வியாழன், 16 ஆகஸ்ட், 2012

Pakistan அணு ஆயுத முகாமில் தீவிரவாதிகள் தாக்குதல்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

இஸ்லாமாபாத் :பாகிஸ்தானில் அணு ஆயுதங்கள் பாதுகாக்கப்பட்டு வரும் விமான படை முகாமில், தீவிரவாதிகள் இன்று அதிகாலை திடீர் தாக்குதல் நடத்தினர். மூன்று மணி நேர கடும் சண்டைக்கு பிறகு 7 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 
இந்த தாக்குதலில் ஒரு வீரர் பரிதாபமாக இறந்தார். விமான படை முகாமில் தீவிரவாத தடுப்பு கமாண்டோக்கள் உள்பட ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது கம்ரா நகரம். இங்கு விமான படை தளம் உள்ளது. இங்கு உதிரி பாகங்களை இணைத்து ஜேஎப்.17 ரக ஜெட் போர் விமானங்கள் மற்றும் ஆளில்லா உளவு விமானம் டிரோன்கள் அசம்பிள் செய்கின்றனர். மேலும் இங்குதான் அணு ஆயுதங்கள் ஏராளமாக குவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா உள்பட பல நாடுகள் கூறி வருகின்றன. இந்த விமான படை தளத்தில் கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பல கட்ட பாதுகாப்பை கடந்துதான் உள்ளே செல்ல முடியும். இந்நிலையில், Ôதீவிரவாத ஒழிப்பில் பாகிஸ் தான் அரசு ஒத்துழைப்பு வழங்காததால், என்றாவது ஒரு நாள் தீவிரவாதிகளின் கைகளுக்கு அணு ஆயுதங்கள் செல்ல கூடும்Õ என்று அமெரிக்க ராணுவ அமைச்சர் லியோன் பனேட்டா நேற்றுமுன்தினம்தான் எச்சரித்து இருந்தார்.
அதற்கேற்ப கம்ரா விமான படை தளத்துக்குள், ராணுவ உடையில் 10 தீவிரவாதிகள் இன்று அதிகாலை 2 மணிக்கு நுழைந்தனர். மூன்று அடுக்கு பாதுகாப்பு வளையத்தை தாண்டி தீவிரவாதிகள் உள்ளே புகுந்து திடீரென சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். தோளில் சுமந்து ஏவப்படும் ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்தினர். இதில் அதிநவீன போர் விமானம் ஒன்று  வெடித்து சிதறியது. உஷாரடைந்த ராணுவ வீரர்கள் பதிலடி கொடுக்க தொடங்கினர். மேலும், தகவல் அறிந்து ராவல்பிண்டியில் இருந்து தீவிரவாத தடுப்பு கமாண்டோக்கள் விரைந்து வந்தனர். தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையில் தொடர்ந்து 3 மணி நேரம் கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இதில் 7 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களின் ஒருவன் உடல் முழுக்க வெடிபொருட்களை கட்டியிருந்தான் என்று வீரர்கள் கூறினர். மற்ற 3 தீவிரவாதிகளின் கதி தெரியவில்லை. இந்த தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் பலியானார். பலர் படுகாயம் அடைந்தனர். தீவிரவாதிகள் தாக்குதலை கம்ரா விமான படை தள அதிகாரிகளும் உறுதிப்படுத்தினர். உடனடியாக விமான படை தளம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. சுற்றி உள்ள பகுதிகளில் வீடு வீடாக ராணுவத்தினர் புகுந்து தீவிரவாதிகள் மறைந்துள்ளார்களா என்று அதிரடி சோதனை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தாக்குதலை அடுத்து தீவிரவாத தடுப்பு படை கமாண்டோக்கள், ராணுவ வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாகிஸ்தானில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அணு ஆயுதங்கள் வெடித்து சிதறி இருந்தால், நிலைமை மிக மோசமாகி இருக்கும் என்று நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். முதல் கட்ட விசாரணையில், விமான படை தளத்தில் உள்ள Ôசாப்,2000Õ ரக கண்காணிப்பு விமானத்தை தகர்க்க தீவிரவாதிகள் முயற்சித்ததாகவும், அவர்கள் அருகில் உள்ள பிந்த் சுலைமான் மக்கான் என்ற கிராமத்தில் இருந்து ஊடுருவியதாகவும், இந்த தாக்குதலுக்கு விமான படை தளத்தில் உள்ள ராணுவ வீரர்கள் சிலர் தீவிரவாதிகளுக்கு உதவி இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கம்ரா விமான தடை தளத்தின் மீது கடந்த 2009ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். அப்போது அவர்களால் விமான படை தளத்துக்குள் உள்ளே நுழைய முடியாததால், நுழைவு வாயிலில் தாக்குதல் நடத்திவிட்டு தப்பினர். அதில் 7 பாதுகாப்பு வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் மீண்டும் தாக்குதல் நடத்தியது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

10ம் தேதியே எச்சரித்த பத்திரிகை :தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து 85 கி.மீ. தொலைவில்தான் கம்ரா விமான படை தளம் உள்ளது. இங்கு அதிநவீன போர் விமானங்கள் மற்றும் அணு ஆயுதங்கள் உள்ளன. பலத்த பாதுகாப்பு இருந்தாலும், இங்கு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு உள்ளது என்று Ôதி எக்ஸ்பிரஸ் டிரிபியூன்Õ பத்திரிகை கடந்த 10ம் தேதியே எச்சரித்திருந்தது. அந்த பத்திரிகை வெளியிட்ட செய்தியில், Ôமுஸ்லிம்களின் புனித ரம்ஜான் மாதத்தின் 27வது அல்லது 28வது நாளில், பஞ்சாப் மாகாணத்தில் உள்ள விமான படை தளத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளது. இந்த தாக்குதல் 16 அல்லது 17ம் தேதி நடக்க கூடும்Õ என்று உளவு தகவல்கள் அடிப்படையில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், பாகிஸ்தான் ராணுவம் உஷாராகவில்லை. இது நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய ஆபத்து என்று அரசியல் நிபுணர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுபேற்கவில்லை. எனினும், தெரிக் இ தலிபான் பாகிஸ்தான் அமைப்புதான் காரணமாக இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது. தீவிரவாதிகளின் தாக்குதலில் அதிநவீன போர் விமானம் நாசமானதாக கூறப்படுகிறது. சேத விவரம் குறித்த விவரம் வெளியிடப்படவில்லை.

கருத்துகள் இல்லை: