ஞாயிறு, 28 அக்டோபர், 2012

ஆறு அமைச்சர்கள் ராஜினாமா மத்திய அமைச்சரவை இன்று...மாற்றியமைப்பு!

வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவை தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள், அம்பிகா சோனி, முகுல் வாஸ்னிக், சுபோத் காந்த் சகாய், மகாதேவ் கண்டேலா, வின்சென்ட் பாலா, அகதா சங்மா ஆகியோரும், நேற்று தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர். இந்த சூழ்நிலையில், மத்திய அமைச்சரவை இன்று மாற்றி அமைக்கப்படுகிறது.வரும், 2014ம் ஆண்டு, லோக்சபா தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளதால், மன்மோகன் சிங் அரசின், கடைசி அமைச்சரவை மாற்றம், இதுவாகத்தான் இருக்கும்.
வரும், 2014ல், லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு தயாராகும் வகையில், மத்திய அமைச்சரவையிலும், காங்கிரஸ் கட்சியிலும் அதிரடி மாற்றங்கள் கொண்டு வர, கட்சித் தலைவர் சோனியாவும், பிரதமர் மன்மோகன் சிங்கும் திட்டமிட்டனர்.கடந்த மூன்று நாட்களாக, தினமும் இருவரும் சந்தித்து, இதுதொடர்பாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்நிலையில், மத்திய அமைச்சரவை மாற்றம், இன்று நடக்கிறது. காலை, 11:00 மணிக்கு, ஜனாதிபதி
மாளிகையில், புதிய அமைச்சர்கள் பதவியேற்கின்றனர்.வெளியுறவு அமைச்சர், எஸ்.எம்.கிருஷ்ணா, நேற்று முன்தினம், தன் பதவியை ராஜினாமா செய்த நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர், அம்பிகா சோனி, சமூக நீதி துறை அமைச்சர், முகுல் வாஸ்னிக், சுற்றுலாத் துறை அமைச்சர், சுபோத் காந்த் சகாய் , சமூக நீதி துறை இணை அமைச்சர் மகாதேவ் கண்டேலா, நீர்வளத் துறை இணை அமைச்சர், வின்சென்ட் பாலா ஆகியோரும், நேற்று தங்களின் பதவிகளை ராஜினாமா செய்தனர்.அவர்களின் ராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஏற்றுக் கொண்டார்.
அதே நேரத்தில், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, ஊரக மேம்பாட்டுத் துறை இணை அமைச்சரான, அகதா சங்மா ஏற்கனவே கொடுத்திருந்த ராஜினாமா கடிதமும் நேற்று ஏற்றுக் கொள்ளப்பட்டது.கிருஷ்ணா ராஜினாமா செய்துள்ளதால், அவர் கவனித்து வந்த வெளியுறவுத் துறைக்கு, யார் அமைச்சராவார் என்ற பரபரப்பு நிலவி வருகிறது. பஞ்சாப் கவர்னர், சிவராஜ் பாட்டீல் மற்றும் காஷ்மீரைச் சேர்ந்த, காங்கிரஸ் மூத்த எம்.பி.,யான கரண்சிங் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன. இருவரில் ஒருவருக்கே, இந்தப் பதவி என்பது நிச்சயமாகியுள்ளது.
கேரளாவுக்கு பிரதிநிதித்துவம்:இன்றைய அமைச்சரவை மாற்றத்தில், கேரளாவுக்கு ஒரு பிரதிநிதித்துவம் வழங்கப்படுகிறது. கொடிகொன்னில் சுரேஷ்க்கு அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது. இவர், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்.
கேரளாவுக்கு ஏற்கனவே, ஆறு அமைச்சர்கள் உள்ள நிலையில், தற்போது ஏழாவதாக, சுரேஷ் நியமிக்கப்படுகிறார்.
ஆந்திராவில், நடிகர் சிரஞ்சீவி அமைச்சராவது உறுதியாகியுள்ளது. சுற்றுலா துறை, கேபினட் அமைச்சர் பதவி இவருக்கு வழங்கப்படுகிறது. மேலும், ஆந்திராவில், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர், ஜெகன் மோகன் ரெட்டிக்கு, "செக்' வைக்கும் வகையில், சூரிய பிரகாஷ் ரெட்டி என்பவர் அமைச்சராகிறார்.
சமாதானம்:இவர், முன்னாள் முதல்வர், விஜய பாஸ்கர ரெட்டியின் மகன். இதுதவிர, அந்த மாநிலத்தைச் சேர்ந்த, கிருபா ராணி மற்றும் பல்ராம் நாயக் ஆகியோருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது. மூத்த தலைவர், கே.எஸ்.ராவ், தனக்கு அமைச்சர் பதவி வழங்கப்படாததை கண்டித்து, எம்.பி., பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும், அவரை கட்சி மேலிடம் சமாதானப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.மேற்கு வங்க காங்கிரசை சேர்ந்த, பிரதீப் பட்டாச்சார்யா, தீபா முன்ஷி உட்பட, மூன்று பேருக்கும், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த, மீனாட்சி நடராஜன், ராஜஸ்தானைச் சேர்ந்த ஜோதி மிர்தா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மாணிக் தாக்கூர் ஆகியோருக்கும் இணை அமைச்சர் பதவிகள் வழங்கப்பட உள்ளன.
ஒலிபரப்பு துறை
கர்நாடகாவிலிருந்து ராஜ்யசபா முன்னாள் துணைத் தலைவர், ரகுமான்கான் அமைச்சராகிறார். அதேபோல், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர், மணீஷ் திவாரியும் அமைச்சராக்கப்படுவது உறுதி. அவருக்கு செய்தி ஒலிபரப்பு துறை அளிக்கப்பட உள்ளது.மேலும், பெட்ரோலியத் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி மாற்றப்பட்டு, மனிதவள மேம்பாடு அமைச்சகம், அவருக்கு வழங்கப்பட உள்ளது.
தற்போதுள்ள இணையமைச்சர்கள் பலரும், கேபினட் பதவிகளுக்கு நெருக்கடி அளிக்கின்றனர். ஒலிம்பிக்கில் இந்தியா பதக்கங்கள் வாங்கியதற்காக, அஜய் மக்கானுக்கும், உத்தரகண்ட் மாநில முதல்வர் பதவி வழங்காததற்காக, கோபித்துக் கொண்ட ஹரிஷ் ராவத்துக்கும், கேபினட் அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது.

இலாகாக்கள் மாற்றம்:


அத்துடன், முனியப்பா, சச்சின் பைலட், ஜோதிர் ஆதித்ய சிந்தியா, ஸ்ரீகாந்த் ஜனா ஆகியோரில், இருவருக்கு, கேபினட் பதவிகள் வழங்கப்படுகின்றன.இலாகா மாற்றங்களின் அடிப்படையில் பார்த்தால், பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சராக கமல்நாத் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதேநேரத்தில், இரண்டுக்கு மேற்பட்ட துறைகளை வைத்துள்ள வீரப்ப மொய்லி (மின்சாரம், கம்பெனிகள் விவகாரம்), கபில்சிபல் (மனிதவளம், தொலைதொடர்பு துறை) ஆகியோரின் இலாகாக்களும் மாற்றப்படுகின்றன.

சோனியும், படேலும்:


சோனியாவின் அரசியல் ஆலோசகராக, எட்டு ஆண்டுகளுக்கு மேலாக, பதவி வகிப்பவர், அகமது படேல். ஆட்சியிலும், கட்சியிலும் இவரது ஆலோசனைகளே முக்கிய பங்கு வகித்துள்ளன. சோனியாவின் நிழலாக வர்ணிக்கப்படும், இவரின் பங்களிப்பு இல்லாமல், முதன் முறையாக, இன்றைய அமைச்சரவை மாற்றம் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.அமைச்சரவை மாற்றம் குறித்து, டில்லியில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்ட நிலையில், கடந்த ஐந்து நாட்களாகவே, அகமது படேல் குஜராத்தில் உள்ளார். இது, காங்கிரஸ் வட்டாரத்தில், மிகப்பெரிய வியப்பை ஏற்படுத்திஉள்ளது.அம்பிகா சோனி கட்சிப் பொறுப்புக்கு திரும்பும் நிலையில், ஏற்கனவே பொதுச் செயலர், பதவி வகித்து விட்டதால், தனக்கு பெரிய பதவி வழங்கவேண்டும் என, கோரியுள்ளார். அதனால், சோனியாவின், மற்றொரு அரசியல் ஆலோசகராக, அவர் நியமிக்கப்படலாம். அப்படி நியமிக்கப்பட்டால், அகமது படேலின் அதிகாரங்கள் குறைக்கப்படலாம்.
தாரிக் அன்வருக்கு பதவி


:"இன்றைய, மத்திய அமைச்சரவை மாற்றத்தில், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, தாரிக் அன்வர், மத்திய அமைச்சராக பதவியேற்பார்' என, அந்தக் கட்சியின், பொதுச் செயலர் திரிபாதி நேற்று தெரிவித்தார்.இரண்டு முறை ராஜ்யசபா எம்.பி.,யாகவும், பீகாரின் கத்திகார் தொகுதியிலிருந்து, நான்கு முறை லோக்சபா எம்.பி.,யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர், தாரிக் அன்வர். தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, அகதா சங்மா, ராஜினாமா செய்து விட்டதால், தாரிக் அன்வர் அமைச்சராகிறார்.மத்திய விவசாய துறை அமைச்சராக, சரத் பவார் உள்ளார். அந்தத் துறையின் இணை அமைச்சர் பதவி தாரிக் அன்வருக்கு வழங்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

- நமது டில்லி நிருபர் -

கருத்துகள் இல்லை: