சனி, 21 மார்ச், 2015

உ பி ரயில் விபத்து 34 பேர் பலி; 150 பேர் படுகாயம்

உத்தரப் பிரதேச மாநிலம் ரே பரேலியில், டேராடூன் - வாரணாசி ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 34பேர் பலியாகினர். 150 பேர் படு காயமடைந்தனர். பலி எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளதை வடக்கு ரயில்வே பொது மேலாளர் அஜய் குத்தியா உறுதி செய்தார். உத்தரப் பிரதேச மாநில ரே பரேலி மாவட்டத்தில் பச்ராவன் கிராமத்துக்கு அருகே இன்று காலை 9.30 மணியளவில் டேராடூன் - வாரணாசி ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரயிலின் இன்ஜின் உட்பட மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. இதில் 30 பேர் பலியானதாகவும், 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். தடம் புரண்ட பெட்டிகளில் இருந்து பயணிகளை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.


ஓட்டுநர் கவனக்குறைவு:

விபத்து தொடர்பாக ரயில்வே செய்தித் தொடர்பாளர் அனில் சக்சேனா கூறும்போது, "முதற்கட்ட விசாரணையில் ரயில் ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து நடந்திருப்பதாகத் தெரிகிறது. விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார். ஆனால், பிரேக் பழுதடைந்ததால் ரயிலை நிறுத்த முடியாமல் போயிருக்கலாம் என்றும் சில வட்டாரங்கள் கூறுகின்றன.

ரயில்வே ரூ. 2 லட்சம் இழப்பீடு

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சமும் காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் சிறுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.20 ஆயிரமும் இழப்பீடு வழங்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் விபத்துக்கான காரணம் குறித்து உயர்நிலை விசாரணை நடத்தவும் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு உத்தரவிட்டுள்ளார்.

உ.பி. அரசு ரூ.2 லட்சம் இழப்பீடு

விபத்து குறித்து உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு சார்பில் தலா ரூ. 2 லட்சமும் காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்

மீட்புப் பணிகள் தீவிரம்:

ரயில் விபத்து நடந்த பகுதியில் மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ரயில் பெட்டியில் சிக்கியிருக்கும் பயணிகளை மீட்க கேஸ் கட்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

படுகாயமடைந்த பயணிகள் கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனைக்கும், சஞ்சய் காந்தி மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர, மருத்துவ குழுவுடன் சம்பவ பகுதிக்கு ஆம்புலன்ஸ்கள் விரைந்துள்ளதாக லக்னோ தலைமை மருத்துவ அதிகாரி எஸ்.என்.எஸ். யாதவ் கூறியுள்ளார்.

குடியரசுத் தலைவர் இரங்கல்:

உ.பி. ரயில் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்களுக்கு தரமான சிகிச்சை அளிப்பதை மாநில அரசு உறுதி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளையும் முனைப்புடன் செயல்படுத்துமாறு மாநில அரசுக்கும், ரயில்வே நிர்வாகத்துக்கும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.ா  tamil.thehindu.com

கருத்துகள் இல்லை: