சனி, 21 மார்ச், 2015

மோடியின் யாழ்ப்பாணம் பயணத்துக்கு சீனா எதிர்ப்பு


பிரதமர் மோடியின் யாழ்ப்பாணம் பயணத்துக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த பயணம், இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதாகும் என அது கருத்து தெரிவித்துள்ளது. மோடியின் யாழ்ப்பாணம் பயணம்/> பிரதமர் நரேந்திர மோடி கடந்த 13, 14 தேதிகளில் நமது அண்டை நாடான இலங்கையில் சுற்றுப்பயணம் செய்தார். இந்த பயணத்தின்போது 14-ந் தேதி, உள்நாட்டு போரில் பெரிதும் பாதிப்புக்குள்ளானதும், தமிழர்கள் பெருவாரியாக வாழக்கூடியதுமான யாழ்ப்பாணத்துக்கு அவர் சென்றார். அவருடன் அந்த நாட்டின் அதிபர் சிறிசேனாவும் சென்றிருந்தார்.அங்கு உலகப்பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நூலக வளாகத்தில் ரூ.60 கோடியில் கட்டப்படும் கலாசார மையத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அத்துடன் மத்திய அரசின் உதவியுடன் யாழ்ப்பாணம் இலவளை பகுதியில், தமிழர்களுக்காக கட்டப்பட்ட 27 ஆயிரம் வீடுகளை அவர் பயனாளிகளிடம் ஒப்படைத்தார். மோடியின் இந்த பயணம் குறித்த செய்திகளை சர்வதேச அளவில் ஊடகங்கள் முக்கியத்துவம் அளித்து வெளியிட்டன.


சீனாவுக்கு எரிச்சல்

மோடியின் யாழ்ப்பாணம் பயணம் சீனாவுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஷாங்காய் சர்வதேச படிப்பு மையத்தின் உதவி ஆராய்ச்சியாளர் லியு ஜாங்யி ஒரு கட்டுரை எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

மோடியின் இலங்கை பயணம், சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஊடகங்களின் கவனத்தை கவர்ந்தது. சீன முதலீட்டில் உருவாகவிருந்த திட்டத்தை இலங்கை நிறுத்தியுள்ள நிலையில், இந்த பயணத்தில் இந்தியாவின் கை ஓங்கியது.

உள்நாட்டு விவகாரத்தில் தலையீடு

மோடி தனது இலங்கை பயணத்தில், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழுகிற வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம் இடம்பெறுமாறு பார்த்துக்கொண்டார். இது இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதாகும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார். இந்த கட்டுரையை சீன அரசின் ‘குளோபல் டைம்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது.

சீன திட்டங்கள் நிறுத்தம்

இலங்கையில், கொழும்பு துறைமுக நகர் திட்டம் உள்ளிட்ட 5 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.31 ஆயிரம் கோடி) மதிப்பிலான திட்டங்களை நிறைவேற்ற முந்தைய ராஜபக்சே ஆட்சி காலத்தில் சீனாவுடன் ஒப்பந்தம் போடப்பட்டது. இப்போது சிறிசேனா அரசு அதை மறுபரிசீலனை செய்கிறது.

இதையும் சீன கட்டுரையாளர், தனது கட்டுரையில் குறிப்பிட தவறவில்லை. இது குறித்து அவர் குறிப்பிடுகையில், “ஒவ்வொரு சிறிய நாடும்கூட, மாறுபட்ட பல்வேறு நாடுகளுடன் சமநிலையை கடைப்பிடிக்க விரும்புகின்றன. அவற்றில் சில, தங்கள் தேச நலனுக்கு, உலக நாடுகளின் போட்டியை சாதகமாக எடுத்துக்கொள்ள முயற்சிக்கவும் செய்கின்றன” என கூறியுள்ளார்.

அதே நேரத்தில் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே உள்ள வரலாற்றுப்பூர்வமான தமிழர் பிரச்சினைகள், மீனவர்கள் பிரச்சினைகள் நல்லுறவு மலர்வதில் கடினமான நிலையை ஏற்படுத்தக்கூடியவை என்றும் சுட்டிக்காட்டி உள்ளார்.

அத்துடன், சில குறிப்பிட்ட சக்திகளை கவர்வதற்காக சீனாவின் நல்லெண்ணத்தை இலங்கை அரசு உதாசீனப்படுத்தினால், அது சர்வ தேச சமுதாயத்தில் மதிப்பை பெறுவது கடினம் எனவும் குறிப்பிட்டுள்ளார் dailythanthi.com

கருத்துகள் இல்லை: