திங்கள், 16 மார்ச், 2015

பாகிஸ்தான்: 15 பேர் பலி! தேவாலயத்தின் மீது கொடூர தாக்குதல் ! இருவர் உயிருடன் எரிப்பு


பாகிஸ்தானில் இரு தேவாலயங்களில் பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர். 80 பேர் காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு அந்நாட்டின் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் கடும் கண்டனம் தெரிவித்தார். அப்பாவிகளைக் குறி வைத்து நடத்திய இந்தத் தாக்குதல் கோழைத்தனமான செயல் என அவர் கூறினார்.
உயிரிழந்தவர்களில் ஒரு சிறுமி, ஒரு சிறுவன், இரு காவலர்கள் அடங்குவர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத் தலைநகரான லாகூரின் யோஹானாபாத் பகுதியில், ரோமன் கத்தோலிக்க தேவாலயத்திலும், கிறைஸ்ட் தேவாலயத்திலும் பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்டனர்.

தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டி.டி.பி.) பயங்கரவாத இயக்கத்தின் கிளை அமைப்பான ஜமாத்-உல்-அஹ்ரார் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது.
தாக்குதல்களையடுத்து, அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருந்த இருவரைப் பொதுமக்கள் பிடித்து விசாரித்தனர்.
அவ்விருவரும், குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியவர்களின் கூட்டாளிகள் என்றும், தற்கொலைத் தாக்குதலைப் பார்வையிட வந்ததாகவும் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து, அங்கு கூடியிருந்த பெரும் கும்பல் அந்த இரு நபர்களையும் கடுமையாகத் தாக்கியது. பின்னர், அந்த இருவரையும் உயிருடன் அந்தக் கும்பல் எரித்தது. அவ்விருவரின் உடல்களும் அடையாளம் தெரியாமல் கருகின.
இரு நபர்கள் உயிருடன் எரிக்கப்பட்டபோது, அந்தப் பகுதியில் இருந்த போலீஸார் கும்பலைக் கட்டுப்படுத்த முயற்சிக்கவில்லை.
இந்நிலையில், தேவாலயங்களில் நிகழ்ந்த தற்கொலைத் தாக்குதல் குறித்து லாகூர் காவல் துறை துணைத் தலைவர் ஹைதர் அஷ்ரஃப் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தேவாலயங்கள் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு உள்ளாகும் என்ற அச்சுறுத்தல் காரணமாக அங்கு போலீஸ் காவல் போடப்பட்டிருந்தது.
அந்த இரு தேவாலயங்களிலும் 5 போலீஸார் காவலில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். தற்கொலைத் தாக்குதல் நடத்த வந்தவர்களை தேவாலயத்துக்குள் நுழைய விடாமல் காவலர்கள் தடுத்தனர்.
ஞாயிற்றுக்கிழமை என்பதால் சிறப்புப் பிரார்த்தனைக்காக காலையில் ஏராளமானோர் இரு தேவாலயங்களிலும் கூடியிருந்தனர். குண்டுவெடிப்புகள் உள்ளே நிகழ்ந்திருந்தால் உயிரிழப்பு அதிகரித்திருக்கும். போலீஸாரின் தியாகத்தால் பெரும் உயிரிழப்பு தடுக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகள் ஒவ்வொருவரும் சுமார் 5 கிலோ எடையுள்ள வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் இரு போலீஸாரும் அடங்குவர். 80 பேர் பலத்த காயமடைந்தனர். இவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றார் அவர்.
தற்கொலைத் தாக்குதல் நடைபெற்றதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவர்களின் மூத்த தலைவர் அஸ்லாம் பெர்வைஸ் சகோத்ரா கூறியதாவது:
யோஹானாபாத் கிறிஸ்தவர்கள் குடியிருப்புப் பகுதியில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயத்திலும், கிறைஸ்ட் தேவாலயத்திலும் சிறப்புப் பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது இரு நபர்கள் அங்கு வந்தனர். ஆனால், அவர்களை தேவாலயத்துக்குள் நுழைய விடாமல் அங்கிருந்த காவலர்கள் தடுத்தனர்.
இதையடுத்து, அந்த நபர்கள் தங்களது உடலில் மறைத்து வைத்திருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தனர்.
நாட்டில் கிறிஸ்தவர்களுக்குப் பெரும் அச்சுறுத்தல் உள்ளது. கிறிஸ்தவ சமுதாயத்தினருக்கு அரசு போதிய பாதுகாப்பு அளிக்கவில்லை என்றார் அவர்.
லாகூர் நகரின் யோஹானாபாத் பகுதியில் சுமார் 10 லட்சம் கிறிஸ்தவர்கள் வசிக்கின்றனர். அங்கு 150-க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் உள்ளன. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரட்டைத் தாக்குதலையடுத்து, கிறிஸ்தவர்கள் லாகூர் நகரின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். இதனால் நகரம் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தாக்குதல்கள் நடைபெற்ற இடங்களைப் பார்வையிட வந்த மாகாண அமைச்சர்கள் இருவரை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். மேலும், காவல் துறை உயரதிகாரிகள், பிற அரசு அதிகாரிகளையும் பொதுமக்கள் தடுத்தனர்.
லாகூர் மட்டுமல்லாமல், கராச்சி, முல்தான், பெஷாவர், ஃபைஸலாபாத், நான்கானா சாஹிப், சர்கோதா ஆகிய நகரங்களிலும் கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
பாகிஸ்தானில் இதற்கு முன்பும் சிறுபான்மையினரைக் குறி வைத்து, பயங்கரவாதிகள் தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளனர்.
2013-ஆம் ஆண்டு, பெஷாவரில் ஆல் செயின்ட்ஸ் தேவாலயத்தில் நிகழ்த்தப்பட்ட இரட்டை வெடிகுண்டுத் தாக்குதலில் 80 பேர் கொல்லப்பட்டனர்.

அமைதி காக்கவும் - லாகூர் பேராயர்

பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் அமைதி காக்க வேண்டும் என்று லாகூர் பேராயர் இர்ஃபான் ஜமீல் வேண்டுகோள் விடுத்தார்.
அவர் கூறியதாவது: இந்த நாட்டின் அமைதியைக் குலைக்க பயங்கரவாதிகள் முயற்சி செய்கின்றனர். மசூதிகளையும் தர்காக்களையும் சந்தைகளையும் குறி வைத்து அவர்கள் தாக்குதல்கள் நிகழ்த்துகின்றனர்.
சிறுபான்மையினரான கிறிஸ்தவர்களைக் குறி வைத்து தாக்குதல் நிகழ்த்தப்படுவதைப் போலவே முஸ்லிம்களையும் தாக்கி வருகின்றனர். நாட்டிலுள்ள கிறிஸ்தவர்கள் அமைதி காக்க வேண்டும். வன்முறையில் ஈடுபட்டு, பயங்கரவாதிகளின் சதியில் விழுந்துவிடக் கூடாது என்றார் அவர். உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, பாகிஸ்தானில் உள்ள கிறிஸ்தவப் பள்ளிகள் அனைத்துக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இழப்பீடு அறிவிப்பு

தேவாலயத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கும் காயமடைந்தவர்களுக்கும் பஞ்சாப் மாகாண அரசு இழப்பீடு அறிவித்துள்ளது.
மாகாண முதல்வர் ஷாபாஸ் ஷெரீஃப் இது குறித்து தெரிவித்ததாவது:
உயிரிழந்தோர் குடும்பத்துக்குத் தலா ரூ. 5 லட்சம் (இந்திய மதிப்பில் சுமார் ரூ 3.1 லட்சம்) இழப்பீடு அளிக்கப்படும். காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ. 75,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 46,000) அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தானின் லாகூர் நகரில் ஞாயிற்றுக்கிழமை தற்கொலைத் தாக்குதலுக்கு உள்ளான கிறிஸ்தவ தேவாலயத்தின் முகப்பில் திரண்ட மக்கள். (உள்படம்) தாக்குதலில் பாதிப்புக்குள்ளான தேவாலயத்தின் முகப்புப் பகுதி. dinamani.com

கருத்துகள் இல்லை: