட பிறகே இதில் முடிவெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.    அரசுத் தரப்பு ஜாமீன் மனுவை எதிர்க்கிறதா, சம்மதம் தெரிவிக்கிறதா என்பதை நீதிமன்றம் கேட்டறிந்திருக்க வேண்டும்.    முதலில் ஜாமீன் வழங்கியதும், பின்னர் அது நான்கு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டதும், அரசுத் தரப்பை கேட்காமலேயே நடந்தது.  உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களின் தலைவர் என்ற முறையில் இந்த நீதிமன்றம் எப்படி செயல்படுகிறது என்பதை கவனிக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது.     எந்த ஜாமீன் மனுவாக இருந்தாலும் அரசுத் தரப்பை கலந்தாலோசிக்காமல் முடிவெடுக்கக் கூடாது. மேலும் ஜெயலலிதாவின் வழக்கு மற்ற வழக்குகளையெல்லாம் விட விரைவாக விசாரணைக்கு வந்ததும் ஆட்சேபணைக்குரியது.  சில அதிகாரம் பொருந்திய அரசியல்வாதிகளுக்கும், பணம் படைத்தவர்களுக்கும் ஜாமீன் வழங்குவது என்பது, கவலையளிக்கக் கூடிய விவகாரம்.  இந்த வழக்கின் உள் விவகாரங்களுக்குள் நான் செல்ல விரும்பவில்லை.  ஆனால், அதிகாரம் படைத்தவர்களுக்கு விரைவாக ஜாமீன் கிடைப்பதும், ஏழை மக்களுக்கு அது நிராகரிக்கப்படுவதும், நாட்டுக்க தவறான செய்தியை தெரிவிக்கும்” என்றார்.  மேலும் அவர் “18 வருடங்களுக்கு முன்னர் இந்த வழக்கை விசாரணைக்கு உத்தரவிட்டதே உச்சநீதிமன்றம்தான்.  அந்த வழக்கு ஏதோ ஒரு காரணத்தைக் காண்பித்து தொடர்ந்து தாமதப்படுத்தப்பட்டு வந்தது என்பதை உச்சநீதிமன்றம் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும்.   இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக இருந்தவரும், நேர்மையான மனிதராக இருந்தவரை, ஜெயலலிதா தரப்பினர் மன உளைச்சலுக்கு ஆளாக்கி ராஜினாமா செய்ய வைத்தனர்.” என்று கூறினார் துஷ்யந்த் தவே.
மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே
மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே
ஒரு வழக்கறிஞருக்கு தெரிந்த இவ்வளவு விவகாரங்களும், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு தெரியாதா ?  மேலும் அவர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இருந்துதானே வந்தார் ?     நான்கு ஆண்டு சிறைத் தண்டனை பெற்றவரால் 21 நாட்கள் சிறையில் இருக்க முடியாது என்று கருதி ஜாமீனில் விடுதலை செய்த தலைமை நீதிபதி தத்துவுக்கு 10 ஆண்டுகள் மற்றும் ஆயுள் தண்டனைகள் பெற்று, இந்தியா முழுக்க சிறையில் எத்தனை லட்சம் பேர் இருக்கிறார்கள் என்பது தெரியாதா என்ன ?  பிறகு எதற்கு ஜெயலலிதா வழக்கில் இத்தனை அவசரம் ?    ஜெயலலிதா என்ன வானத்தில் இருந்து குதித்தா வந்து விட்டார் ?
வழக்கமாக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் வழக்குகள் ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்கப்பட்ட பிறகே தீர்ப்புகள் வழங்கப்படும்.  ஆனால், ஜெயலலிதாவின் வழக்கை நான்கே மாதத்தில் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்ற காலக்கெடு விதித்தார் தத்து.    இப்படி ஒரு ஊழல் பெருச்சாளியின் வழக்கை விரைவாக முடிக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறோமே என்று கொஞ்சமும் தத்துவுக்கு கூச்ச நாச்சமே இல்லை என்பதுதான் இதில் வேதனையான உண்மை.
டிசம்பர் மாதத்தில் தமிழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கியதில் பெரிய ஊழல் நடந்திருப்பதாகவும், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று நேரடியாக தத்து நீதிமன்றத்திலேயே முறையிட்டார்.
இதற்கு தத்து சொன்ன பதில் என்ன தெரியுமா ?   யாராவது ஒருவர் நான் 1000 கோடி ரூபாய் பெற்றுக் கொண்டு ஜாமீன் வழங்கினேன் என்று யாராவது ஒருவர் சொல்லுவார்.  கவலைப்படாதீர்கள்.  இது போன்ற குற்றச்சாட்டுகளையெல்லாம் எதிர்கொள்ளும் அளவுக்கு எனக்கு தடித்த தோல் இருக்கிறது” என்றார் தத்து இணைப்பு .   இப்படிப்பட்ட ஒரு கேவலமான நீதிபதியை எங்காவது பார்த்திருக்கிறீர்களா ?
ஜெயலலிதாவின் ஜாமீன் மனு கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கையிலேயே, அவருக்கு ஏற்றார்ப்போல ஒரு வசதியான நீதிபதியை நியமிக்குமாறு கர்நாடகா தலைமை நீதிபதிக்கு தத்து அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.  ஆனால் தலைமை நீதிபதி வகேலாவோ, அந்த அழுத்தங்களுக்கு அடிபணியாமல், நேர்மையான நீதிபதியிடம் அந்த வழக்கை ஒப்படைத்தார்.
ஜெயலலிதாவின் மேல் முறையீடு வழக்கை விசாரிக்கும் நீதிபதியையாவது ஒரு வசதியான நீதிபதியிடம் ஒப்படைக்குமாறு, தத்து தொடர்ந்து வகேலாவுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.    அப்போதும் வகேலா ஒத்து வராத காரணத்தால், அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் இருந்து நீதிபதி வினீத் சரணை, கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு மாற்றி, வகேலாவை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற தத்து திட்டமிட்டார்.  இந்த செய்தி, 31 டிசம்பர் 2014 அன்று, சவுக்கால் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டது.
part 1
மறுநாள் 1 ஜனவரி 2015 அன்று விடுமுறை நாளாக இருந்தாலும், ஜெயலலிதாவின் மேல் முறையீடு வழக்கை நீதிபதி குமாரசாமி அவர்கள் விசாரிப்பார் என்று அறிவிக்கை வெளியிட்டார் நீதிபதி வகேலா.  இப்படி அவசரமாக அறிவிக்கை வெளிவரும் என்பதை, ஜெயலலிதா தரப்போ, தத்துவோ சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை.   அவர்கள் எதிர்ப்பார்க்காத ஒரு நீதிபதியிடம் இந்த வழக்கு சென்றதால், இதை எப்படியாவது தடுக்க வேண்டுமென்று, நீதிபதி குமாரசாமியிடம் முதல் நாளே வழக்கை தள்ளி வைக்குமாறு தகராறு செய்தவர்.  ஆனால் குமாரசாமி, என்னால் வழக்கை ஒரு மணி நேரம் கூட தள்ளி வைக்க முடியாது என்று கறாராக இருந்து வழக்கை தொடர்ந்து நடத்தி முடித்தார்.
இந்த வழக்கு தொடங்கும் முன்னரே, கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எச்.வகேலாவை மாற்றுவதற்கான ஏற்பாடுகளில் இறங்கினார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்து.   அலகாபாத் நீதிமன்றத்தில் இருந்து வினீத் சரண் என்ற நீதிபதியை கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு மாற்றினால், அங்கே இரண்டாவது நீதிபதியாக இருக்கும் மஞ்சுநாத் என்பவர் பொறுப்பு தலைமை நீதிபதியாவார்.  அப்படி ஆனால், தத்துவின் கைப்பாவையான மஞ்சுநாத்தை வைத்து, தனக்கு வேண்டிய நீதிபதியை ஜெயலலிதாவின் வழக்கை விசாரிப்பதற்காக நியமிக்கலாம் என்று கனவு கண்டு கொண்டிருந்தார் தத்து.    ஆனால் ஜனவரி 1ம் தேதியன்றே, குமாராசாமியை ஜெயலலிதா வழக்கை விசாரிப்பதற்காக நியமித்தார் நீதிபதி வகேலா.     வினீத் சரண் கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட விரும்பவில்லை, மேலும், அந்த மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்த மாற்றத்தை எதிர்த்தனர் என்பதையும் மீறி, வினீத் சரணை கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு மாற்றினார் தத்து.   தத்துவின் இந்த சித்து விளையாட்டு குறித்து, டெல்லி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு, விரிவான செய்தி வெளியிட்டு இருந்தது இணைப்பு.
நீதிபதி பானுமதி
நீதிபதி பானுமதி
தமிழகத்தில் இருந்து உச்சநீதிமன்றம் சென்ற நீதிபதி பானுமதி ஜெயலலிதாவுக்கு நெருக்கம் என்பது உயர்நீதிமன்றத்தில் பெரும்பாலானோர் அறிந்த விஷயம்.      சென்னையில் நடந்த நீதிமன்றம் தொடர்பான ஒரு விழாவில், ஜெயலலிதாவை “மாண்புமிகு அம்மா” என்று அழைத்தார் பானுமதி.   சட்டீஸ்கர் மாநில தலைமை நீதிபதியாக மாறிச் செல்வதற்கு முன்னால், ஜெயலலிதாவை சந்தித்து அவரது ஆசியைப் பெற்ற பிறகே சென்றார் பானுமதி.     பானுமதி உச்சநீதிமன்றம் சென்றதற்கு பெரிதும் உதவியவர் தத்து.
தத்துவின் சித்து விளையாட்டின் ஒரு பகுதிதான் இன்று பவானி சிங் நியமனம் தொடர்பாக வந்துள்ள தீர்ப்பு.      நீதிபதி மதன் லோக்கூர் பவானி சிங் நியமனம் செல்லாது என்று கூறியுள்ள நிலையில், பவானி சிங்கின் நியமனம் சரியே என்று தீர்ப்பளித்துள்ளார் பானுமதி.  புதிதாக உச்சநீதிமன்றம் சென்ற நீதிபதிகள், பெரும்பாலும், மூத்த நீதிபதிகளின் கருத்தோடு ஒத்துப் போவார்கள். மிகவும் அறிதான வழக்குகளில் மட்டுமே, மாறுபட்ட கருத்தை தெரிவிப்பார்கள்.    ஆனால், பானுமதி, பவானி சிங் குறித்த வழக்கில் மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளதால், இந்த வழக்கு தற்போது மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட உள்ளது.
Bhawani-Singhஇது  போல மூன்று நபர்கள் அமர்வு நியமிக்கப்பட வேண்டிய வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நூற்றுக்கணக்கில் நிலுவையில் இருக்கின்றன.  ஆனால் ஜெயலலிதாவின் வழக்குக்கு மட்டும் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக மூன்று நீதிபதிகள் அமர்வை நியமித்து, இந்த வழக்கை தன் வசதிக்கு ஏற்றார்ப்போல நடத்தப் போகிறார் தத்து.     இந்த வழக்கின் விசாரணை முடிவதற்குள்ளாக கர்நாடக தலைமை நீதிபதி மாற்றப்பட்டு விடுவார்.
கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று அவசர அவசரமாக இரவு கர்நாடக தலைமை நீதிபதி டிஎச்.வகேலாவை மாற்றி உத்தரவிட்டுள்ளார் தலைமை நீதிபதி தத்து.   இணைப்பு      எத்தனையோ நீதிபதிகள் இருக்கையில் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியை மாற்றுவதில் மட்டும் தத்து ஏன் இவ்வளவு சிரமம் எடுக்கிறார் என்று வியப்பாக இருக்கும்.    இது குறித்து, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் மற்றும், திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கைகளே இதன் காரணத்தை தெளிவுபடுத்தும்.  இணைப்பு 1  இணைப்பு 2 .
ஒரு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை சாதாரணமாக அரசியல் கட்சித் தலைவர்கள் விமர்சிப்பது கிடையாது.  ஆனால், தத்துவைவும், அவர் நடவடிக்கைகளையும், தற்போது வெளிப்படையாக விமர்சிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.
தத்து, மோடியின் கடைக்கண் பார்வையை எப்படியாவது பெற்று விட வேண்டும் என்பதில் மிகவும் முனைப்பாக இருக்கிறார்.  சமீபத்தில் நடந்த நீதிபதிகள் மாநாட்டில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய தத்து, “மோடி ஒரு சிறந்த தலைவர், சிறந்த மனிதர் மற்றும் தொலைநோக்கு பார்வையுடையவர்” என்று நற்சான்றிதழ் அளித்திருக்கிறார். இணைப்பு
இதை மோடிக்கு அளித்த தனிப்பட்ட பாராட்டாக மட்டும் எடுத்துக் கொள்ள முடியாது.  இந்த நீதிபதிளின் மாநாட்டை, புனித வெள்ளி அன்று நடத்தியதை, கிறித்துவ மதத்தைச் சேர்ந்த நீதிபதிகள் வெளிப்படையாகவே எதிர்த்திருக்கின்றனர் இணைப்பு    இது போன்ற நிகழ்வுகள் ஏன் தீபாவளி அன்று நடத்துவதில்லை என்று நீதிபதி குரியன் ஜோசப் வெளிப்படையாகவே கேள்வி எழுப்பியிருந்தார்.  இது போன்ற அற்ப விஷயங்களில் தத்து ஈடுபடுவதே, மோடியை திருப்திப் படுத்துவதற்காகத்தான்.
கர்நாடக தலைமை நீதிபதி வகேலாவை ஒதிஷா நீதிமன்றத்துக்கு மாற்றுவது, ஜெயலலிதாவின் வழக்குக்காக மட்டும் அல்ல.     மோடியை திருப்திப் படுத்தவும்தான்.     வகேலா குஜராத் மாநில உயர்நீதிமன்றத்தில் பணியாற்றியபோது, குஜராத் கலவரங்கள் தொடர்பாக பல்வேறு தீர்ப்புகளை அரசுக்கு எதிராக அளித்துள்ளார். இதனாலும் மோடி வகேலாவை பழிவாங்க வேண்டும் என்று நினைப்பதில் வியப்பொன்றும் இல்லை.
நீதிபதி வகேலா மற்றும் மோடி
நீதிபதி வகேலா மற்றும் மோடி
குஜராத் கலவர வழக்குகளை முன்னின்று நடத்திய தீஸ்தா செத்தல்வாத் மற்றும் அவர் கணவர் மீது,  குஜராத் அரசு போட்ட வழக்கில் அவருக்கு, உச்சநீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது என்ற ஒரே காரணத்தை மனதில் வைத்துக் கொண்டுதான், நீதிபதிகள் மாநாட்டில், ஐந்து நட்சத்திர தன்னார்வலர்களைக் கண்டு நீதிபதிகள் அஞ்சக் கூடாது என்று பேசினார் மோடி.  அந்த அளவுக்கு அற்ப மனதுடையவர் மோடி.
ஆனால் மோடியின் உத்தரவின்படிதான், ஜெயலலிதாவை காப்பாற்ற தத்து முனைகிறார் என்பதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை.  ஜெயலலிதாவை காப்பாற்றுவதால் மோடிக்கு எந்த ஆதாயமும் இல்லை என்பதை விட, இழப்பே அதிகம் என்பதே உண்மை.
தத்து குறித்து வெளிப்படையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.  மனித உரிமைகள் பாதுகாப்பு நடுவம், 1000 வழக்கறிஞர்களின் கையெழுத்தை பெற்று, தத்து ஜெயலலிதா வழக்கை விசாரிக்கக் கூடாது என்று குடியரசுத் தலைவரிடம் மனுவே அளித்துள்ளது.  ஆனாலும் தத்துதான் ஜெயலலிதாவின் ஜாமீன் நீட்டிப்பு வழக்கை வரும் 17ம் தேதி விசாரிக்கப் போகிறார்.   அரசு நிர்வாகத்திலோ, அரசியலிலோ ஜெயலலிதா ஈடுபடக்கூடாது என்றுதான் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.  ஆனால் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படிதான் அரசாங்கமே நடக்கிறது என்று ஓ பன்னீர்செல்வம் சட்டப்பேரவையிலேயே அறிவிக்கிறார்.
ஜெயலலிதா வழக்கில் 18 ஆண்டுகள் கழித்து நடக்கும் அத்தனை குளறுபடிகளுக்கும் காரணம், தலைமை நீதிபதி தத்து மட்டுமே.  அவர்தான் இந்த வழக்கையும், சட்டத்தையும் கேலிக்கூத்தாக்கி, எப்படியாவது ஜெயலலிதாவை காப்பாற்ற வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கிறார்.
ஆனால், தலைமை நீதிபதி என்றும் பாராமல், அவருக்கு எதிராக எதிர்ப்பு எழுந்திருப்பது, ஒரு வரவேற்கத்தகுந்த நல்ல அம்சம்.  இந்த எதிர்ப்பு வழக்கறிஞர்கள் மத்தியிலும் எழுந்து, நீதிபதி தத்துவுக்கு எதிரான போராட்டமாக மாற வேண்டும்.   தத்து ஜெயலலிதா வழக்கை விசாரிக்கக்கூடாது.   அப்போதுதான் இவ்வழக்கில் நியாயம் கிடைக்கும்.
இப்போது தலைப்புக்கு வருவோம்.  “சாத்தானும் வேதம் ஓதட்டுமே” என்ற கதை ஜெயகாந்தனின் சிறுகதை.
மதுசூதனராவ் என்பவர் ஒரு மாவட்ட அதிகாரி.   அவர் ஆளுகையின் கீழ்தான் அந்த மாவட்டமே.   அவர் லஞ்சம் வாங்கும் பழக்கம் உள்ளவர்.  ஆனால் அவர் கீழ் பணியாற்றும் எவரையும் லஞ்சம் வாங்க அனுமதிக்க மாட்டார்.   மிகவும் கண்டிப்பானவர் இந்த விஷயத்தில்.  ஒரு நாள் மாலை அவர் மது அருந்திக் கொண்டிருக்கையில், ஒரு தொழில் அதிபர் வருவார்.  “சார் அந்த லைசென்ஸ் நீங்க கையெழுத்து போட்டா கிடைச்சிடும்.    உங்களுக்காகத்தான் காத்திருந்தேன்.   ஆபீஸ்ல எல்லோரும் கையெழுத்துப் போட்டுட்டாங்க.  ஆனா இந்த க்ளெர்க் ஜோசப் மட்டும் 100 ரூபாய் கொடுத்தாத்தான் கையெழுத்து போடுவேன்னு கடைசி வரை தகராறு பண்ணிட்டான் சார்.    உங்களுக்கு கீழே வேலை பாத்துக்கிட்டு ஒரு பய இப்படி பண்றான் பாருங்க சார்.    நானே அவன் பணம் கேட்ட விவகாரத்தை ஒரு புகாரா எழுதிக் கொடுத்துட்டேன் சார்” என்று சொல்லி விட்டு, ஒரு கவரில் 500 ரூபாயை  வைத்து விட்டு சென்று விடுவார்.
jeyakanthan
அவர் சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம் ஜோசப் என்ற அந்த க்ளெர்க் வருவான்.   மதுசூதனராவ் மனதுக்குள், “சார் தெரியாம பண்ணிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க என்று கேக்கறதுக்காக வந்திருப்பான்.   என்கிட்ட இதெல்லாம் நடக்குமா” என்று நினைத்துக் கொள்வார்.
அந்த ஜோசப் வந்து, சார் என்றதும் கடுமையாக அவனை திட்டுவார்.   உன் பர்சனல் பைலை நேத்துதான் பாத்தேன்.    இவ்வளவு நாள் ஒழுங்கா இருந்துட்டு இப்போ ஏன் உனக்கு இந்த லஞ்சம் வாங்கற புத்தி.  அப்படி எது உன்னை அந்த திமிரான காரியத்தை செய்ய வச்சது” என்பார்.
ஜோசப், “சார்… அது என் குழந்தை.  இன்று காலை செத்துப் போச்சு” என்பான்.  அதிர்ந்து போன மதுசூதனராவ், ஐ யம் சாரி” என்று தலையை குனிந்து கொள்வார்.   என்ன ஆச்சு என்று கேட்பார்.  ஜோசப், சார் குழந்தைக்கு திடீர்னு டிப்தீரியா.   கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனேன்.  விலையுயர்ந்த ஊசியம்.   வேற ஒரு கேஸுக்கு போட்டுட்டதால கைவசம் இல்லன்னு சொன்னாங்க.   வெளியில போயி வாங்க என்கிட்ட சல்லிக்காசு கூட இல்ல.  இப்போ எனக்கு எதிரா சாட்சி சொல்ற எல்லார்கிட்டயும் கேட்டேன்.   யாரும் குடுக்கல.   அப்பத்தான் பிடிவாதமா, என் வேலையே போகும்னு தெரிஞ்சும், அந்த 100 ரூபாயை வாங்கினேன்.   ஆனா, அந்த கருணையுள்ள ஆண்டவன், லஞ்சம் வாங்கின ஒருத்தனின் மகனா இருக்க வேண்டாம்னு” என்று கூறி அழுவான்.
மதுசூதனராவ் “ஏதோ ஒரு தேவையினாலே எவனோ ஒருத்தன் ஒரு தடவை லஞ்சம் வாங்கினாலும், ஊழல் மலிஞ்சு கிடக்கிறதுக்கு காரணம்… தேவையினால இல்லே, அது ஒரு பழக்கத்தினாலேதான் ” என்று கூறி விட்டு, தன் மேசையின் மீது இருந்த கவரை எடுத்து, அதிலிருந்து 100 ரூபாயை எடுத்து, “நீ லஞ்சம் வாங்கவில்லை.  கடன்தான் வாங்கினாய்.  அவனிடம் நாளைக்கு இதை திருப்பிக் கொடுத்து விடு. நீ போகலாம்” என்று கூறுவார்.
மறுநாள் ஜோசப்பின் அந்தரங்க கோப்பில், “இந்த இலாக்காவில் பணியாற்றுகிறவர்களிலேயே மிக உண்மையான ஊழியன்” என்று எழுதுவார்.
மதுசூதனராவ் தனக்குத் தானே “சாத்தானும் வேதம் ஓதட்டுமே” என்று சொல்லிக் கொள்வது, வேறொரு சாத்தான்கள் உருவாகக் கூடாது என்பதற்காகவே.
ஆனால், தத்து போன்ற சாத்தான்கள் உச்சநீதிமன்றதின் மகுடத்தில் அமர்ந்து கொண்டு ஓதும் வேதங்கள் ஒவ்வொன்றும், இந்த சமூகத்தின் நியாய உணர்வுக்கு அடிக்கப்படும் சாவுமணி. ஒரு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே எனக்கு தடித்த தோல், அதனால் குற்றச்சாட்டுகள் குறித்து கவலைப்பட மாட்டேன் என்று கூறும் ஒரு நீதிபதியிடம் என்ன நீதியை எதிர்ப்பார்க்கிறீர்கள் ?
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்.
 நடுவுநிலைமை தவறிச் செயல்படலாம் என்று ஒரு நினைப்பு ஒருவனுக்கு வந்து விடுமானால் அவன் கெட்டொழியப் போகிறான் என்று அவனுக்கே தெரியவேண்டும்.  savukkuonline.com

கருத்துகள் இல்லை: