திங்கள், 2 ஜூலை, 2012

உதயநிதியும் தயாநிதியும் புடைசூழ சிறை செல்வாய் உடன்பிறப்பே


போரட்டத்தில் கைதாகி சிறை செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாது: கலைஞர்  உத்தரவு  (உதயநிதி தயாநிதி குணநிதி மேலும் அந்த நிதி இந்த நிதி அல்லாம் கூட ஜெயிலு போவாங்கள் என்று திராவிட தொண்டன் இன்னும் நம்புகிறான் )

சென்னை: தமிழகம் முழுவதும் ஜுலை 4ம் தேதி நடக்கும்அறப்போராட்டத்தில் கைதாகி சிறைக்குச் செல்லும் திமுகவினர் யாரும் ஜாமீன் கேட்க கூடாதுஅக் கட்சியின் தலைவர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
திமுகவினர் மீதான அதிமுக அரசின் அடக்குமுறையை கண்டித்து வரும் 4ம் தேதி திமுக சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடக்க உள்ளது. காஞ்சீபுரம் மாவட்ட தி.மு.க. சார்பில் சிறை நிரப்பும் போராட்டத்துக்கான விளக்க கூட்டம் தாம்பரம் சண்முகம் சாலையில் நடந்தது.
கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். இக் கூட்டத்தில் கருணாநிதி பேசுகையில்,
திமுகவின் வரலாறு போராட்ட வரலாறு. ஆட்சிக்காக பிறந்தவர்கள் அல்ல நாங்கள். ஆட்சிக்காக பாடுபவர்கள் அல்ல நாங்கள். ஆட்சியில் இருந்தால் மக்களுக்கு பணியாற்றுவோம். ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்கள் பணியாற்றுவோம். என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற வாக்கிற்கு இணங்க, தொடர்ந்து இளம் வயது முதல் இன்று வரை, பெரியார் காலமாக இருந்தாலும், அண்ணா காலமாக இருந்தாலும், தொடர்ந்து மக்கள் பணியாற்றி வருகிறோம்.

தொடர்ந்து நாங்கள் நடத்துகின்ற இந்த இயக்கம் மக்கள் பிரச்சனைகளுக்காக, அதுவும் திராவிட மக்களுக்காக, அடிமைப்படுக் கிடக்கின்ற ஒரு சமுதாயத்தை எழுச்சி பெற செய்வதற்காக தொடங்கிய இயக்கம்தான் திராவிட இயக்கம்.

திராவிட இயக்கம் தற்போது திமுகவாக இருந்தாலும், திராவிடர் கழகம், நீதிக் கட்சி என்று பல்வேறு நிலைகளில் திராவிடர்களை எழுச்சி பெறச் செய்தது. அண்ணா ஆட்சியில் இருந்த காலத்திலும், அவரது மறைவுக்கு பிறகும், அந்த ஆட்சியை தொடர்ந்து நானே 5 முறை முதல்வராக இருந்து நடத்தி பல தியாகங்களை, போராட்டங்களில் ஈடுபட்டு, நெருக்கடி கால கொடுமைகளை அனுபவித்தோம்.

இன்று எனக்கு முன்னால் நாங்கள் எதற்கும் தயார். நெருப்பில் இறங்கவா, தொடர்ந்து பட்டினி கிடக்கவா என்று கூறும் வீர வாலிபர்களை, திராவிட செல்வங்களை திமுக பெற்றிருக்கிறது. இந்த போராட்டம் ஏன்?. எப்படி நடத்துவது? என்பதாக இந்த கூட்டம் நடக்கிறது.

முதலிலேயே, மிகுந்த கவனத்துடன் இந்த போராட்டத்தை அறப்போராட்டம் என்றேன். அறப்போராட்டம் என்றால், அகிம்சா போராட்டம் ஆகும். நம்மை நாமே தியாகத்திற்கு உட்படுத்துகிற போராட்டம் ஆகும். வன்முறை போராட்டம் என்பது பிறரை தாக்கும் போராட்டம் ஆகும்.
அறப்போராட்டம் தான் நடத்த உள்ளோம். இதில், சிறிதும் வன்முறை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வன்முறையை நாம் கற்றதும் இல்லை; அதை நாம் எண்ணிப் பார்த்ததுமில்லை.

இந்த போராட்டத்தில் அறவழியைத்தான், அமைதி வழியைத்தான், அண்ணா வழியைத்தான் கடைபிடிப்போம். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற அண்ணாவின் தாரக மந்திரத்தை கடைபிடிப்போம். நான்கு நான்கு பேராக அணிவகுத்து களத்திலே நின்று, பொதுமக்களுக்கு இன்னல் வராமல், போலீசுக்கும் சிக்கல் வராமல் எல்லோருக்கும் அமைதியான வழியில் போராட்டம் நடத்த வேண்டும்.
போராட்டத்தில் ஒரு கல்லை அவர்களாகவே வீசி, அதை நாம் வீசியதாக நம்மை தண்டிக்க நினைப்பர். இந்த பூச்சாண்டிக்கெல்லாம் பயப்படுவது திமுக இல்லை. பொதுமக்கள் மத்தியில் அவச் சொல் ஏற்படாமல் நாம் பாரத்துக் கொள்ள வேண்டும்.

உங்களை நான் கேட்டுக்கொள்வது எல்லாம், உறுதியாக களம் கண்டு நமது போராட்டத்தை அறவழியில் நடத்த வேண்டும். ஏனென்றால், இப்போதே ஒரு தவறு நடக்கலாம். தானே ஒரு கல்லை தூக்கி போட்டுவிட்டு வன்முறை வழக்கு போடலாமா? என்று இன்றைய ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். போராட்டத்தில் இவ்வளவு பேர், அவ்வளவு பேர் கலந்து கொள்கிறார்கள் என்று மாவட்ட நிர்வாகிகள் கூறினர். அவர்கள் பேசியவாறு நடக்க வேண்டும். சொல் வேறு; செயல் வேறு என்று இருக்கக் கூடாது. சொன்ன சொல்லை நாம் காப்பாற்ற வேண்டும்.

6 மாதம் சிறையில் இருப்பேன் என்று கூறிவிட்டு, ஜெயிலுக்கு போனால் மறுநாளே ஜாமீன் கேட்டக் கூடாது. போராட்டத்தில் கைதாகி ஜெயிலுக்கு போனால் யாரும் ஜாமீன் கேட்க கூடாது. நாம் தியாக திருவிளக்காய், எதையும் தாங்கும் இதயமாய், அண்ணாவின் தம்பியாய், பெரியாரின் சீடராய் அனைவரும் இருக்க வேண்டும்.

எந்த வழக்கு போட்டாலும் அதை பற்றி கவலைப்படாமல், சிறுத்தை கூட்டமாக, சிங்க கூட்டமாக இருக்க வேண்டும். நாம் நடத்தும் போராட்டத்தை யாராவது அடக்க நினைத்தால், அவர்கள்தான் அடங்கிப் போக வேண்டும்.
இங்கு பேசிய நிர்வாகிகள், தொண்டர்களை தூண்டிவிடும் வகையில், முறுக்கேற்றும் வகையில் பேசினர். பேசியதோடு இல்லாமல் கடைசி வரை களத்தில் நின்று போராடவும் வேண்டும்.

நாம் போராட்டத்தை அறவழியில் நடத்துவோம். அமைதி வழியில் நடத்துவோம். எந்த வகையிலும், அந்த போராட்டத்தில் வன்முறை தலைகாட்டக்கூடாது. இன்றைக்கு தமிழகத்தில் நடக்கும் ஆட்சி பற்றி இங்கே கூறினார்கள். ஆட்சி எப்படி நடக்கிறது என்று உங்களுக்கே தெரியும்.
போலீசாரும், அரசு அதிகாரிகளும் எங்கள் போராட்டத்தின் போது எச்சரிக்கையாக நடக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நம்முடைய இந்த போராட்டம் இந்த ஆட்சிக்கு விடை கொடுக்க அல்ல. புத்தி சொல்ல; அறிவு சொல்ல. நம் இன உணர்வை வெளிப்படுத்தும் வகையில், ஆரிய மாயையை அடியோடு ஒழிக்கும் வகையில் போராட்டம் அமைய வேண்டும்.
வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் இந்த போராட்டத்தில் எழுச்சியுடன் கலந்து கொள்ள வேண்டும். இந்த அறவழி போராட்டத்திற்கு முதல் வரிசை, இரண்டாவது வரிசையில் இல்லாவிட்டாலும், கடைசி வரிசையிலாவது இந்த கருணாநிதி இருப்பேன் என்றார்

கருத்துகள் இல்லை: