ஞாயிறு, 6 ஜனவரி, 2013

கனிமொழி :தி.மு.க. தலைவர் ஸ்டாலின் என்று அப்பா சொன்னார்

Viruvirupu
“எனக்குப் பின் ஸ்டாலின் இருக்கிறார்” என்ற கருணாநிதியின் பேச்சால், “தி.மு.க.வின் அடுத்த தலைவர் ஸ்டாலின் என்று கருணாநிதி அறிவித்து விட்டார்” என தி.மு.க.வின் ஒரு தரப்பினராலும், “சேச்சே தலைவர் பொதுப்படையாக சொன்னதை பெரிதாக்குகிறார்கள்” என்று மற்றொரு தரப்பினராலும் சூடாக விவாதிக்கப்படும் நிலையில், கனிமொழி அதிரடியாக ஒரு கருத்து தெரிவித்துள்ளார்.
“தி.மு.க.வின் அடுத்த தலைவர் ஸ்டாலின்தான் என்று எனது அப்பா கருணாநிதி அறிவித்துள்ளார். ஸ்டாலினின் சகோதரி என்ற வகையில் இந்த அறிவிப்பு எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது” என்பதே அவர் கூறியுள்ள கருத்து.
சென்னை சி.ஐ.டி. காலனியில் உள்ள தனது வீட்டில் நேற்று பிறந்தநாள் கொண்டாடிய கனிமொழி எம்.பி. தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், மேலே கூறப்பட்டதையும் கூறிவிட்டு, “தற்போது நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெறும்” என்றார்.
கருணாநிதி தனக்கு பிறகு தி.மு.க. தலைவர் பதவி ஸ்டாலினுக்கு தான் என்ற கருத்துப்பட தெரிவித்தது குறித்து கருத்து தெரிவித்த மு.க. அழகிரி, “வாரிசுகளை தலைவராக நியமிக்கும் அளவுக்கு தி.மு.க. ஒரு மடம் அல்ல. இதை நான் சொல்லவில்லை. ஏற்கனவே தலைவர் கருணாநிதி கூறியிருக்கிறார். இதனால், ஸ்டாலின்தான் அடுத்த தலைவரா என்ற உங்கள் கேள்வியை அரவிடம் போய் கேளுங்கள்” என்றார் கடும் கோபத்துடன்!
கனிமொழியோ, “தற்போது நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம்” என்கிறார். அஞ்சாநெஞ்சரிடம் ஒரு வார்த்தை பேசிவிட்டு சொல்லியிருக்கலாமே.

கருத்துகள் இல்லை: