வெள்ளி, 11 ஜனவரி, 2013

உயர்கல்வியில் அன்னிய நிறுவனங்கள்

வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை, இந்தியாவில் அனுமதிக்க வழிவகை செய்யும் சட்ட மசோதா, பார்லிமென்ட் நிலைக்குழுவின் பரிசீலனையில் உள்ளது. இந்த மசோதா நிறைவேறினால், இந்தியாவில் உயர் கல்வியில் பெரிய அளவிலான முன்னேற்றங்கள் ஏற்படும்,'' என, மத்திய திட்டக்குழு உறுப்பினர், நரேந்திர ஜாதவ் கூறினார்.குஜராத், காந்தி நகரில், கல்வி நிறுவனங்களுக்கானசர்வதேச மாநாட்டின் நிறைவு விழா, நேற்று காலை நடந்தது. இதில், மத்திய திட்டக் குழுவின், கல்வித் துறைக்கான உறுப்பினர் நரேந்திர ஜாதவ் பேசியதாவது:
பன்னிரெண்டாவது ஐந் தாண்டு திட்டத்தில், கல்வித் துறைக்கு, மத்திய அரசு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துள்ளது. இந்த ஐந்து ஆண்டுகளிலும், கல்வித் துறையை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல, பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. இதற்கு, தேசிய வளர்ச்சிக் கவுன்சிலும் அனுமதி வழங்கி விட்டது.


வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள், இந்தியாவில் தங்களுடைய கிளைகளை துவக்க வழி செ ய்யும்சட்ட மசோதா, பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டு, தற்போது நிலைக்குழுவின் பரிசீலனையில் உள்ளது. நிலைக் குழு பரிந்துரைகளை அளித்த பின், மசோதா மீது விவாதம் நடத்தி நிறைவேற்றப்படும்.

இந்தச்சட்டம் நிறைவேறினால், நாட்டில், உயர் கல்வித் துறையில் பெரிய மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்கள் நிகழும். மாணவர்கள், ஆசிரியர்கள், தங்களின் திறனை வளர்த்துக் கொள்ள முடியும். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திட்டங்கள், ஆராய்ச்சித் துறையில், வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுதல், பாடத்திட்ட மேம்பாடு, உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரித்தல் என, பல்வேறு திட்டங்களும் வேகம் பெறும்.மேலும், இந்தியசர்வதேச கல்வி மையம் ஒன்றை அமைக்கவும், மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மையத்தின் மூலம், குறிப்பிட்ட கல்வி நிறுவனங்களை தேர்வு செய்து, பல்வேறு திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு மாணவர்கள், 40சதவீதம் பேர், இந்திய கல்வி நிறுவனங்களில் படிக்கின்றனர். வெளிநாட்டு மாணவர்களை அதிகம் இழுக்கும் பல்கலையாக, புனே பல்கலை உள்ளது. இந்த பல்கலையில் மட்டும், 80 ஆயிரம், வெளிநாட்டு மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள்,சார்க் நாடுகள், ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த, அதிக மாணவ, மாணவியர், இந்திய கல்வி நிறுவனங்களில் படிக்கின்றனர். அதேபோல், இந்திய மாணவர்கள், ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குச் செல்கின்றனர்.

இந்திய கல்வி நிறுவனங்கள், வெளிநாட்டு மாணவர்களை அதிகம் இழுக்க வேண்டும் எனில், கல்வி நிறுவனங்களில், பல்வேறு சீர்திருத்தங்களை செய்வதுடன், உள்கட்டமைப்பு வசதிகளையும் அதிகரிக்க வேண்டும்.குறிப்பாக, வெளிநாட்டு மாணவர்களுக்கென,சகல வசதிகளுடன் கூடிய விடுதிகள் கட்ட வேண்டும். வீடியோ கான்பரன்சிங் வசதி, கல்வி வளாகத்தில்,சர்வதேச கல்வி மையம் ஆகியவற்றையும் நிறுவ வேண்டும்.இவ்வாறு நரேந்திர ஜாதவ் பேசினார்.

வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை கவர்வதற்காகவே,சர்வதேச மாநாட்டை மோடி நடத்தியிருக்கிறார். தொழில் நிறுவனங்களுக்கு, பல்வேறுசலுகைகளை வழங்குவது போல், வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுக்கும், தேவையானசலுகைகளை வழங்கி, உலகின் முன்னணி கல்வி நிறுவனங்கள், குஜராத்தில், தங்களின் கிளையை துவக்குவதற்கு ஏற்பாடு நடப்பதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயர் கல்வியில் தனியார் மயம் குஜராத் அரசு தீவிரம்:குஜராத் மாநில, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர் கூறியதாவது:பொதுத்துறை - தனியார் துறை பங்கேற்புடன், உயர்கல்வி நிறுவனங்களை துவக்குவதற்கு, மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த திட்டத்தில், பொறியியல் கல்லூரி, ஐ.டி.ஐ., போன்றவற்றை துவக்குவதற்கு, 5 கோடி ரூபாய் முதல், 10 கோடி ரூபாய் வரை, மாநில அரசு வழங்குகிறது.

இத்தனை ஆண்டுகளாக, தொழில், வர்த்தக மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து வந்தோம். தற்போது, கல்வியில் கவனம் செலுத்தி வருகிறோம். மாநிலத்தில் இருக்கிற கல்வி நிறுவனங்களை,சர்வதேச தரத்திற்கு மேம்படுத்துவதுடன், புதிதாக, தனியார் கல்வி நிறுவனங்கள் வருவதையும் ஊக்குவிக்கிறோம்.இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

- நமது சிறப்பு நிருபர் - dinamalar,com

கருத்துகள் இல்லை: