ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

ஈரானில் பயங்கர பூகம்பம் இடிபாடுகளில் நசுங்கி 180 பேர் பலி

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
டெஹ்ரான்:  ஈரானில் நேற்று பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. கட்டிடங்கள் நொறுங்கி தரைமட்டமானதில் 180 பேர் பரிதாபமாக இறந்தனர். 1300க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பூகம்பம் அடிக்கடி ஏற்படும் பகுதிகளில் ஈரானும் ஒன்று. இங்கு குறைந்தபட்சம் தினமும் ஒரு நில அதிர்வாவது ஏற்படுகிறது. பெரும்பாலும் அதை மக்கள் உணர்வதில்லை. இந்நிலையில் நேற்று மாலை இந்திய நேரப்படி 5.33 மணிக்கு 6.4 ரிக்டர் அளவில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இதில் அஜர்பைஜான் மாகாணத்தின் ஈரானின் அஹார், ஹாரிஸ், வர்ஸகான் போன்ற நகரங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. இடிபாடுகளில் பலர் சிக்கி உயிருக்கு போராடினர்.


அடுத்தடுத்து பல முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நேற்று மாலையில் இருந்து இன்று விடிகாலை வரை மக்கள் வெளியிலேயே பதற்றத்துடன் பொழுது கழித்தனர். இந்த பூகம்பத்தில் 180 பேர் பலியானதாக இயற்கை பேரிடர் கமிட்டி தலைவர் கலீல் சயீ தெரிவித்தார். மேலும் 60 கிராமங்கள் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான வீடுகள் தரைமட்டமாயின. இதில் 1300க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கி இருக்கலாம் என்பதால், பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது. இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறுகையில், ஈரான் தலைநகர் டெஹ்ரானின் வடமேற்கு பகுதியில் உள்ள அஹார் மற்றும் ஹாரிஸ் நகரங்களுக்கு இடையில் பூகம்பம் மையம் கொண்டிருந்தது. முதலில் 6.4 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டது. அடுத்த 11 நிமிடங்கள் கழித்து மீண்டும் 6.3 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டது. அத்துடன் 10 முறை லேசான நில அதிர்வுகளும் ஏற்பட்டன என்று தெரிவித்துள்ளது. கடந்த 2003ம் ஆண்டு 6.6 ரிக்டர் அளவில் மிகப் பெரிய பூகம்பம் ஏற்பட்டது. அப்போது 26 ஆயிரம் பேர் பரிதாபமாக இறந்தனர். அதன்பிறகு நேற்று மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை: