வெள்ளி, 6 ஜூலை, 2012

பெரியார் தி.க., பிரமுகர் சுட்டுக்கொலை:தலையை தனியாக வெட்டியும் கொடூரம்

ஓசூர்:உத்தனப்பள்ளி அருகே, பெரியார் தி.க., மாவட்ட அமைப்பாளரை, டாடா சுமோ மற்றும் பைக்கில் வந்த, 20 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியால் சுட்டும், தலையை அரிவாளால் கொடூரமாக வெட்டியும் வீசிச் சென்ற சம்பவம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அடுத்த பாலேபுரத்தைச் சேர்ந்தவர் பழனி,47. இவரின் மனைவி முருகம்மாள். இவர்கள் மகன் வாஞ்சிநாதன்,25. பழனி ஆரம்பத்தில், கிருஷ்ணகிரி அருகே சந்தூர் கிராமத்தில் வசித்தார்.
விவசாயி:பத்து ஆண்டுகளுக்கு முன், உத்தனப்பள்ளி அடுத்த அலேசீபம் பாலேபுரத்தில் குடியேறி, விவசாயம் செய்து வந்தார். பெரியார் தி.க., கட்சியின் மாவட்ட அமைப்பாளராக, தீவிரமாக இயக்கப் பணியில் ஈடுபட்டு வந்தார்.நேற்று அதிகாலை, 6 மணிக்கு பழனியும், மகன் வாஞ்சிநாதனும், விவசாயத் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்ச சென்றனர். வாஞ்சிநாதன் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். பழனி, கிணறு அருகே நின்று கொண்டிருந்தார்.அப்போது, டாடா சுமோ மற்றும் பைக்குகளில் வந்த, 20 பேர் கொண்ட கும்பல் தோட்டத்தில் புகுந்து, பழனியை நோக்கி சென்றனர். அதில், நான்கு பேர் மட்டும் பழனியிடம் சென்று பேசினர். மற்றவர்கள் தூரமாக நின்றனர்.


பழனியிடம் பேசிய நான்கு பேரில் ஒருவர், மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, பழனியின் மார்பு மற்றும் கை பகுதியில், மூன்று முறை சுட்டார். மயங்கி விழுந்த பழனியை அந்த கும்பல், சூழ்ந்து நின்று அரிவாளால் தலையை வெட்டி தனியாக எடுத்து, உடல் கிடந்த இடத்தில் இருந்து, 100 மீ., தொலைவில் இருந்த கால்வாயில் வீசினர். தந்தையை 20க்கும் மேற்பட்ட கும்பல் கொலை செய்வதை பார்த்த வாஞ்சிநாதன், கூச்சல் போட்டார்.
தப்பி ஓட்டம்:கும்பல் அவரையும் விரட்டியது. அவர், அங்கிருந்து தப்பியோடினார். கொலை கும்பல் வந்த வாகனங்களில் தப்பிச் சென்றனர். தகவல் அறிந்த அப்பகுதி மக்கள், சம்பவ இடத்தில் குவிந்தனர்.கிருஷ்ணகிரி போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று, வாஞ்சிநாதன் மற்றும் உறவினர்களிடம் விசாரித்தனர். பதற்றத்தை தணிக்க, 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பலியான பழனிமாஜி நக்சல்:கொலையான பழனி, ஆரம்ப காலத்தில் நக்சல் இயக்கத்தில் இருந்தவர். 2002ம் ஆண்டு, தளி தி.மு.க., யூனியன் சேர்மன் வெங்கடேசை, நக்சல் இயக்கத்தினர் துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்தனர்.இந்த கொலை வழக்கில் பழனி முக்கிய குற்றவாளி. அதே பாணியில், இந்த கொலையை செய்துள்ளனர். அதேபோல், ராயக்கோட்டை அருகே உறவினர் சின்னக்கண்ணு மனைவி முனியம்மா கொலை வழக்கிலும், பழனி குற்றவாளியாக உள்ளார்.

சில மாதங்களுக்கு முன், அலேசீபம் அருகே நீலகிரியில், பெரியார் தி.க.,வினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் அரிவாளால் வெட்டினர்.இரண்டு கொலை வழக்கு மற்றும் மோதல் வழக்கில் தொடர்புடைய பழனியை, இந்த சம்பவங்களில் தொடர்புடையவர்கள், கூலிப்படையை ஏவி கொலை செய்திருக்க வாய்ப்பு உள்ளதால், அதுகுறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்

கருத்துகள் இல்லை: