புதன், 4 ஜூலை, 2012

கனிமொழி: அதிமுகவுக்கு சரியான பதில் கொடுத்து விட்டோம், 2014ல் மக்கள் பதிலளிப்பார்கள்

சென்னை: அதிமுக ஆட்சிக்கு வந்த முதல் நாளிலிருந்தே பழிவாங்கும் அரசியலை மேற்கொண்டு வருகிறது. அதற்கு திமுக இன்று சரியான பதில் கொடுத்துள்ளது. இனி 2014 லோக்சபா தேர்தலில் தமிழக மக்கள் தங்களது பதிலை ஆணித்தரமாக அளிப்பார்கள் என்று திமுக ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.
திமுகவின் சிறை நிரப்பும் போராட்டத்தில் இன்று கனிமொழிதான் ஹைலைட்டாக இரு்நதார். இதற்காகவே அவருடைய போராட்டத்தில் வேறு முக்கியத் தலைவர்கள், குறிப்பாக குஷ்புவை அனுப்பாமல் வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்பி விட்டனர்.
சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நடந்த இந்த போராட்டத்தில் கனிமொழியும் தொண்டர்களோடு சேர்ந்து அதிமுக அரசைக் கண்டித்து கோஷமிட்டார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி கைதாகி மீண்டு வந்த பின்னர் கனிமொழி கலந்து கொண்ட முதல் போராட்டம் இது என்பதால் பல ஆயிரம் பேர் திரண்டு வந்திருந்தனர்.

கனிமொழி உள்பட அத்தனை பேருமே பெரும் உற்சாகத்துடன் போராட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தினர் மத்தியில் செய்தியாளர்களிடம் கனிமொழி பேசுகையில், அதிமுக அரசு ஆட்சிக்கு வந்த முதல் நாளிலிருந்தே திமுகவினர் மீதும் மக்கள் மீதும் அடக்குமுறையை ஏவி வருகிறது. பழிவாங்கும் அரசியலை நடத்தி வருகிறது. அதற்கு இன்றுதிமுகவினர் பதிலளித்துள்ளனர். இனி 2014 லோக்சபா தேர்தலின்போது மக்களும் தங்களது பதிலை ஆணித்தரமாக அளிக்கப் போகிறார்கள்.
இந்தப் போராட்டத்தின் மூலம் திமுகவினர் மட்டும் சுய ஆய்வுக்கு உட்படுவார்கள் என்றில்லை, மக்களும் கூட, ஏன் மீடியாக்களும் கூட தங்களை சுய ஆய்வுக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் கனிமொழி.

கருத்துகள் இல்லை: