வியாழன், 5 ஜூலை, 2012

எதிர்பார்த்திராத எழுச்சி’ என்று நிச்சயம் கூறலாம்

தி.மு.க. போராட்டம்: போலீஸை மட்டுமா ஏமாற்றினார்கள் தொண்டர்கள்?

Viruvirupu
நேற்று நடைபெற்ற, தி.மு.க.-வின் சிறை நிரப்பும் போராட்டத்துக்கு திரண்ட தொண்டர்களின் எண்ணிக்கை இந்தளவுக்கு இருக்கும் என்பதை, ஆளும் கட்சி எதிர்பார்த்திருக்கவில்லை. தி.மு.க.-வேகூட எதிர்பார்க்கவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்களின் எண்ணிக்கை நிச்சயம் 1 லட்சத்தைவிட அதிகம். (அதைவிட சற்று குறைவான எண்ணிக்கையை போலீஸ் சொல்கிறது)
போராட்டத்துக்கு முதல்நாள் தி.மு.க. தலைவர் கருணாநிதி, “ஐம்பதாயிரத்துக்கும் அதிகமானோர், போராட்டத்தில் கலந்துகொள்ள பெயர்களை பதிவு செய்துள்ளார்கள்” என்றார். மறுநாள் அந்த எண்ணிக்கை இரட்டிப்பாகும் என அவரே எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.
போராட்டத்தில் ஈடுபட்டுக் கைதான அத்தனை பேரும் கல்யாண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர். காரணம், அவ்வளவு பேரையும் சிறையில் அடைக்க முன்னேற்பாடுகள் ஏதும் கிடையாது. மாநிலம் முழுவதிலுமாக சுமார் 40,000 பேர் வரை சிறை வைக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
போலீஸ் எதிர்பார்த்த எண்ணிக்கை அவ்வளவுதான்.

அயல் மாநிலச் சிறைகளிலும் தொண்டர்களை அடைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என செய்திகள் வந்திருந்தன. செய்திகள், செய்திகளாகவே இருந்தனவே தவிர, நடைமுறையில் ஏற்பாடுகள் ஏதும் செய்யப்படவில்லை.
காலை 11 மணியளவில் சென்னையில் இருந்த போலீஸ் கன்ட்ரோல் ரூமுக்கு, வெவ்வேறு இடங்களில் இருந்து எண்ணிக்கைகள் வர வர, திக்குமுக்காடிப் போனார்கள். சில இடங்களில், போராட்டத்துக்கு வந்தவர்கள் கலைந்து போவார்கள் என்று கைது செய்வதை தாமதப் படுத்தி காத்திருந்த தமாஷ்களும் நடந்தன.
தி.மு.க. தொண்டர்கள், அனைவரையும் ஏமாற்றி விட்டார்கள்! தமது தலைமை உட்பட, அனைவரது கணிப்புகளையும் உடைத்து விட்டார்கள். ‘எதிர்பார்த்திராத எழுச்சி’ என்று நிச்சயம் கூறலாம்.

கருத்துகள் இல்லை: