புதன், 15 ஆகஸ்ட், 2012

கையெழுத்துப் பத்திரிகையிலிருந்து ட்விட்டர் வரை

உரையாடல் சுகம். உரையாடுவதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணமிருக்கிறது. ஒன்றை நாம் ஏற்றுக்கொள்கிறோமோ, ஆட்சேபிக்கிறோமோ.. எதுவாக இருந்தாலும் அதற்கு உரையாடல் அவசியம். 
உரையாடுவதற்கான மனப்போக்கு நமக்கு எப்போதும் வாய்ப்பதில்லை. அல்லது நம்மெதிரே உரையாடுவதற்கு எப்போதும் ஆள் கிடைப்பதில்லை. உரையாடல் பலருக்கும் ஒரு கட்டத்தில் சலித்து விடுகிறது. ஒருவேளை ஏற்கனவே உரையாடியதையே திரும்ப உரையாட வேண்டி இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது உரையாடலுக்காக செலுத்த வேண்டிய உழைப்பு அயர்ச்சியைத் தரலாம். எது எப்படியோ எல்லோருமே ஏதோ ஒரு காலக்கட்டத்தில் மற்றவர்களுடனான நம்முடைய உரையாடலை, ஏதோ ஒரு காரணத்தால் நிறுத்திக் கொள்கிறோம். இப்படிப்பட்ட நிலையில் எழுபத்தைந்து ஆண்டு காலமாகவே யாருடனேயோ, எதற்காகவோ எப்போதும் உரையாடிக் கொண்டேயிருப்பது எத்துணை பெரிய சாதனை?
கலைஞர் தன்னுடைய டீனேஜில் தன் சக மாணவர்களோடு உரையாடத் தொடங்கினார். தன்னைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளை அ முதல் ஃ வரை அலசினார். இத்தகைய உரையாடலுக்காகவே இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பினை தோற்றுவித்தார். அழகிரிசாமியின் அபாரப்பேச்சால் ஈர்க்கப்பட்டவர் தன் உரையாடலை கேட்போர் வசீகரிக்கும் வண்ணம் மெருகேற்றினார். தன்னுடைய அமைப்பினை மாணவர் மன்றமாக திராவிட இயக்கத்தின் சார்பு கொண்ட முதல் மாணவர் அமைப்பாக உருமாற்றினார். மன்றத்துக்காக ‘மாணவநேசன்’ என்கிற கையெழுத்துப் பத்திரிகையை தோற்றுவித்தார். தனக்கே தனக்கான அந்தப் பத்திரிகையில் எழுத்து வாயிலாக உரையாடத் தொடங்கினார்.
பிற்பாடு அந்த கையெழுத்துப் பத்திரிகையை ‘முரசொலி’ என்கிற பெயரில், அவ்வப்போது கட்டுரைகளை எழுதி துண்டுப் பிரசுரமாக, அச்சடித்து வினியோகிக்கத் தொடங்கினார். பின்னர்முரசொலிவார இதழாக மாறி, திருவாரூரில் இருந்து வெளிவரத் தொடங்கியது. சென்னைக்கு இடம்மாறிய பின்னர் நாளிதழாக வளர்ச்சியைக் கண்டது. அன்றிலிருந்து இன்றுவரை தன் உடன்பிறப்புகளோடுமுரசொலிவாயிலாக கலைஞர் உரையாடிக் கொண்டேதானிருக்கிறார். உடன்பிறப்புகளோடு மட்டுமின்றி தன்னை எதிரிகளாக கருதுபவர்களோடும், எதிர்க்கருத்து கொண்டிருப்பவர்களோடும், வசைபாடுபவர்களோடும், புறம் பேசுபவர்களோடும் கூட அவர் உரையாட மறுத்ததில்லை. கலைஞரே ஒருமுறை சொன்னார். “சவலைப்பிள்ளையாய் இருந்தாலும் முரசொலி என்னுடைய தலைச்சன் பிள்ளை”. மந்திரவாதியின் உயிர் ஏழு கடல், ஏழு மலை தாண்டி எங்கோ வசிக்கும் கிளியிடம் இருக்கிறது என்பார்கள். கலைஞரின் இதயம் என்றும் முரசொலியாக துடிக்கிறது. பிற்பாடு முரசொலியின் கிளைகளாக குங்குமம், முத்தாரம் என்று கிளைவிட்ட இதழ்கள் ஏராளம்.
கலைஞரின் உரையாடல் பத்திரிகைகளோடு மட்டும் நின்றுக் கொண்டதில்லை. உரையாடலுக்கு கிடைக்கும் எந்த வெளியையும் அவர் பயன்படுத்திக் கொள்ளத் தவறியதில்லை. ஓவியம், நாடகம், கவிதை, இலக்கியம், சினிமா, மேடை, சட்டமன்றம், தொலைக்காட்சி என்று எது கிடைத்தாலும், அதில் மற்றவர்களுடனான தன் உரையாடலை கூர்தீட்டிக் கொண்டார். கலைஞர் பங்குகொண்ட திரைப்படங்கள், மேடைநாடகங்கள், புத்தகங்கள் என்று எதை எடுத்துக் கொண்டாலும் அவை வெறும் பொழுதுபோக்குக்கு என்றில்லாமல், அவற்றினூடாக சமூகம் குறித்த தன் சிந்தனைகளை உரையாடலாக எப்போதும் நிகழ்த்திக்கொண்டே இருந்திருக்கிறார்.
வெளிப்படையாக பதினான்கு வயதில் தமிழ் சமூகத்தோடு உரையாடத் தொடங்கியவர், தன் வாழ்நாளோடே இணையாய் வளர்ந்துவரும் ஊடகத்தின் வடிவங்கள் அத்தனையையும் பயன்படுத்திக் கொள்ளத் தவறவில்லை. உதாரணத்துக்கு, தொண்ணூறுகளின் மத்தியில் ‘பேஜர்’ எனும் கருவி அறிமுகப்படுத்தப்பட்டபோது, ஆர்வமாக அதை வாங்கினார். கலைஞர் வாங்கிய பேஜரில் தமிழில் செய்திகள் வரும் (இயக்குனர் மணிவண்ணன் உள்ளிட்ட மிகச்சிலர்தான் தமிழ்பேஜர் பயன்படுத்தினார்கள் என்று நினைவு). கணினியில் தமிழ் உள்ளீடு குறித்து, ஆர்வமாக கேட்டுத் தெரிந்துக்கொள்வார். கம்ப்யூட்டர் பயன்படுத்தத் தெரிகிறது என்கிற காரணத்துக்காகவே நிறைய இளைஞர்களை தன்னுடைய நண்பர்களாக ஆக்கிக் கொண்டார்.
இன்றும் தாளில் எழுதுவதுதான் அவருடைய விருப்பமென்றாலும், தொழில்நுட்ப வளர்ச்சியை குறை சொல்லும் போக்கு அவரிடம் இல்லவே இல்லை. சமீபகாலமாக இணையத்தளங்களின் வளர்ச்சி, அவை சமூக வலைப்பின்னலாக உருவெடுத்து வருவது ஆகியவற்றையும் நண்பர்கள் மூலமாக அறிந்துக் கொண்டிருக்கிறார். வலைத்தளங்களில் எழுதப்படும் முக்கியமான கட்டுரைகளை அவர் பிரிண்ட் எடுத்து வாசிப்பதாக ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன். கலைஞர் தொலைக்காட்சி தொடங்கப்பட்ட புதிதில் கலைஞர் டி.வி. vs சன் டி.வி. மோதலையொட்டி, நாம் எழுதியிருந்த கட்டுரை ஒன்றினை (கலைஞர் தொ.கா.வில் பருத்திவீரன் திரைப்படம் திரையிடப்பட்டபோது) கலைஞர் வாசித்ததாக, அத்தொலைக்காட்சியில் பணிபுரிந்த நண்பர் ஒருவர் மூலமாக கேள்விப்பட்டிருந்தோம். சமீபத்தில் கூட ‘டெசோ’ குறித்து நாம் எழுதியிருந்த கட்டுரையை அச்செடுத்து, தன்னுடைய கட்சி சகாக்களிடம் கொடுத்து உரையாடியிருக்கிறார். ஃபேஸ்புக்கில் தன்னையும், கட்சியையும் பற்றி நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ எழுதப்படுவதையெல்லாம் நண்பர்கள் மூலம் அறிந்து வாசிக்கிறார்.
இப்போது உரையாடலுக்கான இந்த களத்தையும் அறிந்துக்கொண்டார் கலைஞர். எனவேதான் ட்விட்டர் இணையத்தளத்தில் தனது உரையாடலை தொடரும் வண்ணம் தன்னுடைய கணக்கினை தொடங்கியிருக்கிறார். தொடங்கிய முதல்நாளே ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலைஞரின் கணக்கை பின்தொடரத் தொடங்கியிருக்கிறார்கள். கலைஞரின் ட்விட்டர் கணக்கு : http://twitter.com/kalaignar89. கலைஞர் எதைத் தொட்டாலும் பொன் தான்.

எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாக கையெழுத்துப் பத்திரிகையில் தொடங்கிய கலைஞரின் உரையாடல், அவரது எண்பத்தி ஒன்பது வயதில் இணையத்தில் ட்விட்டர் கணக்கு வரை தொடர்கிறது. உரையாடலில் இவரளவுக்கு காதல் கொண்ட இன்னொரு மனிதரை நம்மால் காணமுடியுமா என்பதே சந்தேகம்.

கருத்துகள் இல்லை: