புதன், 18 மார்ச், 2015

ட்ராபிக் ராமசாமி:அம்மா பேனரில் கைவைப்பியான்னு கேட்டு அடித்தார்கள் ! ஜெயாவுக்கு நாலு ஆண்டுகள் போதாது!

சென்னை: வீட்டை விட்டு வெளியே வர முடியாத குற்றவாளிக்கு எதற்கு பேனர்? என்று டிராஃபிக் ராமசாமி கொதிப்புடன் கேள்வி எழுப்பி உள்ளார். கடந்த வாரம் டிராஃபிக் ராமசாமி, சாலையில் நின்று தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தபோது, அவ்வழியாக வந்த ஒருவருடன் தகராறில் ஈடுபட்டதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸார் அதிகாலையிலேயே வீட்டிற்குள் புகுந்து டிராஃபிக் ராமசாமியை கைது செய்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இந்த பிரச்னை தொடர்பாக டிராஃபிக் ராமசாமி, விகடனுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், "இந்த கைது நடவடிக்கை என்பது ஆளுங்கட்சியின் சதி என்று தான் நான் கூற முடியும். இது பொய் வழக்கு. காலை 7.45 மணிக்கு எனது அலுவலகத்தில் இருந்து கீழ்ப்பாக்கம் போகும்போது தி.மு.க. பேனரை பார்க்கிறேன். உடனடியாக மாநகராட்சிக்கும், காவல்துறைக்கும் அதுபற்றி புகார் தெரிவிக்கிறேன். இதுமாதிரி, ரோட்டை பிளாக் செய்து 50 முதல் 70 அடி தூரத்திற்கு பேனர் இருக்கிறது, அதை எடுத்துவிடுங்கள். நான் திரும்பி வரும்போது அந்த பேனர் இருந்தால் அதை கிழிப்பேன் என்று கூறினேன்.


மீண்டும் என் வேலையை முடித்துவிட்டு திரும்பி 8.30 மணிக்கு வரும்போது, எனது வண்டியை நிறுத்திவிட்டு காவல்துறைக்கும், மாநகராட்சிக்கும் மீண்டும் புகார் தெரிவித்தேன். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேனரை அகற்றாமல் வேடிக்கை பார்த்தனர். பின்னர் தி.மு.க.காரர்களை வைத்தே அந்த பேனர்களை அவிழ்த்துவிட்டனர்.

பேனருக்கு வைக்கப்பட்டிருந்த கட்டைகளை மாநகராட்சியினர் அவிழ்த்து கொண்டிருந்தனர். அதை நான் போட்டோ எடுத்து கொண்டிருந்தபோது மீடியாக்கள் வந்துவிட்டு என்னிடம் பேட்டி எடுத்தனர். நான் ரோட்டோரத்தில் எனது காரை நிறுத்திவிட்டு பேட்டி கொடுத்துவிட்டு உயர் நீதிமன்றத்திற்கு சென்று கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் யாரோ 2 பேர் அப்போது அடையாளம் தெரியாது, அவர்கள் வந்து கெட்ட வார்த்தைகளில் திட்டி ''அம்மா பேனரில் இனி கை வைப்பியா?" என்று கூறி என் கன்னத்தில் பளார் என்று அடித்தனர். தி.மு.க. பேனரை அவிழ்த்தாலும், ஆளுங்கட்சி தட்டிக் கேட்கும் என்பது போன்ற பாவனை இது. நடந்தது இதுதான். அதன் பின்னர் வீரமணியை தாக்கியதாக பொய் வழக்கு போட்டு விட்டனர்" என்றார்.
தொடர்ந்து அவரே, ''4 மாதம் பொறுக்க முடியல, வீட்டை விட்டு வெளியே வர முடியாத குற்றவாளி உனக்கு எதுக்கு பேனர்'' என்றார் காட்டமாக. vikatan.com

கருத்துகள் இல்லை: