வியாழன், 5 ஜூலை, 2012

ஏழ்மையை உற்பத்தி செய்யும் வால்மார்ட் எங்களுக்கு தேவையில்லை

 இந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 8.81 டாலர் மட்டுமே கூலியாக வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் அங்கு பணிபுரியும் முதன்மை செயல் அலுவலருக்கு ஒரு மணி நேரத்திற்கு ஊதியமாக 8ஆயிரத்து 990 டாலர் வழங்கப்படுகிறது. இந்த மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனம் ஒரு நாட்டின் ஜனநாயகத்தை எப்படி சீர்குலைத்து ஆதிக்கம் செலுத்துகிறது என்பதற்கு இதுவே உதாரணம். வார்ல் மார்ட் கடந்த வருடம் அதன் நலன்களை பாது காக்க பிரச்சாரம் செய்த செலவு மட்டும் 430 கோடி டாலர் ஆகும்
 ஏழ்மையை உற்பத்தி செய்யும் மிகப்பெரிய வால்மார்ட் சில்லரை வர்த்தக நிறுவனம் எங்களுக்கு தேவையில்லை என்று அமெரிக்க லாஸ் ஏஞ்செல்ஸில் உள்ள பாரம் பரியமிக்க சீனாடவுனில் மிகப்பெரிய பேரணி நடைபெற்றது.
லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பண்பாடு மற்றும் வரலாற்று சிறப்புமிக்க சீனாடவுனில் புதியகிளையை துவங்க திட்டமிட்டு அதற்கான வேலைகளில் வால்மார்ட் இறங்கியுள்ளது. சுமார் 33 ஆயிரம் சதுரஅடியில் கட்டிடத்தை கட்டி அதில் கடையை திறக்க அனுமதி பெற்றுள்ளது. இதையறிந்த தெற்கு கலிபோர்னியா பகுதி மக்கள் வால்மார்ட் நிறுவனத்திற்கு சில்லரை வியாபாரத்தில் இப்பகுதியில் அனுமதி கொடுக்க கூடாது. அப்படி கொடுத்தால் இப்பகுதி மிகவும் பாதிக்கப்படும்.

குறிப்பாக இப்பகுதிகளில் உள்ள பல்வேறு தொழில்கள் அழிய நேரிடும். சிறுகடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்படும் நிலை உருவாகும். இதன் மூலம் ஏராளமான வேலை இழப்புகளை சந்திக்க நேரிடும். ஏற்கனவே அமெரிக்கா முழுவதும் வால்மார்ட் நிறுவனம் இருந்த இடங்களில் ஏற்பட்ட அனுபவம் என்பது மிகவும் கசப்பானது. எப்படியெல்லாம்கார்ப் பரேட் நிறுவனம் என்கிற அதிகாரத்தை பயன்படுத்தி நடுத்தரநிறுவனங்கள் மற்றும் மக்களின் வாழ்க்கையை சிதைத்திருக்கிறது என்பது கண்கூடாக இருக்கிறது.
மேலும் புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பது கானல் நீராகவே இருந்திருக்கிறது. காரணம் இந்நிறுவனத்தில் பெரும் பாலும்பகுதிநேரவேலையே அளிக்கப்படுகிறது. இங்கு உழைப்பு மட்டுமே பெரிய அளவில்சுரண்டப்படுகிறது. ஆனால் உழைப்புக்கான உரிய கூலி கிடைப்பதில்லை.

அதனை உத்தரவாதப்படுத்தும் வகையில் தற்போது வால்மார்ட் தனது நிறுவன செயல்பாடுகளை பல்வேறு வகையில் தனக்கு சாதகமாக மாற்றி அமைத்திருக்கிறது. குறிப்பாக வால்மார்ட் நிறுவனத்தில் விற்பனை செய்யப்படும் பொருட்களை பாக்கெட்டில் அடைத்து ஒழுங்கு படுத்தும் வேலையை துணை நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் கொடுத்து வருகிறது. அந்த நிறுவனங்கள் வேலையாட்களை தினக்கூலி அடிப்படையிலேயே எடுத்து வேலை வாங்குகின்றனர். இதனால் அவர்களுக்குரிய தொழிலாளர் நல உரிமைகள் மறுக்கப்படுகிறது. இதன் மூலம் அதிக லாபத்தை மட்டுமே அந்நிறுவனம் அடைகிறது.
மறுபுறம் அதில் வேலைபார்க்கும் தொழிலாளர்கள் எப்போதுமே வறுமையின் பிடியிலேயே இருக்கும் படியும் பார்த்துக்கொள்கிறது. ஒட்டுமொத்தத்தில் வால்மார்ட் நிறுவனத்தின் மிக உயர்ந்த உற்பத்தி என்பதே நாட்டில் ஏழ்மையை உற்பத்தி செய்வதாகவே இருக்கிறது. அதனால் அந்த நிறுவனத்தை கலாச்சார பாரம்பரியம் மிகுந்த சீனாடவுனில் திறக்க அனுமதிக்க மாட்டோம் என்று போராட்டக்குழுவினர் தெரிவிக்கின்றனர். முன்னதாக லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் சனிக்கிழமையன்று (ஜூன் 30)பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற எழுச்சிமிகு பேரணி நடைபெற்றது. பேரணியில் வால்மார்ட் நிறுவனத்திற்கு எதிராக மக்கள் கோஷங்களை ஏழுப்பினர். குறிப்பாக கலிபோர்னியா பகுதியை விட்டே வால்மாட்டை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

ஏழ்மையை விற்பனை செய்வதை வால்மார்ட் நிறுத்தும் வரை அந்த நிறுவனம் எங்களுக்கு தேவையில்லைஒர சதவிகிதத்தினரின் நலனுக்காக 99 சதவிகித மக்களை காயப்படுத்தும் வால்மார்ட் நிறுவனத்தை நாங்கள் இங்கு அனுமதிக்க மாட்டோம் என்று லாஸ்ஏஞ்சல்ஸ் மாகாணத்தின் தொழிற்சங்க செயல் தலைவரும், பொருளாளருமான மரியா இலினா டூரோஸ் தெரிவித்தார். வார்மார்ட் நிறுவனம் வந்தால் அது சிறுவணிகத்தை விழுங்கிவிடும். அதன் மூலம் நிறைய வேலை இழப்புகள் ஏற்படும், இதயமற்ற வகையில் நடந்து கொள்ளும் அந்நிறுவனம் எங்களுக்கு தேவையில்லை என்று சமவளர்ச்சி குழும உறுப்பினர் கிங் ஜிங் கூறினார்.
வால்மார்ட் நிறுவனம் தனது லாப வளர்ச்சி குறையாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறது. அதற்காக எதைவேண்டுமானாலும் செய்யும். அதன்படியே மெக்சிகன் வழங்கிய மானியத்தில் ஏராளமான முறைகேடுகளை செய்ததாக இந்நிறுவனத்தின் மீது பல் வேறு குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கிறது. ஆனாலும் கடந்த ஏப்ரல் மாதம் முடிந்த நிலையில் இந்நிறுவனத்தின் லாபம் மட்டும் 374 கோடி டாலர் ஆகும் என்று லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 8.81 டாலர் மட்டுமே கூலியாக வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் அங்கு பணிபுரியும் முதன்மை செயல் அலுவலருக்கு ஒரு மணி நேரத்திற்கு ஊதியமாக 8ஆயிரத்து 990 டாலர் வழங்கப்படுகிறது. இந்த மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனம் ஒரு நாட்டின் ஜனநாயகத்தை எப்படி சீர்குலைத்து ஆதிக்கம் செலுத்துகிறது என்பதற்கு இதுவே உதாரணம். வார்ல் மார்ட் கடந்த வருடம் அதன் நலன்களை பாது காக்க பிரச்சாரம் செய்த செலவு மட்டும் 430 கோடி டாலர் ஆகும்.

வால்மார்ட் நிறுவனத்தின் உரிமையாளர் வால்டனின் குடும்ப சொத்தின் மதிப்பு அமெரிக்காவில் வாழும் 40 சதவிகித மக்களின் மொத்த சொத்து மதிப்பை விட கூடுதலாக இருக்கிறது என போர்பர்ஸ் பத்திரிகை சமீபத்தில் புள்ளிவிபரத்தை வெளியிட்டிருந்தது.

இதே போல் இந்நிறுவனம் கலிபோர்னியா பகுதியில் உள்ள அரசியல் தலைவர்கள் தங்கள் நிறுவனத்திற்கு சாதகமாக செயல்படும் வகையில் 2011ம் ஆண்டில் மட்டும் 320 கோடி டாலர் செலவிட்டிருக்கிறது. இதே போல் 2002 முதல் 2011 வரை தேசிய அளவில் அமெரிக்க அரசியல் தலைவர்களுக்கு மட்டும் 1230 கோடி டாலர் செலவிட்டுள்ளது என புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது.

2007ம் ஆண்டு புள்ளிவிபரத்தின் படி அமெரிக்காவில் கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தும் சில்லரை வணிக நிறுவனங்களில் 4லட்சத்து 26 ஆயிரம் பேர் வேலை பார்த்திருக்கின்றனர். ஆனால் தற்போது 3 லட்சத்து 90 ஆயிரம் பேர் மட்டுமே வேலைபார்த்து வருகின்றனர். ஆனால் நிறுவனங்களின் எண்ணிக்கை மட்டும் அதிகரித்திருக்கிறது. வேலைவாய்ப்பு குறைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: