சனி, 18 ஆகஸ்ட், 2012

மாணவிகளுடன் தொடர்பை கண்டித்த மனைவியை கொன்ற பேராசிரியருக்கு குண்டாஸ்

நாமக்கல்: பல பெண்களுடனான தொடர்பை கண்டித்த மனைவியை கொடூரமான முறையில் குத்தி கொலை செய்த கல்லூரி பேராசிரியர், குண்டர் சட்டத்தின் கீ்ழ் கைது செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்த நடுப்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன். இவரது மகள் விஜயலட்சுமிக்கும்(21), சென்னையில் கல்லூரி போராசிரியராக பணியாற்றி வந்த நடராஜன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
கல்லூரியில் படித்து வந்த விஜயலட்சுமி திருமணத்திற்கு பிறகு நாமக்கலில் உள்ள தாய் வீட்டில் தங்கி படித்து வந்தார். இந்த நிலையில் கணவன் நடராஜனை சந்திக்க சென்னை சென்ற விஜயலட்சுமி கொலை செய்யப்பட்டார்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில் விஜயலட்சுமியை அவரது கணவன் நடராஜன் கொலை செய்தது தெரியவந்தது. போலீஸ் விசாரணையில், நடராஜனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததை, விஜயலட்சுமி கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த நடராஜன் மனைவியை தந்திரமாக சென்னைக்கு வரவழைத்துள்ளார்.
சென்னையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறின் போது, விஜயலட்சுமியை கழுத்து, மார்பு, வயிறு உள்ளிட்ட 11 இடங்களில் நடராஜன் கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். அதன்பிறகு மனைவியின் உடலை புதைத்துவிட்டது தெரியவந்தது.
இவ்வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த நடராஜனை, போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கு தொடர்பாக, நடராஜனுடன் தொடர்பில் இருந்த சென்னை மேற்கு தாம்பரத்தை சேர்ந்த கீர்த்தினி, நடராஜனின் தந்தை நல்லுசாமி, தாயார் அமிர்தம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் மனைவியை கொடூரமாக கொலை செய்த நடராஜனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய, பரமத்தி போலீசார் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். அந்த பரிந்துரையை ஏற்ற கலெக்டர் குமரகுருபரன் அதற்கு அனுமதி அளித்தார். இதையடுத்து நடராஜன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் நடராஜனின் தங்கை ரேவதி, அவரது கணவர் தர்மலிங்கம் மற்றும் அவரது சித்தப்பாவும் ஓய்வு பெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டுமான சின்னப்பன் உட்பட பலரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: