வியாழன், 5 ஜூலை, 2012

நாடாளுமன்றத் தேர்தலில் பாமகவை முடக்க ரகசிய திட்டம்: அதிர்ச்சியில் ராமதாஸ்?

சேலம்: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் பாமகவை முடக்கிப் போடும் திட்டம் இப்போது முதலே தயாராகி வருகின்றதாம். இதை அறிந்து பாமக தலைமை கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
பாமகவில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பண்ருட்டி வேல்முருகன் தமிழக வாழ்வுரிமை கட்சி என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். மே 18ம் தேதி கடலூரில் மஞ்சக்குப்பம் மைதானத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி மாநாடு நடைபெறும் என அறிவித்தார். ஆனால் அந்த இடத்தில் அரசு பொருள்காட்சி மே 31ம் தேதி வரை நடைபெற்றதால் மாநாடு நடத்த அனுமதி கிடைக்கவில்லை. இதனால் ஜூன் 24ம் தேதி மாலை 4 மணிக்கு மஞ்சக்குப்பம் மைதானத்தில் மாநாடு நடைபெறும் என வேல்முருகன் மீண்டும் தெரிவித்தார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் முதல் அரசியல் விழிப்புணர்வு மாநாடு கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெற்றது.
அப்போது வேல்முருகன் பேசியதாவது,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாதி, சமுதாயத்துக்கான கட்சி அல்ல, ஒட்டு மொத்த தமிழர்களின் வாழ்வுக்காக, உரிமைக்காக தொடங்கப்பட்ட கட்சி.
சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலை முன் வைத்து இந்த மாநாடு நடத்தவில்லை. ஓட்டு அரசியலுக்காக உங்களை அழைக்கவில்லை. ஆனால் தேர்தலில் எங்களை மதிக்கும் கட்சியுடன் கூட்டணி அமைப்போம். இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் தமிழக மீனவர்களைக் காப்பாற்றவே இந்த மாநாடு நடத்தப்படுகிறது. முள்ளிவாய்க்கால் குறித்து இலங்கை அமைச்சரின் அவதூறான பேச்சை மத்திய அரசு கண்டிக்கவில்லை.

செங்கல்பட்டு அகதிகள் முகாமில் இலங்கைத் தமிழர்கள் காரணமில்லாமல் அடைபட்டுக் கிடக்கின்றனர். தமிழகத்தில் எண்ணற்ற பிரச்னைகள் உள்ளன. இவைகள் தீர்க்கப்பட வேண்டும். இதற்கு சாதி, மதத்தையும், கட்சியையும் தூக்கி எறிந்து களம் காண வேண்டும் என்றார்.

இந்த நிலையில் இந்த தகவல் அப்படியே உளவுத்துறை மூலம் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதே வேளையில், வேல்முருகனுக்கு வட மாவட்டங்களில் உள்ள செல்வாக்கு, பாமகவுக்கு எதிராக அரசியல் களத்தில் நிற்க முடியுமா, பண பலம், சாதி பலம், அரசியல் பலம் போன்ற தகவல்களை தனியார் சர்வே மூலம் ஒரு பிரபல அரசியல் கட்சி திரட்டி உள்ளதாம்.

வட மாவட்டங்களில் திமுக, அதிமுகவை மீறி பாமக கோலோச்சி வருவதை அங்குள்ள திமுக, அதிமுக இரண்டாம் கட்ட தலைவர்கள் ரசிக்கவில்லையாம். இதனையடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வட மாவட்டங்களில் பாமகவை முடக்கிப் போடும் திட்டம் இப்போது முதலே தயாராகி வருகின்றதாம். இதை அறிந்து பாமக தலைமை கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

தற்போது சிபிஐ பிடியில் பாமக முக்கியத் தலைவர்கள் சிக்கி இருப்பதால் தான் பாமக அடக்கி வாசிக்கின்றதாம். விசாரணை விவகாரம் எல்லாம் முடியட்டும். அப்புறம் பாருங்கள் எங்கள் பலத்தை என இப்போதே புஜபலம் காட்டுகின்றனர் பாமகவினர்

கருத்துகள் இல்லை: