புதன், 18 மார்ச், 2015

பா.ஜ க படுதோல்வியை சந்திக்கும்: மோடியின் தம்பி அதிரடி

புதுடில்லி: ''மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற தவறி விட்டது. இப்படியே இருந்தால், பீகார், உத்தர பிரதேச சட்டசபை தேர்தல்களில், டில்லி தேர்தல் போல, படுதோல்வி தான் கிடைக்கும்,'' என, பிரதமர் நரேந்திர மோடியின் தம்பி, பிரகலாத் மோடி கூறினார்.குஜராத் மாநில நியாய விலைக்கடை சங்கத்தின் முக்கிய நிர்வாகியாக இருக்கும் பிரகலாத் மோடி, டில்லி, ஜந்தர்மந்தர் பகுதியில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார். லோக்சபா தேர்தலில், பா.ஜ., அதிக இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக நாங்கள் எல்லாம் பாடுபட்டோம். ஆட்சிக்கு வந்த பா.ஜ., அரசு, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற தவறிவிட்டது. இதனால், ஓட்டளித்த மக்களின் கோபத்திற்கு இலக்காகியுள்ளது.
இவ்வாறு நான் கூறுவது, என் அண்ணன் நரேந்திர மோடிக்கு எதிராக அல்ல. அரசை தான் நான் குறை கூறுகிறேன்; அண்ணனை அல்ல. என் அண்ணன் வணங்கத்தக்கவர். அவரிடம் எந்த குறையையும் காண முடியாது. நான் அரசின் செயல்பாட்டைத் தான் குற்றஞ்சாட்டுகிறேன். நிலைமை இப்படியே போனால், வரவிருக்கும், பீகார், உத்தர பிரதேச சட்டசபை தேர்தல்களில், பா.ஜ., படுதோல்வியைத் தான் சந்திக்கும். டில்லி சட்டசபை தேர்தலில் எப்படி, பா.ஜ., மூன்று இடங்களை மட்டுமே பெற்றதோ, அது போன்ற நிலைமை தான் ஏற்படும். நானும், பா.ஜ.,வைச் சேர்ந்தவன் தான். அதற்காக, நான் சார்ந்துளள இயக்கத்தின் பிரச்னைகளை சுட்டிக் காட்டாமல் இருக்க முடியாது. இவ்வாறு, மோடியின் தம்பி கூறினார். தினமலர்.com

கருத்துகள் இல்லை: