செவ்வாய், 3 ஜூலை, 2012

அ.தி.மு.க அமைச்சர்கள்: குனிந்து பார்த்தால்தான் கஷ்டம் புரியும்



கார்டனில் காத்திருக்கிறது பஞ்சாயத்து! குதித்த அமைச்சர்கள் கொதிக்கிறார்கள்!!

 அம்மாவின் கார் தெரிந்ததும் உடல் குலுங்க ஓடும் ஓட்டம் உள்ளதே.. அதற்கு இழப்பீடு கிடையாதா?

Viruvirupu
முதல்வர் ஜெயலலிதாவுக்காக மற்றொரு பஞ்சாயத்து காத்திருக்கிறது என்கிறார்கள் அ.தி.மு.க. வட்டாரங்களில். இந்த விவகாரத்தில், குறைந்தது 6 மாவட்டங்களில் மா.செ.க்கள் அல்லது அமைச்சர்கள் வசமாக சிக்கிக் கொள்ளும் விதத்தில் தகவல்கள் உள்ளன என்கிறார்கள். இதில் தொடர்புடைய தொகை மட்டும் ரூ10 கோடிக்கு குறையாது என்று அடித்துச் சொல்கிறார்கள்.
மாவட்டங்கள் தோறும் சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களை நிரப்பும் நடைமுறையில் விளையாடிய பணம் இது.

இன்றைய தேதியில், இந்த பணியிடத்துக்கான விலைப் பட்டியல், 2 லட்சத்தில் இருந்து ரூ3 லட்சம் வரை உள்ளது. சம்மந்தப்பட்ட ‘பெரிய கை’யில் நேரடியாக கொடுத்தால், ரூ2 லட்சத்துடன் முடிந்து விடும். இடையே தரகர்களை வைத்துக் கொண்டால், எத்தனை கைகள் மாறுகின்றன என்பதைப் பொறுத்து ரூ3 லட்சம்வரை கைமாறியுள்ளது.
சில மாவட்டங்களில், 2,000 பணியிடங்கள்வரை நிரப்பப்பட வேண்டும் என்றால், அனைத்து மாவட்டங்களிலும், உள்ள பணியிடங்களை, 2 லட்சம் வீதம் கணக்கிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.
இதில் என்ன சிக்கல்?
வழமையான வசூல்தானே என்று கரை வேட்டிகள் கலெக்ஷனை முடித்து, பட்டியலை தயாராக வைத்துள்ள நிலையில், சில கலெக்டர்கள் முட்டுக்கட்டை போடுகிறார்கள். “தகுதி அடிப்படையில்தான் பணியிடங்கள் நிரப்பப்படும்” என்று கூறி அதிர வைக்கிறார்கள் அவர்கள்.
விருதுநகர் கலெக்டர்தான், ஏதோ நாட்டை திருத்தப் போவதாக ‘நேர்மை, கருமை, எருமை’ என்று ‘மெரிட்டில் பதவி’ நடைமுறையை துவங்கினார் என்று கொதிக்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். அதையடுத்து, வேறு சில மாவட்ட கலெக்டர்களும், ‘தகுதி உடையவர்களுக்கு பணி’ என்கிறார்களாம்.
இதையடுத்து, மாவட்ட நிர்வாகங்களுக்கும், மாண்புமிகுக்களுக்கும் இடையே ஏற்பட்ட முறுகல்தான், பஞ்சாயத்துக்காக கார்டன் சென்றிருக்கிறது. இதற்குள் உளவுத்துறை வேறு புகுந்து, ஒவ்வொரு ‘பெரிய புள்ளியும்’ எத்தனை ‘சி’ கலெக்ட் பண்ணியிருக்கிறார் என அனுப்பிய ரிப்போர்ட்டும் கார்டனில் காத்திருக்கிறது.
அமைச்சர்களுக்கு கோபம் வருவது இயல்புதான். பணத்தைக் கொட்டி, எம்.எல்.ஏ. சீட் வாங்கி… வேறு விதத்தில் கவனித்து அமைச்சராகி… எவ்வளவு முதலீடு செய்யப்பட்டது என்பது கலெக்டர்களுக்கு தெரியுமா?
அட, அதைத்தான் விடுங்கள். குச்சி ஐஸ் விற்கும் ஆளுக்குப் பின்னால் ஓடும் சிறுவர்கள்போல, தலைமைச் செயலகத்தின் போட்டிக்கோவில் அம்மாவின் கார் தெரிந்ததும் உடல் குலுங்க ஓடும் ஓட்டம் உள்ளதே.. அதற்கு இழப்பீடு கிடையாதா?
அமைச்சு செயலக பியூன்களே, “இன்னிக்கு நம்மாள் (அமைச்சர்) முன்னாடி ஓடி ஜெயிப்பாரு.. என்ன பெட்?” என்று தத்தமது அமைச்சர்களை வைத்து கிண்டல் அடிக்கிறார்களே.. அதையும் தாங்கிக் கொண்டு, கூச்சத்தைப் பார்க்காமல் குதித்து ஓடுவதற்காவது, இழப்பீடு கிடையாதா?
மெரிட்டில் வந்து, சீட்டில் இருக்கும் கலெக்டர்களுக்கு புரியுமா இது?
உடலை ஆங்கில எழுத்து ‘C’ போல வளைத்து, ஒரு கையால் வாயைப் பொத்தி, மற்றைய கையை நெஞ்சில் வைத்துக் கொண்டு, 30 நிமிடங்கள் ஒரேயிடத்தில் நின்று பாருங்கள்.. கஷ்டம் தெரியும். அதுவும் ‘உத்தரவு வாங்கிக்கிறேங்க’ என்று சொல்லிவிட்டு, அதே ‘C’ பொசிஷனில் பின்னோக்கி நகர்ந்து செல்ல வேண்டும்.
யாராவது ஒரு கலெக்டராவது, மேலேயுள்ள விசித்திர எக்சர்சைஸை செய்து காட்ட முடியுமா? பழக்கம் இல்லாவிட்டால், இடுப்பு சுளுக்கிக் கொள்ளும் சார்!
இதெல்லாம், கழைக்கூத்தாடியாக கரணம் போட்டு, சம்பாதிக்கும் காசுங்க. மாண்புமிகுகளின் வயிற்றில் அடிக்காதீங்க கலெக்டர்களே
குனிந்து பார்த்தால்தான் குனியும் கஷ்டம் புரியும் 

கருத்துகள் இல்லை: