புதன், 15 ஆகஸ்ட், 2012

நித்தி ஆட்களால் அறைக்குள் அடைபட்டார் மூத்த ஆதீனம்!

நித்தியானந்தா, தாம் மதுரையில் இல்லாத நேரத்தில்கூட, தமக்கு பிடிக்காதவர்களை மதுரை ஆதீனம் சந்திக்க கூடாது என்று செய்துவிட்டுப் போன ஏற்பாடுகள், பக்காவாகவே வேலை செய்கின்றன. மூத்த ஆதீனத்தை பார்ப்பதற்காக வந்திருந்த கர்நாடகா சாமியாரை சந்திக்காதபடி, மதுரை ஆதீனம் வெற்றிகரமாக தடுக்கப்பட்டார்.
மதுரை வந்த கர்நாடகா சாமியார், “மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், நித்தியானந்தா அடியாட்களால் சிறை வைக்கப்பட்டிருக்கிறார். அவரைப் பார்க்காமல் நான் இங்கிருந்து கிளம்ப மாட்டேன்” என்று மதுரையில் முகாமிட்டிருக்கிறார்.
கர்நாடகத்தில் இருந்து வந்துள்ள சாமியாரின் பெயர், ரிஷிகுமார். தம்மை மதுரைக்கு வருமாறு அழைத்ததே மூத்த ஆதீனம் அருணகிரிநாதர்தான் என்கிறார் இவர்.

இது கொஞ்சம் நிழலான சமாச்சாரமாக உள்ளது.
நித்தி கர்நாடகாவில் இருந்த கடைசி நாட்களில், இந்த ரிஷிகுமார்தான் நித்திக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார். நித்தி மதுரையில் இருந்து கிளம்பியவுடன், இவர் மதுரை ஆதீனத்தை தொடர்பு கொண்டதாகவும், இருவருமே சேர்ந்து நித்தி சுவாமிகளுக்கு எதிராக கூட்டணி வைத்துக் கொள்ள திட்டம் போட்டதாகவும் கூறுகிறார்கள்.
அதையடுத்தே தமது பரிவாரங்களுடன், இன்று மதுரை வந்து இறங்கினார் இந்தச் சாமிகள்.
நித்திதான் ஊரில் இல்லையே என்று வந்திறங்கிய இவர்களை உள்ளே விடாமல் நித்தியானந்தாவின் அடியாட்கள் தடுத்துள்ளனர். எட்டிப் பார்த்த முத்த ஆதீனத்தையும் வெளியே விடவில்லை. மடத்துக்கு வெளியே நின்று கர்நாடகா சுவாமிகள், நம்ம மதுரை சுவாமிகளை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றார்.
இப்படி எத்தனை பேரை பார்த்தவர்கள் நித்தியின் ஆட்கள்? அவர்கள், அருணகிரிநாதரின் செல்போனை பிடுங்கிக் கொண்டு, மூத்த ஆதீனத்தை அவரது சொந்த மடத்திலேயே தனி அறை ஒன்றில் அடைத்து விட்டனர்.
கர்நாடகா சாமியார் ரிஷிகுமாரும் அவரது ஆதரவாளர்களும் ஆதீனத்து மடத்தின் வாயிலில் அமர்ந்து சிறிது நேரம் மறியலில் ஈடுபட்டனர்.
“மதுரையில் தற்போது பரபரப்பாக நடைபெறும் கிரானைட் விவகாரம் போதாதென்று, இந்த சாமியார்களின் அட்டகாசம் வேறா” என்று தலையில் அடித்துக் கொண்ட மதுரை போலீஸ், மடத்து வாயிலுக்கு வந்து இந்த சாமியை சமாதானப்படுத்தினர்.
இப்போது, “மதுரை மூத்த ஆதீனம் அருணகிரிநாதரை சந்திக்காமல் கர்நாடகம் திரும்ப மாட்டேன்” என்று சபதம் போட்டுக்கொண்டு மதுரையில் முகாமிட்டுள்ளார் ரிஷிகுமார் சுவாமிகள். அருணகிரிநாதரை நித்தியின் ஆட்கள் அடைத்து வைத்துள்ளனர் என்று போலீஸில் புகாரும் கொடுத்துள்ளார்.
புகாரை பதிவு செய்வதா, இல்லையா என்று மேலிடத்துக்கு போன் மேல் போன் அடித்துக் கொண்டிருக்கிறார்கள் மதுரை போலீஸ்.

கருத்துகள் இல்லை: