புதன், 4 ஜூலை, 2012

போராட்டம் – சிறை! ஒரு பெண் தோழரின் அனுபவம்!!

காலை 11 மணியளவில் DPI அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம். காலை 10.30 மணி வரை ஆர்ப்பாட்ட இடத்தில் எந்த ஒரு சலனமும் இல்லை. ஆனால், போலிஸ்காரனுக்க மட்டும் படு உஷாராக இருப்பது தெரிந்தது. எப்படி?
நான் 10.30 மணிக்கு DPIஅலுவலகம் முன்பு சென்று தோழர்கள் இருக்கீறார்களா? என்று சுற்றம் முற்றும் பார்த்தேன். யரோ என்னை மெதுவாக அழைப்பது காதில் விழுந்த்து. அவரிடம் சென்றேன். எங்க போறீங்கனு யாரவது கேட்டால், +1 புத்தகம் வாங்க போறோமுனு சொல்லனுமுனு முடிவு செய்து உள்ளே சென்றோம்.

வெளியில் எந்த இடத்தில் ஆர்ப்பாட்டம் தொடங்கும் என்பது எங்களுக்கு தெரியவில்லை. ஆகையால், அலுவலகம் முன் இருந்த பஸ் நிறுத்தத்தில் அமர்ந்து கொண்டோம். ஒரு போலிஸ்காரர் அருகில் வந்து, ” மேடம் எங்க போகணும்” என்றார். எங்களில் ஒருவர் 17E பஸ்சுக்கு போகணும்னு சமாளித்தோம்.
நாங்கள் சொன்ன பஸ்சும் வந்தது. அந்த போலிஸ்காரர், எங்களிடம் வந்து,”மேடம் நீங்க சொன்ன பஸ் வந்து விட்டது. ஏறுங்கள்” என்றார். அதற்கு நாங்கள்,” இது டீலக்ஸ் பஸ், சாதாரண பஸ்ல தான் போகணும்” என்று சொல்லிக் கொண்டே அங்கிருந்து நகர்ந்து விட்டோம். இல்லையென்றால், டிக்கட் எடுத்து அவரே எங்களை பஸ்சில் ஏற்றி விட்டுவிடுவார் என்ற பயத்தில்தான்!!!
நாங்கள் இருந்த இடத்தில் இருந்து 100 அடி தூரத்தில் தான் அதிரும்படியான முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் தொடங்கியது. பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் மற்றும் முதியவர்கள் என அனைவரும் கலந்து கொண்டதால், 150 பேரே, 1000 பேருக்கு சமமாக முழக்கம் இட்டோம்.
அரசுடமையாக்கு, அரசுடமையாக்கு!
தனியார் பள்ளிகள், கல்லூரிகளை
அரசுடமையாக்கு, அரசுடமையாக்கு!
பெண்-தோழர்-சிறை-அனுபவம்உடனே, வந்துவிட்டனர். போலிஸ்காரர்கள் . கலைந்து விடக் கோரி சுற்றி நின்று சமாதானம் பேசினர். அவர்கள் பேச்சுக்கு மயங்க ஆட்கள் கிடையாது. அது தெரிந்தவுடன்,  குண்டுகட்டாக பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் வேனில் ஏற்ற எத்தனித்தனர். குறிப்பாக, போலிஸ்காரர்களின் பயமே அங்கு வெளிப்பட்டது. அதில் ஒரு போலிஸ்காரன்,” எவ்வளவோ, கட்சிகாரனுங்க ஆர்ப்பாட்டம் பண்றானுக, எல்லாம் வெள்ளயும் சள்ளயுமா ஒதுங்கி நிப்பானுங்க, இவனுங்க எங்க இருந்து தான் வரானுங்கனே தெரியமாட்டேங்குது” என்று தலையில் கை வைத்து புலம்பியது தெரிந்தது. கடைசியில்,பெண்களிடமும் வந்து, ”நீங்களாவது வந்து ஏறுங்க” என்றவுடன், நாங்கள் எங்கள் தலைமையிடம் சென்று சொல்லுங்கள் என்றோம். ”இதுங்க, அவனுகளுக்கு மேலே இருக்கு” என்று உறுமினார்.
உணர்வுபூர்வமாக போரடிய தோழர்கள், மாணவர்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர் ஆகிய எங்களை, ”பொம்பளையா இவளுங்க, தேவிடியா முண்டைகள் மயிரப்பிடித்து ஏத்து” என்று வலுக்காட்டாயமாக இழுத்து, குழந்தைகளின் கழுத்தை மடக்கி, வண்டியில் தள்ளினர்.
ஆனால், எதிர்பார்த்தபடி எளிதில் அடக்கி ஏற்ற முடியவில்லை, அதனால், பகிரங்கமாக அடிக்க முடியாமல், பெண்களை மிகவும் கீழ்த்தரமாக, நயவஞ்சகமாக, கேவலமான முறையில் அசிங்கப்படுத்தினர். பெண் போலிஸை விட்டு, துணிகளை உருவி, முடியினை இழுந்து, குழந்தைகளை பிடுங்கி ஒருவரை நான்கு பேர் இழுப்பது, என வெறி செயல்களை கட்டவிழ்த்து விட்டனர். இதனால், வெளி காயம் ஆகாமல், உள் காயம், கை தூக்க முடியாத வலி,”உடம்பெல்லாம் வலி, எங்க வலின்னு சொல்ல முடியல ” அதிர்ச்சியில் ஒரு தோழருக்கு மாதவிலக்கு வந்தது. அதை கண்டு உறைந்து போனோம்.
இந்த கொடுமைகள் நடுவே, தோழர்கள் எந்த தொய்வும் இன்றி புதிய முழக்கங்களுடன் போரட்டத்தை மேற்கொண்டு எடுத்து சென்றனர். போலிசு குதித்தது.
பெண்-தோழர்-சிறை-அனுபவம்‘ஏய், என்ன பார்த்துக் கொண்டு இருக்கிற, அவங்கள இழுத்து தூக்கி ஏத்து” என்று பெண் போலிசை முறைத்தனர்.
இதற்கு, பதில் தாக்குதல் எங்களுக்கு தெரியும். ஆனால், அமைப்பு கட்டுப்பாடு கருதி கவனத்துடன் செயல்பட்டோம். பதிலடி எதுவும் தராமல், இழுத்த, இழுப்புக்கு செல்லாததே, அவர்களால் தாங்க முடியவில்லையே.
அதன் நடுவிலும், அவர்களின் நயவஞ்சகமாக வேலையை அரங்கேற்றினர். எங்களை இழுப்பது மாதிரி திடீரென விடுவது, இதில், நாங்கள் மாறி, மாறி விழுந்தோம். எழுந்து நிற்கவே முடியாமல், தவித்தோம்.
முழக்கத்தின் மத்தியில், ”கத்துங்க, கத்துங்க வேற வேலை என்ன இருக்குது” என்று நக்கலடித்தனர். போலிஸ் ரவுடிகள் மப்டியில் எங்கள் வளையத்தின் உள்ளே நுழைந்து எங்களை பின்னாலிருந்து தள்ளினர்.
ஆனாலும், பு.மா.இ.மு வின் சங்கிலி மிகவும் வலிமையானதாக இருந்தது அவர்களால், எளிதில் நெருங்க முடியவில்லை. போரட்ட நேரம் அதிகரித்ததற்கு இதுவும் முக்கிய காரணம்.
அனைத்தையும், பொது மக்களும், பார்த்துக் கொண்டே தான் இருந்தார்கள். குழந்தைகள், பெண்களை தள்ளும் போது கவலை அடைந்தனர். பத்திரிகைகாரர்கள் உட்பட. ஒருவழியாக தள்ளிவிட்டார்கள் வண்டியில்.
அவர்களுக்கு தலைவலியும் இங்கிருந்து தான் தொடங்கியது. ஒரு மண்டபத்தில் வைத்தார்கள். மண்டபத்தில் தோழர்கள் சோர்வுடன் காணப்பட்டனர். குழந்தைகள் அழுதனர். குழந்தைகளுக்கு பிஸ்கட், பால் போராடிப் பெற்றோம்.
பெண்-தோழர்-சிறை-அனுபவம்புமாஇமு தோழர்கள் சிறிது நேரத்தில் அங்கேயே நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். மாலையில் வழக்குரைஞர்கள், பேசினர். அனைவரையும் ரிமெண்ட் செய்து இருக்கிறார்கள் என்று கூறினார்கள். ஜெயிலுக்கு போறோம் என்பது பெண்கள் சிலருக்கு கொஞ்சம் கவலையாகதான் இருந்தது. காரணம், வீட்டு சூழ்நிலையே தவிர பயமில்லை.
அனைவரையும் பிரித்து, சரி பார்த்து, போலிசு வண்டியில் ஏற்றினார்கள்.அப்போது, தோழர். கணேசன் பெண்களுக்கு சிறையில் நடக்கும் விசயங்களை தெளிவாக கூறினார். எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று முக்கியமாக நான்கு விசயங்களை கூறினார்.
சைதாப்பேட்டைக் கோர்ட்டுக்கு வண்டி சென்றது.
தொடர்ந்த முழக்கங்கள், பாடல்களுடன் வண்டி சென்றது. இதனை, வெளியில் உள்ளவர்கள் கவனித்து கேட்டனர். அது மட்டுமன்றி, தங்களுக்கு கேட்கவில்லை சத்தமாக சொல்லுங்கள் என்றனர்.
கோர்ட்டும் வந்தது. ஜட்ஜ் ‘அம்மா’ வீட்டின் முன் ஆஜாரானோம். அவங்க கேட்ட கேள்விக்கு காலையில நடந்தத அப்படியே சொன்னோம்.
நைட்டியில் இருந்த ‘அம்மா’ கம்முனு கேட்டுக்குனு திண்டு பூனை மாதிரி உட்கார்ந்திருந்தது. ஒன்றும் சொல்லவில்லை. வழக்குரைஞர்கள் தான் பேசிக்கொண்டே இருந்தார்கள். இதற்கே இரவு 10 மணி ஆகிவிட்டதால், அனைவரும் பாத்ரூம் போக வேண்டிய நிர்பந்தம். இதை கூறினோம். ”இங்க போக முடியாது கோட்ரசு” என்றார்கள். நாங்கள் விடுவதாக இல்லை. அப்ப வண்டியிலேயே, போகலாமா? குழந்தைகளுக்கு அடக்க முடியாது.என்றதும், அங்கேயே, பாத்ரூமுக்கு கூட்டிக் கொண்டு சென்றார்கள். ‘பலத்த பாதுகாப்புடன்’.
நாங்க போய்ட்டு வந்தபிறகு, போலிஸ்களும், ” நல்ல வேளை நீங்க கேட்டதால, நாங்களும் போய்கிட்டோம்.” என்றதும், சிரிப்புதான் வந்தது. போகும் வழியில் இரவு உணவு வாங்கி தர வலியுறுத்தினோம். வாங்கிக் கொடுத்தார்கள். பிரித்து உண்ண ஆரம்பிக்கும் போது தான் தெரிந்தது. குழந்தைகளை கணக்கில் எடுக்கவில்லை என்பது. கேட்டால், அவர்களிடம் இருந்து சரியான பதில் இல்லை. உடனே, அனைவரும் பிரித்ததை, அப்படியே போட்டுவிட்டோம். இதையெல்லாம், பார்த்துவிட்டு, எதுவும், பதில் கூறாமல், போலிசு சாப்பிட்டனர். உடனே, தோழர்கள் முழக்கம் இட்டனர். அரண்டு விட்டார்கள். சாலையில் அனைவரும் கவனித்தனர்.
போலிசு, ”எப்படித்தான் இதுங்களை எடுத்துக் கொண்டு, உள்ளே தள்ளுவோமோ?” என்று பேசிக்கொண்டு உணவு மற்றும் தண்ணீர் வாங்கிக் கொடுத்தனர்.
பெண்-தோழர்-சிறை-அனுபவம்புழல் சிறை, பெரிய கதவு, அதற்கு பின்னும் இரண்டு இரும்பு ஜன்னல் கதவு, அதன் பின் இருட்டில் தெரியும் பெரிய, பெரிய மதில்கள், மற்றும் மதில் மேல் இருக்கும் கம்பிகள் என்று பார்க்கும் போது கொஞ்சம், பயமாக இருந்தது.  அதை மறக்கடித்தது, தோழர்களின் பேச்சு. ”உஷா தோழர் அடிக்கடி சொல்லுவாங்க, பெண்கள் விடுதலை முன்னணினா கம்பீரமா இருக்கனும்னு, இப்ப தான் புரிந்தது”
”என்னனு”
”கம்பிரம், கம்பிரம்ன்னா கம்பியின் பின்புறம்”. என்பது.
சோதனை மேல் சோதனை, எந்தன முறை சோதனை? குறைந்தது 15 தடவை. கூப்பிட்டு, பேரை சரி பார்ப்பது, குழந்தைகளை எண்ணுவது, மேல் இருந்து கீழ் வரை தடவி நடு இரவு 1.30 மணி வரை சோதனை. மூன்று இரும்பு கேட்டை தாண்டி, பல சோதனைகளை தாண்டி, உள்ளே அவர்கள் வாக்கி டாக்கியில் ஒருவரை அழைத்து, உள்ளே, “A” பிரிவுக்கு அழைத்து செல்ல சொன்னார்கள்.
வண்டியிலேயே, தலைமையை ஏற்படுத்தினார்கள் தோழர்கள். அதன்படி அமைப்பாக அனைவரும் செயல்பட்டோம். அதிகாலை மணி 2.30 மணி என்பதால், அனைவரும், சோர்ந்த நிலையில் படுத்துவிட்டோம். இரண்டு அறைகளில் வைத்து பூட்டி விட்டார்கள்.
தனி சிறை கொடுத்ததன் காரணம் புரிந்தது!! மற்ற கைதிகளையும், தோழர்களாக மாற்றிவிடுவோம் என்று பயந்தனர் என்று தெரிந்தது. காலை, தட்டும், குவளையும் கொடுத்தார்கள். நாங்கள் படிப்பதற்க்கு நாளிதழ்கள் கேட்டோம். தருவதாக சொல்லிவிட்டு, மாயமானர்கள்.
சாப்பாட்டுக்காக காத்திருந்தோம். சாப்பாடு வந்தது. அரிசி கஞ்சி. தொட்டுக்கொள்ள வேர்கடலை துவையல். ஆசையாக வாங்கி சாப்பிட தொடங்கினால், கஞ்சியில் உப்பு அதிகம், கற்கள், நெல்லு, என அனைத்தும் இருந்தது. ரேஷன் அரிசி தான். சாப்பிட முடியாத அளவு நாற்றம்.
பிறகு, 4 குழுக்களாக பிரித்து, பாடல், நாடகம் போடலாம் என்றனர் தோழர்கள். சிறிது நேரத்தில், இரண்டு தோழர்களுக்கு கைகளை தூக்க முடியாத வலி. குழந்தை தோழர் செயல் இனிக்கு காய்ச்சல். மற்றொருவருக்கு, பேதி.  நான்கு பேரையும், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள் .
பெண்-தோழர்-சிறை-அனுபவம்ஆனால், அங்கு டாக்டர் இல்லை. இரண்டு மணி நேரத்திற்க்கு பிறகு, வழக்கமான வெள்ளை மாத்திரைகளை கொடுத்தனுப்பினர். தோழர்கள்  சோர்வுற்றனர். மறுபடியும், அடையாள சோதனைகள். முடிவடையாத சோதனைகள்.
மதியம் திரும்பவும் வேகாத சோறு. பார்வையாளர் நேரத்தில், வெளி தோழர்களை, சிறை தோழர்கள் சந்தித்தோம். செவ்வணக்கத்துடன், வாழ்த்துகள் பரிமாறிக் கொண்டோம். மாலை, சுற்றுபுறத்தை தூய்மை செய்தோம். உடனேயே, மீண்டும் உள்ளே அடைத்துப் பூட்டியது போலிசு.
மாலை 6 மணிக்கு சிலருக்கு பெயில் வந்ததாக சொல்லி, மீண்டும் சோதனைக்கு அழைத்தது போலிசு. மீண்டும் சோதனை 3 மணி நேரம் நீடித்தது. உடல் அங்கங்கள் அனைத்தும் அடையாளப்படுத்தப்பட்டது. கை விரல்கள், கரு விழிகள், முகம் தனியாக பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்பட்டது. இனி நாங்கள் எங்கிருந்தாலும், எங்கள் விவரம் அவர்கள் விரல் நுனியில்.
நக்சல்பாரி அமைப்பின் அரசியல், அவர்களின் கண்ணில் பீதியாக வழிந்தது. தோழர்கள் ஒவ்வொரு நடவடிக்கையிலும் காட்டிய உறுதி அவர்களை மிரள வைத்தது. ஒரு வழியாக இரவு 9 மணிக்கு வெளியில் அனுப்பினர். வாயிலில், அமைப்புத் தோழர்கள் காத்திருந்தனர். உற்சாகமாக வரவேற்றனர். உடனே, சிறை வாயில் கூட்டத்தை துவக்கினர். போரட்டத்தின் அனுபவங்கள், அதன் வீச்சு இதன் தொடர்ச்சி என்று பல்வேறு அம்சங்களை விளக்கி அடுத்த கட்ட போரட்டத்துக்கு உறுதி ஏற்றனர். தோழர்கள் செவ்வணக்கத்துடன் பிரிந்தோம்.
(தற்போது பெண் தோழர்கள் மட்டும் பிணையில் வெளியே வந்திருக்கிறார்கள். ஆண் தோழர்களுக்கு இன்னும் பிணை கிடைக்கவில்லை. கிடைத்தாலும் ஆயிரத்தெட்டு நிபந்தனைகளுடன் இருக்குமென்று தோழர்கள் கூறுகிறார்கள். பார்ப்போம்- வினவு)
_____________________________________
- வீரலட்சுமி

கருத்துகள் இல்லை: