வியாழன், 16 ஆகஸ்ட், 2012

வடகிழக்கு மாநிலத்தவர் 5 ஆயிரம் பேர் பெங்களூரிலிருந்து வெளியேற்றம்

பெங்களூர் :அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த 5 ஆயிரம் பேர் தாக்குதலுக்குப் பயந்து பெங்களூரை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளனர். இதனால் நேற்று பெங்களூர் ரயில் நிலையத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இது குறித்து  தகவல் அறிந்து பிரதமர் மன்மோகன் சிங், கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெளிமாநிலத்தவருக்கு உரிய பாதுகாப்பு  அளிக்க உத்தரவிட்டார். சாமில் கடந்த மாதம் போடோ பழங்குடியினருக்கும் வங்க தேசத்திலிருந்து சட்டவிரோதமாக அசாமில் குடியேறிய முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இது பெரும் கலவரமாக மாறியது. 77 பேர் கொல்லப்பட்டனர். 4 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். கலவரம் ஓய்ந்து பல நாட்கள் ஆகியும் 3 லட்சம் பேர் இன்னும் நிவாரண முகாம்களிலேயே தங்கியுள்ளனர். மீண்டும் தாக்குதலுக்கு ஆளாவோமோ என்ற பயத்தில் சொந்த கிராமங்களுக்கு திரும்ப தயங்கி வருகின்றனர்.
இந்நிலையில் அசாம் கலவரத்தை கண்டித்து மும்பையில் கடந்த வாரம் முஸ்லிம்கள் பேரணி நடத்தினர். இது வன்முறையில் முடிந்தது. வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
மும்பையை போல பெங்களூரிலும் அசாம் உள்பட வடகிழக்கு மாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என கடந்த சில நாட்களாக வதந்தி பரவியது. ஒரு சில இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதாக எஸ்எம்எஸ் பரவியது. இதையடுத்து ஊருக்கு திரும்புமாறு பலரது பெற்றோர்களிடமிருந்து போன்கள் வந்தன. இதனால் கலக்கமடைந்த வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் பெங்களூரை விட்டு வெளியேற தொடங்கினர். ரயில் நிலையங்களிலும், ஆம்னி பஸ்நிலையங்களிலும் நேற்று வடகிழக்கு மாநிலத்தவர் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சுமார் 5 ஆயிரம் பேர் பெங்களூரை விட்டு வெளியேற முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் இந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்த பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் உள்துறை அமைச்சர் ஷிண்டே ஆகியோர் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வடகிழக்கு மாநிலத்தவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டார். வடகிழக்கு மாநிலத்தவர் மீது எவ்வித தாக்குதலும் நடத்தப்படவில்லை, அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கப்படும் என ஜெகதீஷ் ஷெட்டர் உறுதி அளித்தார்.

கருத்துகள் இல்லை: