ஞாயிறு, 15 மார்ச், 2015

யாழ்பாணம் சென்ற முதல் இந்திய பிரதமர் மோடி! இந்தியா கட்டிக் கொடுத்த 27 ஆயிரம் வீடுகளை தமிழர்களுக்கு வழங்கினார்!மேலும் 45 ஆயிரம் வீடுகள்,...



யாழ்ப்பாணம் 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் இலங்கை சென்றார்.
2–வது நாள் சுற்றுப்பயணம் அன்று கொழும்பு நகரில் அந்த நாட்டின் அதிபர் சிறிசேனாவை சந்தித்து போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் மறுவாழ்வு, மீனவர்கள் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார். அப்போது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. பின்னர் இலங்கை பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார்.
2–வது நாளான நேற்று காலை புத்த மத புனித நகரமான அனுராதபுரத்துக்கு சென்றார். அதன் பின்னர் தலைமன்னார் சென்று ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.
யாழ்ப்பாணம் சென்ற மோடி அந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி நேற்று மதியம் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம், வடக்கு மாகாண தலைநகரான யாழ்ப்பாணத்துக்கு சென்றார். அவருடன் இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கேயும் சென்றார்.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் இந்த யாழ்ப்பாணம் நகரம், விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் பெரிதும் பாதிக்கப்பட்டு சீர்குலைந்தது. போருக்கு பின்னர் யாழ்ப்பாணம் சீரமைக்கப்பட்டு வருகிறது.
இலங்கையின் வடக்கு மாகாணத்துக்கு இந்திய பிரதமர் ஒருவர் செல்வது இதுவே முதல் முறை ஆகும்.
சிறப்பான வரவேற்பு யாழ்ப்பாணம் சென்ற பிரதமர் மோடிக்கு, தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏராளமான ஆண்களும் பெண்களும் திரண்டு வந்து அவரை வரவேற்றனர்.
உள்நாட்டு போரின் போது தீவைத்து எரிக்கப்பட்ட புகழ் பெற்ற யாழ்ப்பாணம் நூலகம் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. அங்கு இந்தியாவின் உதவியுடன் ரூ.60 கோடி செலவில் புதிதாக கலாசார மையம் கட்டிடம் கட்டப்படுகிறது. அதற்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி நாட்டினார்.
விக்னேஸ்வரன் விழாவில் வடக்கு மாகாண முதல்–மந்திரி விக்னேஸ்வரன் வரவேற்று பேசினார். அப்போது அவர், 13–வது அரசியல் சட்ட திருத்தம் பயனற்றது என்றும், தமிழர்களுக்கு அரசியல் உரிமைகள் கிடைக்க இந்தியா உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
விழாவில் பிரதமர் மோடி பேசுகையில் கூறியதாவது:–
மகிழ்ச்சி யாழ்ப்பாணம் வந்து உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நகருக்கு வந்த போது எனக்கு வித்தியாசமான உணர்வு ஏற்பட்டது. யாழ்ப்பாணம் புதிய அடையாளத்தை காட்டுகிறது.
இந்தியாவும் இலங்கையும் கலாசார ரீதியில் ஒன்றுபட்டு உள்ளன. யாழ்ப்பாண கலாசார மையத்துக்கான நிர்மாண பணிகளை தொடங்கி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த கலாசார மையம் புராதன நுட்பம் வாய்ந்த கலாசார விஷயங்களை அடையாளப்படுத்தப் போகிறது. உலக தரம் வாய்ந்த கலாசார மையத்தை கட்டிக்கொடுக்கும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்தது குறித்து பெருமைப்படுகிறேன். எடுத்துக் கொண்ட பணிகளை எதிர்பார்ப்புகளையும் தாண்டி சிறப்பாக செய்து முடிப்போம். புத்தகங்கள் நிறைந்துள்ள நூலகம் அனைவரையும் ஒன்றிணைக்கும் இடம் ஆகும்.
ஒற்றுமை யாழ்ப்பாணம் பல்வேறு ஏற்ற இறக்கங்களை கண்டு உள்ளது. இங்குள்ள மக்கள் பல்வேறு துயரங்களை சந்தித்து இருக்கிறார்கள்.
இந்தியாவும் இலங்கையும் அண்டை நாடுகள் மட்டும் அல்ல. இரு நாடுகளுக்கும் வரலாற்று ரீதியிலான உறவுகள் உள்ளன. அமைதியும் ஒன்றுமையும் நிலவி இலங்கை முன்னேற்றம் காண அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அனைத்து தரப்பு மக்களும் உரிய மரியாதையுடன் வாழவேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். இதைத்தான் நான் இலங்கை பாராளுமன்றத்தில் பேசும் போதும் குறிப்பிட்டேன்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் வடக்கு மாகாண கவர்னர் எச்.எம்.ஜி.எஸ்.பளிஹக்ரா பிரதமர் மோடிக்கு மதிய விருந்து அளித்தார்.
27 ஆயிரம் வீடுகள் இந்திய அரசின் உதவியுடன் யாழ்ப்பாணம் இலவளை பகுதியில், தமிழர்களுக்காக 27 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. அந்த வீடுகளை நேற்று பிரதமர் மோடி வழங்கினார். தமிழ் கலாசார முறைப்படி பால் காய்ச்சி, வீடுகளை பயனாளிகளிடம் அவர் ஒப்படைத்தார்.
நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மோடி சென்றபோது, வீதியின் இருபுறமும் ஏராளமான ஆண்களும் பெண்களும் கூடி நின்று அவரை வரவேற்றனர். வாழை மரங்களும், தோரணங்களும் கட்டப்பட்டு இருந்தன. நாதசுர இசை முழங்க பெண்கள் ஆரத்தி எடுத்து பிரதமர் மோடியை வரவேற்றனர்.
அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில் கூறியதாவது:–
மேலும் 45 ஆயிரம் வீடுகள் இந்த வீடுகள் வெறும் செங்கல், மணலால் மட்டும் கட்டப்படவில்லை, கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு இந்த வீடுகளை உருவாக்கி பல்வேறு துயரங்களை அனுபவித்த யாழ்ப்பாணம் மக்களின் முகத்தில் இப்போது மகிழ்ச்சியை காண்கிறோம். உங்களுடைய கண்ணீரை துடைத்து துயரத்தை போக்கும் இந்த முயற்சி எனக்கு மிகுந்த திருப்தி அளிப்பதாக உள்ளது.
அடுத்த கட்டமாக 45 ஆயிரம் வீடுகள் கட்டப்படும். இதில் 4 ஆயிரம் வீடுகள் மத்திய மாகாணத்தில் கட்டிக் கொடுக்கப்படும். இந்த திட்டம் விரைவில் நிறைவேற்றி முடிக்கப்படும்.
2001–ம் ஆண்டு குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டு பலத்த சேதம் ஏற்பட்ட போது இதுபோன்று வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டம் உருவானது. அதன் அடிப்படையில் இங்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
வடக்கு மாகாண முதல்–மந்திரி விக்னேஸ்வரன் பேசுகையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான செயல் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என்றும், தமிழர்களுக்கு உரிய நீதி கிடைக்கச் செய்வதோடு அதிகாரங்களும் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
சந்திப்பு நகுலேஸ்வரம் கோவிலுக்கும் சென்று பிரதமர் மோடி வழிபட்டார்.
யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய கூட்டணி தலைவர்கள் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்கள்.
யாழ்ப்பாணம் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். maalaimalar.com

கருத்துகள் இல்லை: