வியாழன், 1 நவம்பர், 2012

புயல் எதிர்பார்க்கப்பட்ட நேரத்துக்கு முன்பே சென்னை அருகே கரையை கடந்தது!

Viruvirupu
“இதோ வருகிறது” என்று இன்று பூராவும் மிரட்டிக் கொண்டிருந்த நீலம் புயல், சென்னை – மகாபலிபுரம் அருகே இன்று மாலை கரையைக் கடந்தது. அப்போது பலத்த காற்று வீசியதால், கடற்கரை பகுதிகளில் மரங்கள் சரிந்து விழுந்தன.
“மாலை 6 மணி அளவில் புயல் மகாபலிபுரம் கரையைத் தொடும், அதற்கு அடுத்த இரண்டு மணி நேரத்தில் புயல் கரையைக் கடக்கும். அடுத்து, தமிழகத்தின் நிலப் பகுதிகளான வேலூர், திருவண்ணாமலை வழியாகச் சென்று புயல் வலுவிழக்கும்” என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
ஆனால், குறிப்பிட்ட நேரத்தைக் காட்டிலும் சற்று முன்னதாகவே இன்று மாலை 4.45 மணி அளவில் சென்னையை அடுத்த மகாபலிபுரம் அருகே புயல் கரையை கடந்து, மாநிலத்தின் உள்பகுதியில் சென்றது.

புயல் கரையை கடந்த போது கடற்கரையொட்டிய பகுதிகளில் பலத்த காற்று வீசியது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. சாலைகளில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி கிடந்தது. சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போலீசாரும், தீயணைப்பு துறையினரும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். உடனடி மருத்துவ உதவிக்காக ஆங்காங்கே ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
புயல் கரையைக் கடப்பதை ஒட்டி, மின்சாரம் முன்னதாகவே துண்டிக்கப்பட்டிருந்தது. சென்னை – மகாபலிபுரம் இடையேயான கடற்கரைப் பகுதிகள், கிராமங்களில் மின் தடை ஏற்படுத்தப் பட்டிருந்தது. அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.  புயல் முழுவதுமாக கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் இருந்து 5 மணிநேரத்திற்கு பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் புயல் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக 13 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தமிழக அரசு அனுப்பி வைத்திருக்கிறது.

கருத்துகள் இல்லை: