செவ்வாய், 14 ஏப்ரல், 2015

சொத்துகுவிப்பு வழக்கை ஊத்தி மூட வசதியாக கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி வகேலா இடமாற்றம்! பரிந்துரைத்தவர் ஜெயாவுக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதி தத்து!

உச்சக் கட்ட ஊழலுக்கெல்லாம் முழு முதற்காரணம் யார்?
எதற்காக இந்த மாறுதல்? :
கலைஞர் ;13-4-2015 தேதிய “டெக்கான் கிரானிகல்” நாளிதழில் ஒரு செய்தி! “டெக்கான் கிரானிகல்” இதழுக்கு சில உயர் மட்டத்திலிருந்து கிடைத்த தகவல்படி - உச்ச நீதி மன்றத் தலைமை நீதிபதி எச்.எல். தத்து அவர்களின் தலைமையிலான நீதிபதிகள் குழு, நீதிபதி வகேலாவின் மாறுதலுக்குப் பரிந்துரை செய்தபோது, நீதிபதி வகேலா - ஒரிசா உயர் நீதி மன்றம், கர்நாடக உயர் நீதி மன்றத்தை விட சிறிய நீதி மன்றம் என்பதால், அதனை ஏற்றுக்கொள்வதில் தனக்குள்ள அதிருப்தியை வெளிப்படுத் தியிருக்கிறார்)டெக்கான் கிரானிகல்” - தினகரன் - தி இந்து (தமிழ்) போன்ற ஒரு சில நாளிதழ்களில் மட்டுமே பெங்களூர் உயர் நீதி மன்றத் தலைமை நீதிபதியின் மாறுதல் பற்றி செய்தி வந்துள்ளது. “தினகரன்” நாளிதழ் இவரது மாறுதல் பற்றி குறிப்பிடும்போது, “கர்நாடக உயர் நீதி மன்றத் தலைமை நீதிபதியாக வகேலா கடந்த 2013 மார்ச் 7ஆம் தேதி பொறுப்பேற்றார். ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் தனி நீதி மன்றத்தில் நடந்து கொண்டிருந்த போது, அதை விசாரணை நடத்திய நீதிபதி குன்ஹாவுக்கு பக்க பலமாக இருந்து வழக்கை முடிவுக்குக் கொண்டு வர உதவினார். கடந்த மார்ச் இரண்டாவது வாரத்தில் இவரை ஒரிசா மாநில தலைமை நீதிபதியாக பணி இட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது.அவருக்குப் பதிலாக தலைமை நீதிபதியாக கே.எல். மஞ்சுநாத் நியமனம் செய்யப்பட்டார். இடையில் ஒரு வாரத்திற்குப் பின், மீண்டும் தலைமை நீதிபதி பணியை வகேலா தொடர்ந்து வருகிறார். தற்போது மீண்டும் ஒரிசா மாநிலத்தலைமை நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வகேலா மாற்றத்தின் பின்னால் பலமான அரசியல் தலையீடு இருக்கும் வாய்ப்பு உள்ளதாக வக்கீல்கள் இடையே சந்தேகம் எழுந்துள்ளது” என்றெல்லாம் எழுதப் பட்டுள்ளது.

கர்நாடக உயர் நீதி மன்றத் தலைமை நீதிபதி தற்போது ஒரிசா உயர் நீதி மன்றத்தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டிருந்த போதிலும், நமது “முரசொலி” நாளிதழில் 29-12-2014 அன்று ஒரு பெட்டிச் செய்தி வெளி வந்தது. அதில்,“நீதி மன்ற வட்டாரங்களில் பேசப்படும் இந்தச் செய்திகள் உண்மையா?

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் மேல் முறையீட்டு விசாரணை தொடர்பாக, கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி, நேர்மையோடு நடந்து கொள்வதால், அவரிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு,விரைவில் மாற்றப்படவிருப்பது உண்மையா? 

கர்நாடக உயர் நீதி மன்றத் தலைமை நீதிபதி வகேலாவை மாற்றி விட்டு, அவருக்கு அடுத்த இடத்திலே உள்ள நீதிபதி மஞ்சுநாத் அவர்களை கூடுதல் பொறுப்பில் நியமிக்கவிருப்பது உண்மையா?

மத்திய அரசின் சார்பாக ஒருவர் இதற்கானமுயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறதே, அது உண்மையா?  நீதி மன்ற வட்டாரங்களில் பேசப்படுவதாக வந்த அந்தச் செய்தியை மெய்ப்பிக்கும் வகையில் அல்லவா தற்போது கர்நாடக உயர் நீதி மன்றத் தலைமை நீதிபதி மாற்றப் பட்டிருக்கிறார்.

கர்நாடக உயர் நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி வகேலா அவர்கள் திடீரென்று, வேறொரு சிறிய உயர் நீதி மன்றத் தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டதற்கும் நமக்கும் என்ன சம்பந்தம் என்பதைத் தெரிந்து கொள்வதற்கு முன்பு, வகேலா பற்றிய சில விவரங்களை உனக்கு நான் தெரிவிக்கிறேன்.

2-2-2015 அன்று கர்நாடக உயர் நீதி மன்றத்தில், பவானிசிங் இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக நீடிக்கலாமா என்ற விசாரணை வந்த போது, தலைமை நீதிபதி வகேலா அவர்களே, “சி.ஆர்.பி.சி. 24(1)ன்படி, கிரிமினல் வழக்கு ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கு மாற்றம் செய்யும்போது எந்த மாநிலத்துக்கு மாற்றப்படுகிறதோ, அந்த மாநில அரசு தான் அரசு வழக்கறிஞரை நியமிக்க வேண்டுமென்று கூறப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் தலைமை நீதிபதி வகேலா அவர்கள், “இந்த மேல்முறையீட்டு மனுவில் நீங்கள் (பவானி சிங்) ஆஜராகியிருப்பது சட்டத்துக்குப் புறம்பானது, 24 (1)ஐப் படித்துப் பாருங்கள். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞரை நியமிக்கத் தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை; கர்நாடக அரசு இந்த வழக்கில் அரசு வழக்கறிஞரை நியமிக்காத போது, பவானி சிங் ஆஜராகியிருப்பது சட்டத்துக்குப் புறம்பானது” என்றெல்லாம் வகேலா உறுதிபடக் கருத்து தெரிவித்திருக்கிறார்.

தலைமை நீதிபதி இவ்வாறு பவானி சிங் அரசு வழக்கறிஞராக நீடிப்பதற்குச்சட்டப்படியான எதிர்க் கருத்துகளைத் தெரிவித்ததால், பவானி சிங்குக்காக ஆஜரான வழக்கறிஞர் செபாஸ்டியன் எழுந்து, இந்த வழக்கினைத் தலைமை நீதிபதி வகேலா விசாரிக்கக் கூடாது என்றும், வேறு அமர்வுக்கு மாற்ற வேண்டுமென்றும் கோரிய தால், வழக்கினை வேறு அமர்வு விசாரிக்கட்டும் என்று தலைமை நீதிபதி வகேலா தானாக முன் வந்து கூறினார்.

இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமேயானால் வழக்கு விசாரணையின் தொடக்கத் திலேயே, தலைமை நீதிபதி வகேலா அவர்களே, தான் இந்த வழக்கை விசாரிப்பதில் ஆட்சேபணை ஏதும் உண்டா என்று பவானி சிங்கின் வழக்கறிஞர் செபாஸ்டியனிடம் கேட்டு, அவர் எந்த ஆட்சேபணையும் இல்லை என்று கூறியதைத் தொடர்ந்து தான் வழக்கினை விசாரித்தார் என்பது குறிப்பிடத் தக்கது. அப்போது ஆட்சேபணை இல்லை என்று தெரிவித்து விட்டு, தலைமை நீதிபதி வகேலா அவர்கள் விசாரணையின் போது விதிமுறைகளையொட்டிச் சில கருத்துகளைத் தெரிவித்த பிறகு, அவர் அந்த வழக்கினை விசாரிப்பதற்கு செபாஸ்டியன் ஆட்சேபணையைத் தெரிவித்தார். இந்தக் குறிப்புகள் எல்லாம் கர்நாடக மாநில உயர் நீதி மன்றத்தலைமை நீதிபதி வகேலா யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான்!

இவை மாத்திரமல்ல; செல்வி ஜெயலலிதா தரப்பினர் மீது பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நடைபெற்ற சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையின்போது, பவானிசிங்குக்கு முன்பாக, அந்தப் பதவியில், அரசுத் தரப்பு வழக்கறிஞராகப் பணியாற்றிய பி.வி. ஆச்சார்யா தனது வாழ்க்கைப் பயணத்தை “அனைத்தும் நினைவுகளிலிருந்து என்ற தலைப்பில், ஆங்கிலத்தில் நூல் ஒன்றை எழுதி இருக்கிறார். 

 அந்த ஆங்கில நுhலின், இருபத்தைந்தாவது அத்தியாயத்தின் தலைப்பே,ன்பதுதான்! அதில் 206ஆம் பக்கம் முதல் 220ஆம் பக்கம் வரை, ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக தான் இருந்த போது எப்படிப்பட்ட அனுபவம் தனக்கு ஏற்பட்டது, என்னென்ன தவறுகள், முறைகேடுகள் அந்த விசாரணையில் நடைபெற்றன என்பதையெல்லாம் எழுதியிருக்கிறார். இந்தப்புத்தகத்தை வெளியிட்டவர் யார் தெரியுமா? இந்த நூலை பெங்களூரில் 15-11-2014 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி திரு. வகேலா தான் வெளியிட்டிருக்கிறார். நீதிபதி திரு. வேணுகோபால் அவர்களும்,மத்திய அரசின் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் திரு. வீரப்ப மொய்லி அவர்களும் நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்தப் பின்னணியையும் இந்தத் தருணத்தில் நினைவுபடுத்திக் கொள்வது பொருத்தமானது அல்லவா?

வகேலா அவர்கள் மாற்றப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் ஒருசில நாட்களுக்கு முன்பு ஜெயலலிதாவுக்கு உச்ச நீதி மன்றம் ஜாமீன் வழங்கியது குறித்து, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது :-  “சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு நான்காண்டுகள் சிறைதண்டனை பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சட்டத்தின் மரபுகளுக்கு முரணாகச் செயல்பட்டு, தலைமை நீதிபதி தத்து ஜாமீன் வழங்கியிருக்கிறார்.

சாதாரண வழக்கு என்றாலுங்கூட, குற்றவாளிக்கு ஜாமீன் வழங்குவதற்கு முன் எதிர் தரப்பினரிடம் விளக்கம் கேட்கப்படும். ஆனால் இந்த வழக்கில் எதிர்தரப்பான கர்நாடக அரசையும், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையையும் விசாரிக்காமலேயே ஒரு தலைப்பட்சமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஊழல் குற்றவாளிகள் தொடர்பா ஊழல் குற்றவாளிகள் தொடர்பான மேல் முறையீட்டு வழக்குகளில் ஜாமீன் வழங்கும்போது அதற்கான காரணங்களைத்தெளிவாகக் கூற வேண்டுமென ஏற்கனவே உச்ச நீதி மன்றமே தீர்ப்பளித்திருக்கிறது. இதற்கு மாறாக, கர்நாடக உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்வதற்கான 

காரணம் எதையுமே கூறாமல் நான்கே வரிகளில் தலைமை நீதிபதி தத்து ஜாமீன் உத்தரவை வழங்கியுள்ளார். இவ்வளவு ஏன்? ஜெயலலிதா உட்பட நான்குகுற்றவாளிகளுக்கு ஜாமீன் மறுப்பதற் கான காரணங்களை கர்நாடக உயர் நீதி மன்றமே நாற்பது பக்க உத்தரவில் தெளிவாகக் கூறியுள்ளது. இவற்றிற்கெல்லாம் மேலாக ஜெயலலிதா உட்பட நான்கு பேரும் ஜாமீன் கேட்டு மட்டுமே மனு செய்த வழக்கில் (குற்றவாளிகள் கோரிக்கை எதுவும் வைக்காத நிலையிலேயே) மேல் முறையீட்டு மனுவையும் விரைந்து முடிக்க வேண்டுமென்று தலைமை நீதிபதி தத்து
உத்தரவிட்டுள்ளார். 

கர்நாடக உயர் நீதி மன்றத்தில் நுhற்றுக்கணக்கான வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது, ஜெயலலிதாவுக்கு தலைமை நீதிபதி தத்து வழங்கியிருக்கும் இந்தச் “சூப்பர்” சிறப்புச் சலுகை முறை கேடானது. ஒரு ஊழல் குற்றவாளி தொடர்பான வழக்கிலேயே இப்படியொரு முறைகேடான தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது மக்களுக்கு விடப்பட்டிருக்கும் அபாய எச்சரிக்கையாகும்” என்றெல்லாம் கூறியதோடு, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய அமைப்பைச்சேர்ந்தவர்கள் ஆயிரம் வழக்கறிஞர் களின் கையெழுத்துக்களுடன் குடியரசுத் தலைவரிடம் உச்ச நீதி மன்றத் தலைமை நீதிபதி தத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரியிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.

ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜாமீன் கோரிக்கை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதற்கு முன்பே சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி,பாலி நாரிமனின் மகன் உச்ச நீதி மன்ற நீதிபதியாக இருப்பதால், பாலி நாரிமன் ஜெயலலிதா சார்பில் உச்ச நீதி மன்றத்தில் ஆஜராவது பார் கவுன்சில் விதித்துள்ள நெறிகளுக்கு எதிரானது என்று புகார் அளித்துள்ளார். “இந்த வழக்கு தொடர்பாக உங்கள் மீது ஊழல் புகார் இருப்பதால், விசாரிப்பதிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ள வேண்டும்” என்று டிராபிக் ராமசாமி தலைமை நீதிபதி தத்துவுக்கே மனு அளித்துள்ளார் என்பதும் நினைவிலே கொள்ளத் தக்கது. கர்நாடக உயர் நீதி மன்றத் தலைமை நீதிபதி வகேலா அவர்கள் ஒரிசா உயர் நீதி மன்றத் தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். உச்ச நீதி மன்றத் தலைமை 

நீதிபதி எச். எல். தத்து அவர்கள் தலைமையிலான நீதிபதிகள் அடங்கிய காலேஜியம் இந்த உத்தரவை 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு பிறப்பித்துள்ளது. நமது மதிப்பு மிக்க நீதித் துறை நிலுவையில் உள்ள வழக்குகளைத் தீர்ப்பதில் விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்பது அனைவரும் எதிர்பார்க்கும் ஒன்று. ஆனால் “மாறுதல்கள்” போடுவதில் இவ்வளவு விரைந்து செயல்படுவது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. இந்த நாட்டின் மீது அக்கறை கொண்ட குடிமகன் என்ற முறையில் சட்டம் மற்றும் நீதியின் பாதுகாவலர்களிடமிருந்து சில நியாயமான கேள்விகளுக்கு பதில் கோர விரும்புகிறேன்.

ஒரிசா உயர் நீதி மன்றத் தலைமை நீதிபதிப் பதவி கடந்த பிப்ரவரி மாதம் 2015லிருந்து காலியாக இருக்கும்போது, திடீரென்று ஏன் ஞாயிற்றுக் கிழமை அன்று இந்த “டிரான்ஸ்பர்” போடப்பட்டது? தேசிய நீதித் துறை நியமனக் கமிஷனுக்கான அறிவிக்கை திங்கள்கிழமை அன்று வெளியிடப்படவுள்ள நிலையில், அதற்கு முதல் நாள் இந்த மாறுதலைச் செய்ய வேண்டிய காரணம் என்ன?

நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வர உருவாக்கப்பட்ட “தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை” எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு முன்பு 15-4- 2015 அன்று விசாரணைக்கு வருவதற்குள் ஏன் இந்த மாற்றல் உத்தரவு போடப்பட்டது?

கர்நாடக உயர் நீதி மன்றத்தில் உள்ள சொத்துக் குவிப்பு வழக்கில் வாதாடிய அரசு சிறப்பு வழக்கறிஞர் நியமனம் செல்லாது என்று தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு வெளியாவதற்கு முன்பும், அதே சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பு வெளி வருவதற்கு முன்பும் இப்படியொரு மாறுதல் செய்யப்பட்டுள்ளதை நாம் இந்த நேரத்தில் மறந்து விட முடியாது. எனவே இந்த மாறுதல் பற்றி யாருக்காவது சந்தேகம் எழுந்தால் அதிலே தவறு இருக்க முடியுமா?

உச்ச நீதி மன்றத்தில் 15ஆம் தேதியன்று அளிக்கப்படும் தீர்ப்பில் பவானி சிங் நியமனம் தவறானது தான் என்று ஒருவேளை சொல்லப்படுமேயானால், சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டினை விசாரிப்பதற்கு புதிய நீதிபதி ஒருவரை கர்நாடக உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி தான் நியமிக்க வேண்டும். மேலும் அரசு புதிய வழக்கறிஞராக பவானி சிங் அவர்களுக்குப் பதிலாக வேறு ஒருவரை நியமனம் செய்ய வேண்டிய பொறுப்பும், கர்நாடக உயர் நீதி மன்றத் தலைமை நீதிபதிக்குத் தான் உண்டு. மேலும் தற்போது ஜெயலலிதாவின் மேல் முறையீட்டினை விசாரித்து வரும் நீதிபதி குமாரசாமி அவர்கள் வரும் ஆகஸ்ட் திங்களில் ஓய்வு பெறவிருப்பதால், அவருக்குப் பதிலாக இந்த முக்கியமான வழக்கினை விசாரிக்க வேண்டிய நீதிபதியையும் நியமிக்க வேண்டிய பொறுப்பும் கர்நாடக உயர் நீதி மன்றத் தலைமை நீதிபதிக்கே உண்டு. இந்தநிலையில் தான் அவர் மாற்றப்பட்டுள்ளார்.

இந்த உச்சக் கட்ட ஊழலுக்கெல்லாம் முழு முதற்காரணம் யார்? எதற்காக இந்த மாறுதல்? இதையெல்லாம் உன்னுடைய யூகத்திற்கே விட்டு விடுகிறேன். நீதித் துறையின் சுதந்திரம், நேர்மை, நடுநிலை - ஆகியவற்றின் மீது மிக உயர்ந்த மதிப்பு வைத்திருக்கிறோம். நாடு முழுவதும் ஒளிவு மறைவில்லாத வெளிப்படையான நிர்வாகத்திற்கான கோரிக்கை வலுப்பெற்று வரும் இந்தக் காலகட்டத்தில், அரசின் முடிவுகள் அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வரும் வேளையில், நீதித் துறையின் நிர்வாக முடிவுகள் மட்டும் வேறு ஒரு தளத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்படாமல் ஏன் இருக்க வேண்டும் என்று சில மூத்த வழக்கறிஞர்களும், நடுநிலையாளர்களும், பத்திரிகையாளர்களும் நம்மிடம் கேட்கும் போது நாம்என்ன பதில் கூறுவது?

நமது ஜனநாயக நாட்டில் அனைத்துக்கும் மேலானது நீதித் துறை தான்;ஜனநாயகத்தின் அனைத்து அங்கங்களையும் கண்காணிப்பதே நீதித் துறை தான். அப்படிப்பட்ட உயிர்நாடியான அந்தத் துறையின் மீதே, இதுவரையில் இல்லாத அளவுக்கு, இப்படி யெல்லாம் விமர்சனங்கள் வருவது நம் நாட்டுக்கும், நாம் போற்றிப் பாதுகாத்து வரும் ஜனநாயகத்திற்கும், வாய்மையே வெல்லும் - (சத்தியமேவ ஜயதே) என்று நாம் கொண்டாடி வரும் கோட்பாட்டுக்கும் உகந்தது தானா?’’  நக்கீரன்.in

கருத்துகள் இல்லை: