ஞாயிறு, 6 ஜனவரி, 2013

குழந்தைகள் காலை உணவையே சாப்பிட முடியாத நிலை

14தமிழக அரசின் பள்ளி நேர மாற்றம்; மாணவர்களை மயக்கமடைய செய்யும்

Chennai பெருங்குடி அருகே கந்தன்சாவடியில் அரசு பஸ் படிக்கட்டில் பயணம் செய்த நான்கு மாணவர்கள் பலியானார்கள். இதை பொதுநல வழக்காக எடுத்த சென்னை உயர்நீதிமன்றம், விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
அதன் காரணமாக தமிழக அரசு நேற்று உயர்நீதி மன்றத்தில், ‘பள்ளி துவங்கும் நேரம் காலை 7.30 மணிக்கு மாற்றப்படும்; வரும் ஜூன் மாதம் துவங்கி அடுத்த கல்வியாண்டு முதல் அமலாகும் என்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அரசின் இந்த அறிவிப்பு, கூட்ட நெரிசலை குறைப்பதற்கும், மாணவர்களைத் தவிர ‘மற்றவர்’ நிம்மதியாக பயணம் செய்வதற்கும் ஏற்ற வகையில் இருக்கிறது.
அதாவது ‘மாணவர்களுக்கு தண்டனை.’ என்கிற பாணியில் அமைந்திருக்கிறது. பஸ்சில் நசுங்கி சாகும் மாணவர்களை பாதுக்காக்க வந்த அரசு, பள்ளிகளுக்கு செல்வதையே ஒரு தண்டனைபோல் அறிவித்திருக்கிறது.
இந்த நேர மாற்றம், அரசு பஸ்சில் வருகிற குழந்தைகளை கணக்கில் வைத்துதான் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 15 லிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து வருகிற குழந்தைகள்தான் சென்னை நகரத்திற்குள் உள்ள பள்ளிகளுக்கு பஸ்சில் வருகிறார்கள். காரணம், சென்னை நகரத்தின் செயற்கை வாடகை உயர்வின் காரணமாக நகரத்திலிருந்து தொழிலாளர்களும், நடுத்தர மக்களும் அப்புறப்படுத்தப் பட்டிருக்கிறார்கள்.
சென்னையில் சொந்த வீடு வைத்திருந்த நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பலர், ‘நல்ல விலைக்கு கேட்டாங்க கொடுத்துட்டேன்’ என்று சென்னையின் புறநகர் பகுதியில் குடியேறிவிட்டார்கள்.
ஆகவே, நீண்ட தூரத்திலிருந்து பள்ளிக்கு வருகிற குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.
காலை 8.30 மற்றும் 9.00 மணி என்று இப்போது உள்ள பள்ளியின் நேரத்திற்கே, தொலைவில் இருந்து வரும் மாணவர்கள், மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். காலை 8.30 மணிக்கு பள்ளிக்கு வரும் தொலைதூர மாணவர்கள், வீட்டிலிருந்து காலை 6.45 மணிக்கு புறப்பட வேண்டியிருக்கிறது.
அதனால் அவர்கள் காலை உணவை 6.00 மணியிலிருந்து 6.15 முன் முடிக்க வேண்டியதாகிறது. இப்போது காலை 7-30 மணிக்கு என்று மாற்றியமைத்தால் குழந்தைகள் காலை உணவையே சாப்பிட முடியாத நிலை ஏற்படும்.
குழந்தைகளுக்கு இரண்டு வேளை உணவை தயாரிக்க தாய்மார்கள் காலை 4 மணிக்கும் முன்னதாகவே எழுந்திருக்க வேண்டும். ‘தன் குழந்தை சாப்பிட்டால் போதும்’ என்ற எண்ணம் உள்ளவர்களான தாய்மர்கள் அதை ஒரு சுமையாக கருதமாட்டார்கள் என்றாலும்; குழந்தைகளால் காலை 5.15 மணிக்கெல்லாம் எப்படி உணவை சாப்பிட இயலும்?
அதனால், காலை – மதியம் என்று இரண்டு வேளைக்கும் உணவுகளை எடுத்துக் கொண்டு பள்ளிக்கு வரவேண்டிய பாரமும் ஏற்படும். காலை உணவை நிம்மதியாக பள்ளியில் வைத்து சாப்பிடடவும் முடியாது. அதற்கான நேரமும் கிடைக்காது. அது ஏதோ தடை செய்யப்பட்ட, ‘ரகசிய உணவு’ என்கிற முறையில்தான் அவர்கள் அதை மறைத்து வைத்து சாப்பி வேண்டிவரும். அதனால் குழந்தைகள் காலை உணவை தவிர்த்துவிடுவார்கள்.
காலை உணவை மாணவர்கள் சாப்பிடாமல் பட்டினியாக இருந்தால், அவர்கள் உடல் பலவீனமடைய கூடும்.
ஏனென்றால், மூன்று வேளை உணவுகளில் காலை உணவே மிக முக்கியமானது. இரவு உண்ட உணவிற்கும் காலை உண்பதற்கும் நேர இடைவெளி அதிகம்.
வயிறு காலியாக இருப்பதால், உடலுக்கு சக்தியை அளிக்கும் க்ளுகோஸ்சின் அளவு குறைந்துவிடும் இதனை உடனடியாகத் திரும்பப் பெற காலை உணவு மிக அவசியம். காலை உணவை சாப்பிட்டால்தான், நாள் முழுவதும் சக்தியுடன், களைப்பின்றி செயல்பட முடியும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். பெரியவர்களுக்கே இந்த அறிவுரையை மருத்துவர்கள் கூறுகிறார்கள். அப்படியானல் குழந்தைகளின் நிலை?
இனி காலை 7.30 மணிக்கு பள்ளி; என்கிற இந்த நேரமாற்றம் பள்ளிக்குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் அறிவிற்கும் கேடு விளைவிக்கும். அவர்களிடம் கவனிப்பில் குறைபாடு, பள்ளியின் பசியால் மயக்கம் போன்றவை சகஜமாக நேரிடும்.
நெரிசலை தவிர்ப்பதற்கும், மாணவர்களை காப்பதற்கும் இதுவல்ல தீர்வு? இதுகுறித்து முன்பே நான் எழுதிய கட்டுரைகள்…
பெண்கள் இருக்கைகளை மாற்றுங்கள்; மாணவர்கள் உயிரை காப்பாற்றுங்கள்
வாகன விபத்து-நெரிசல்: அரசுப் பள்ளி மாணவர்களா audi car மாணவர்களா?
ஆகையால், கல்வியாளர்களும், சமூக அக்கறை கொண்டவர்களும், பெற்றோர்களும் தமிழக அரசின் பள்ளி நேர மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
அதற்கு முன் உயர்நீதி மன்றம் தமிழக அரசின் இந்த பரிந்துரையை தள்ளுபடி செய்து அறிவித்தால், அது குழந்தைகளின் நலத்திற்கும், எதிர்கால சமூகத்திற்கும் செய்கிற பெரிய நன்மையைாக அமையும்.

கருத்துகள் இல்லை: