புதன், 15 ஆகஸ்ட், 2012

தாவூத் விருந்தில் பங்கேற்றேன்: சுப்ரீம் கோர்ட்டில் சஞ்சய்தத் ஒப்புதல்

புதுடில்லி: மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில், ஆறு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நடிகர் சஞ்சய் தத், உச்சநீதிமன்றத்தில் நேற்று நடந்த அப்பீல் மனுக்கள் மீதான விசாரணையின் போது, "நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், மும்பையில் கொடுத்த விருந்தில் பங்கேற்றது உண்மை தான். ஆனால், அவருடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை,'' என்று தெரிவித்துள்ளார்.
மும்பையில், கடந்த 1993ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி முதல் 13ம் தேதி வரை, தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இதில், 200 பேர் கொல்லப்பட்டனர். 713 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தடா நீதிமன்றம், 2007ம் ஆண்டு ஜூலை முதல் அக்டோபர் வரை தீர்ப்பு வழங்கியது. இதில், 12 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 78 பேருக்கு, மூன்று ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை, பலவிதமாக தண்டனை வழங்கப்பட்டது. நடிகர் சஞ்சய் தத், மும்பை தொடர் குண்டு வெடிப்பு சதி குற்றத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் தண்டனை பெற்றவர்கள் மற்றும் சி.பி.ஐ., தரப்பில் இருந்து, 110 அப்பீல் மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதன் மீதான விசாரணையை, உச்சநீதிமன்றம், கடந்த ஆண்டு நவம்பர் 1ம் தேதி முதல் துவக்கியுள்ளது.

இந்த சூழ்நிலையில், அப்பீல் மனுக்கள் மீதான விசாரணை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் சதாசிவம் மற்றும் பி.எஸ்.சவுகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் நேற்று நடந்தது. நடிகர் சஞ்சய் தத் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில், நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் அளித்த விருந்தில் பங்கேற்றதாக குறிப்பிட்டிருந்தார். இதை சுட்டிக் காட்டி நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, சஞ்சய் தத் சார்பில் ஆஜரான சீனியர் வக்கீல் ஹரீஷ் சால்வே, ""மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடப்பதற்கு முன்பு, மும்பையில் தாவூத் இப்ராஹிம் ஒரு விருந்து கொடுத்தார். அதில் இரண்டு திரைப்பட தயாரிப்பாளர்களுடன், சஞ்சய் தத் பங்கேறார். ஆனால், தாவூத்துடன் அவருக்கு எந்த தொடர்பும் கிடையாது. அதுபோல, இந்த வழக்கின் குற்றவாளியான டைகர் மேமனுடனும் சஞ்சய் தத்துக்கு எந்த தொடர்பும் இல்லை,'' என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: