சனி, 14 ஜனவரி, 2012

MGR யாரை காங்கிரஸ் பயன் படுத்தி திமுகவை அழிக்க...untold istory


இந்திரா காந்தியின் எமெர்ஜென்சிக்குப் பின்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. ஜனதா கூட்டணி வெற்றி பெற்றது.
வேர் விடாத குரோட்டன்ஸ் செடியாக தொட்டியில் தூங்கிக் கொண்டிருந்தது. மொரார்ஜி தேசாய் பிரதமரானார். அப்போது தமிழகத்தில் எம்.ஜி.ஆரின் ஆட்சி அருவிநடை போட்டுக்கொண்டிருந்தது.
தஞ்சை நாடாளுமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல்; அ.தி.மு.க. ஆதரவுடன் இந்திரா போட்டியிட விரும்பினார். ஆனால் மொரார்ஜி தேசாய் அக்கினிப் பார்வை பார்த்தார்.
எம்.ஜி.ஆர். மீது இந்திராவுக்கு எல்லையில்லாத கோபம். எனவே அவர் மீண்டும் பிரதமரானபோது அ.தி.மு.க. அரசை டிஸ்மிஸ் செய்தார்.

அரசியல் நிகழ்வுகளும் மாற்றங்களும் எம்.ஜி. ஆரைப் பக்குவப்படுத்தின. காலச் சுழற்சி பல அரசியல் பாடங்களைக் கற்றுக் கொடுத்தது.

அடுத்து சட்டமன்றத் தேர்தலைத் தமிழகம் சந்தித்தது. மதுரையை மையமாகக் கொண்டு தென்மாவட்ட தேர்தல் பணிகளைக் கவனிக்கச் சொன்னார்.

அவசரநிலை காலத்தில் எந்தத் தி.மு.க.வை உலைக்களத்தில் இறக்கினாரோ அதே தி.மு.க.வுடன் இந்திராகாந்தி தேர்தல் உறவு கொண்டார்.

தென்மாவட்டத் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு எம்.ஜி.ஆர். சென்னை திரும்பினார். அதற்கு முன்னர் அழைத்தார்.

""சோலை, நம்மை வைத்து தி.மு.க.வை அழிக்க நினைத்தார்கள். இப்போது தி.மு.க.வுடன் உறவுகொண்டு நம்மை அழிக்கப் பார்க்கிறார்கள். சிந்திக்க வேண்டிய நேரம்'' என்றார்.

அவர் முதல்வராகப் பதவி ஏற்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் அழைத்தார். ராமாவரத்தில் காலை சிற்றுண்டிக்குப் பின்னர் கீழ்தள தனி அறையில் அமர்ந்தோம்.

""நான் சொன்னதை யோசித்தீர்களா?''

"சட்'டென்று கேட்டதால் நினைவிற்கு வரவில்லை.

""மதுரையில் சொன்னேனே... நீங்கள் கலைஞரைப் பாருங்கள்'' என்றார்.

""அவ்வளவு அவசரம் ஏன்? மீண்டும் ஆட்சியில் அமரப்போகிறீர்கள். காலம் இன்னும் கனி யட்டுமே''.

""நாம் தோல்வி நிலையில் நின்று பேச வில்லையே, வெற்றி நிலையிலிருந்துதானே பேசுகிறோம்'' என்றார்.

""கலைஞர் என்னை ஜென்ம விரோதியாகக் கருதுகிறவர். எனவே இந்தப் பணிக்கு நான் தகுதியற்றவன்''.

நீண்ட நேரம் விவாதம். நேரம் போனது தெரியவில்லை.

""கலைஞரைச் சந்திக்கும் பணிக்கு வீரமணி அண்ணன்தான் சரியானவர்.''

""ரகசியம் காப்பாரா?''

""கண்டிப்பாகக் காப்பார்''.

""அப்படியானால் இன்றே அவரைச் சந்தியுங்கள்'' என்றார்.

ராமாவரத்திலிருந்து நேராக பெரியார் திடலுக்கு வந்தேன். வீரமணி இருந்தார். இருவரும் ராதா மன்றத்தின் முன்பு அமர்ந்து விவாதித்தோம்.

""எம்.ஜி.ஆரா இப்படிச் சொன்னார்? நம்ப முடியவில்லை'' என்றார் வீரமணி.

""அண்ணா, அவர் வெற்றி வாசலில் நின்று பேசுகிறார். நாளையேகூட நீங்கள் எம்.ஜி.ஆரைச் சந்திக்கலாம்.''

""சரி'' என்றார்.

அடுத்தநாள் காலை எட்டு மணிக்கெல்லாம் இருவரும் ராமாவரம் சென்றோம்.

""டிபன் சாப்பிடுங்கள். இதோ வருகிறேன்'' என்று மாடியிலிருந்து இண்டர்காம் மூலம் எம்.ஜி.ஆர். தகவல் தந்தார். அவர் அன்பால், கருணையால், ஈகையால் உலகை பிரமிக்க வைத்தவர்.

டைனிங் ஹாலுக்குள் பண்ருட்டியார் நுழைந்தார். வீரமணியைப் பார்த்து அவருக்கு வியப்பு. அடுத்து மதுரை முத்தண்ணன் வந்தார். அவருக்கோ திகைப்பு. அன்றைக்கு எவரையும் எம்.ஜி.ஆர். சந்திப்பதாக இல்லை. ஆனாலும் இருவரும் வந்துவிட்டனர்.

மாடியிலிருந்து எம்.ஜி.ஆர். நேராக வரவேற்பு அறைக்குச் சென்றார். அங்கிருந்தே முத்தண்ணன், பண்ருட்டியாரை அழைத்தார். அவர்களை அனுப்பிவிட்டு நேராக டைனிங் ஹாலுக்கு வந்தார். ""என்னென்ன சாப்பிட்டீர்கள்'' என்றார். பட்டியலைச் சொன்னோம். அவருக்கு மகிழ்ச்சி.

வரவேற்பு அறையிலுள்ள தனி அறைக்கு அழைத்துச் சென்றார். ஐந்தே நிமிடம் உள்ளே இருந்தேன். பின்னர் எம்.ஜி.ஆரும் வீரமணியும் ஒருமணி நேரம் உரையாடினர்.

விடைபெற்று வரும்போது வீரமணியைக் கவனித்தேன். அவர் வியப்பிலிருந்து விடுபட வில்லை. ஏனெனில் அவர் சந்தித்தது எம்.ஜி.ஆரை அல்ல. ஒரு பொன்மனச் செம்மலை, திராவிட இயக்க ஒற்றுமையில் நாட்டம் கொண்ட ஒரு பெருமகனைத்தான் சந்தித்தார்.

அடுத்தநாள் அவர் கலைஞரைச் சந்திக்க ஏற்பாடு. "எந்தக் காரணம் கொண்டும் என் பெயரைச் சொல்லி விடாதீர்கள். காரியம் கெட்டுப் போகும்' என்று வீரமணியைக் கேட்டுக் கொண்டேன்.

""என்ன காரணம்?'' என்றார்.

""அண்ணா தி.மு.க. தோன்றி தி.மு.க. அரசு மீது கவர்னரிடம் ஊழல் புகார் கொடுத்தோம். ஒரு லட்சம் பேர் திரண்டனர். பின்னர் குடியரசுத் தலைவரிடமும் கொடுத்தோம்.

இந்த நிகழ்வுகள் நடந்த ஒருமாத காலத்தில் ஓர் இணைப்பு முயற்சி நடத்த அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் முயன்றார். எஸ்.டி.சோமசுந்தரம் போன்றோர் ஆதரவாக இருந்தனர்.

இறுதியாக எமது கருத்தை எம்.ஜி.ஆர். கேட்டார். "இணைப்பு அவசியம்தான். ஊழல் புகார் கொடுத்த ஒரு மாதத்தில் இணைப்பு என்றால் உங்கள் புகழ் சித்திரம் பாதிக்கும்' என்று எமது கருத்தைச் சொன்னோம். இந்தத் தகவல் கலைஞருக்குத் தெரிந்தது. அதனால் எம் மீது கோபம்'' என்று ரத்தினச் சுருக்கமாகச் சொன்னோம்.

""ஓ! அப்படியா?'' என்றார் வீர மணி. அவர் கலைஞரைச் சந்தித்தார். விபரம் சொன்னார். ஆனால் அவரால் நம்ப முடியவில்லை. தன்னை நம்பும்படி வீரமணி வலியுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து மீண்டும் எம்.ஜி.ஆரை வீரமணி சந்தித்தார். சந்திப்புகள் தொடர்ந்தன. பயணம் சீராக இருந்தது.

அப்போது சட்டமன்றக் கூட்டம் ஆரம்பம். அ.தி.மு.க.வினர் எந்தக் காரணம் கொண்டும் தி.மு.க.வையோ, தலைவர்களையோ விமர்சிக்கக்கூடாது. அதேபோல் தி.மு.க.வினரும் கடுமையான விமர்சனங்களை எழுப்பக்கூடாது என்று உடன்பாடு ஏற்பட்டது.

அதனையும் கடந்து தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவில் கலைஞரும் எம்.ஜி.ஆரும் இணைந்து கலந்துகொள்வது என்று முடிவானது.

இதனை மத்திய உளவுத்துறை மோப்பம் பிடித்தது. அதற்கு ஒரு கட்டளை உண்டு. இந்திரா காங்கிரசுடன் அ.தி.மு.க.வை இணைப்பது முடியவில்லையென்றால் மீண்டும் தி.மு.க.-அ.தி.மு.க. இணைவதைத் தடுப்பது என்பதுதான் அதன் நோக்கமாகும்.

இருதரப்பிலும் இணைப்பை விரும்பாத சிலர் இருந்தனர். அவர்களுக்கு மத்திய உளவு இலாகா பூச்சூட்டிவிட்டது. தங்கள் பேச்சிலும் எழுத்திலும் அவர்கள் தங்களை அடையாளம் காட்டினர். அவர்கள் வெறுப்பை முன்னிறுத்தி வாழ்ந்த மனநோயாளிகள். மனச்சாட்சி மரத்துப் போனவர்கள். எனவே வீரமணி எடுத்த முயற்சி முற்றுப்பெறாமல் நின்றது. முறிந்துவிடவில்லை.

ஆனாலும் எம்.ஜி.ஆர்.-வீரமணி சந்திப்புக்கள் அவ்வப் போது நடந்துகொண்டுதான் இருந்தன. இணைப்பிற்கு இன்னொரு பூ பூத்தது. முயற்சித்தவர் ஒரிசா மாநில மக்கள் தலைவர் பட்நாயக். இன்றைய ஒரிசா முதல்வரின் தந்தை.

அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ஓர் வலிமையான அணி அமைக்க முயற்சித்தார். தமிழகத்தில் இரண்டு கழகங்களும் இணையவேண்டும் என்று அவர் பெரும் முயற்சி எடுத்தார்.

தமிழக அரசுத் தலைமைச் செயலகத் திற்கு அபூர்வமாகத்தான் செல்வேன். அன்று எம்.ஜி.ஆர். அழைத்தார். பட்நாயக் தரப்பிலிருந்து வந்த தகவலைச் சொன்னார்.

""நல்ல முயற்சிதானே! நீங்கள் செய்ய விரும்பியதை அவர் செய்கிறார். ஆனால் ஒன்று. இணைப்பு பற்றிப் பேசுவதாக இருந்தால் நீங்களும் கலைஞரும் நேரடியாகப் பேசவேண்டும். அப்போதுதான் விடியல் தெரியும்'' என்றோம்.

அந்தப் பக்கம் கலைஞரைச் சந்தித்து வீரமணி இதே கருத்தை வலியுறுத்தினார். பட்நாயக் முயற்சி பலன் தந்தது. ஆட்சித் தலைவர் யார், கழகத் தலைவர் யார், கழகத்திற்கு என்ன பெயர். கொடியின் வடிவம் என்ன என்ற அளவிற்குப் பேசி முடிவு செய்தனர். ஆனாலும்...

மத்திய உளவுத்துறைதான் வெற்றி பெற்றது. கருகிப்போன உள்ளங்கள் சலங்கை கட்டிக் கூத்தாடின.

ஆனாலும் டெல்லிக்குச் "செக்' வைப்பதில் அவர் கவனமாக இருந்தார். ஒருநாள் காலை என்.டி.ராமாராவ் ராமாபுரம் வந்தார். ஹாலில் அமர்ந்திருந்தார்.

""அண்ணே, நீங்கள் வந்த தகவல் தலைவருக்குத் தெரியுமா'' என்றேன்.

""நேற்று மாலை "போன்' செய்தேன். யாரோ எடுத்தார்கள்'' என்றார்.

இண்டர்காம் மூலம் தகவல் தந்ததோடு ""என்.டி.ஆரா? சொல்லாமல் வந்துவிட்டாரே'' என்றார் எம்.ஜி.ஆர்.

""சரி, அவரை டிபன் சாப்பிடச் சொல்லுங்கள்'' என்றார். பின்னர் அவரே மாடியிலிருந்து இறங்கி வந்தார்.

தமிழகத்தின் பிரபல தமிழ் நாளிதழின் அதிபர் தமது வீட்டை என்.டி.ஆருக்கு வேண்டியவருக்கு விற்பனை செய்தார். ஆனாலும் ஆறு மாதமாகச் சாவியைக் கொடுக்கவில்லை. இதோ, அதோ என்று இழுத்தடித்தார். அது சம்பந்தமாகத்தான் எம்.ஜி.ஆரைப் பார்க்க என்.டி.ஆர். வந்தார்.

தொலைபேசியில் அந்த அதிபரைப் பிடித்தோம். எம்.ஜி.ஆர். பேசினார். ""வெளிநாடு போகிறேன். திரும்பியதும் வீட்டை ஒப்படைத்துவிடுகிறேன்'' என்றார்.

எம்.ஜி.ஆர்.-என்.டி.ஆர். சந்திப்பு தொடர்ந்தது. அரசியல் நிலவரம் பற்றி அவ்வப்போது கலந்துரையாடினர். அதன் விளைவாகப் பிறந்ததுதான் "தெலுங்கு தேச'க்கட்சி. ஆமாம். அந்தக் கட்சியின் பிதாமகன் எம்.ஜி.ஆர்.தான்.

ஐதராபாத்தில் அதன் ஆரம்பவிழா அமர்க்களமாக இருக்கவேண்டும் என்று எம்.ஜி.ஆர். விரும்பினார். ஆர்ட் டைரக்டர் அங்கமுத்து தலைமையில் எம்.ஜி.ஆர். ஒரு குழுவை அனுப்பினார். அவர்கள் எங்கெங்கே கட்-அவுட் வைப்பது, எங்கெங்கே பேனர்கள் வைப்பது, கொடிகள் கட்டுவது என்று முடிவு செய்தனர். ஐதராபாத் ஏதோ சொர்க்கலோகம் போல் காட்சி அளித்தது.

தெலுங்கு தேசக் கட்சியின் சுகப்பிரசவத்திற்கு எம்.ஜி.ஆர்.தான் காரணம் என்பது மத்திய உளவுத்துறைக்குத் தெரியாதா என்ன? இப்போது புருவங்களை உயர்த்தி எம்.ஜி.ஆரை டெல்லி ஆச்சரியக்குறியோடு பார்த்தது. இங்கே எம்.ஜி.ஆர். ஆட்சி. ஆந்திராவில் என்.டி.ஆர். ஆட்சி. அடுத்து எம்.ஜி.ஆர். டெல்லிக்கு ஓர் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.

ஜனதா அரசுகள் கவிழ்ந்து நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்திரா காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. இந்திரா பிரதமரா னார். சென்னை வந்தார். முதல்வர் என்ற முறையில் அவரை வரவேற்க எம்.ஜி.ஆர். சென்றார். இந்திரா கோபத்தைக் கோடிட்டுக் காட்டினார். சிலகாலம் இடைவெளி. என்.டி.ராமாராவை எம்.ஜி.ஆர். அழைத்தார். "தென் மாநில முதல்வர்கள் மாநாடு நடைபெற வேண்டும். ஆந்திரத்தில் நடைபெறட்டும்' என்றார். "கர்நாடகா, கேரளா முதல்வர்களை வரவழைப்பது தனது பொறுப்பு' என்றார்.

அந்த மாநாட்டின் ஆரம்பச் செய்திகளை வெளியிட்டோம். மத்திய உளவுத்துறைக்கு மண்டை காய்ந்தது. ஏன் இந்த மாநாடு? எதற்காக இந்த மாநாடு என்று குழம்பிப் போயினர்.

மாநாடும் நடந்தது. ராஜ தந்திரமாக அந்த மாநாட்டில் எம்.ஜி.ஆர். பங்கு கொள்ளவில்லை. ஆனால் மாநாடு அமோக வெற்றி பெற்றது. தென் மாநிலங்களின் தேவைகளை அந்த மாநாடு எதிரொலித்தது. மாநாட்டின் சூத்திரதாரி எம்.ஜி.ஆர்.

என்பது டெல்லிக்குத் தெரியாதா என்ன?

பிரதமர் இந்திரா காந்தியின் பிரதம ஆலோசகராக இருந்தவர் ஜி.பார்த்தசாரதி. நெருங்கிய தோழியாக இருந்தவர் மறைந்த நிர்மலா தேஷ் பாண்டே. காந்தியவாதி. தமிழகத்தைப் பொறுத்தவரையில் அண்ணா தி.மு.கழகம்தான் காங்கிரஸ் கட்சியின் நேச சக்தியாக இருக்க முடியும் என்று அவர்கள் தொடர்ந்து இந்திராவிடம் வலியுறுத்தி வந்தனர். தென் மாநில முதல்வர்கள் மாநாட்டிற்குப் பின்னர் அவர்களுடைய கருத்தை இந்திரா ஏற்றுக்கொண்டார்.

எம்.ஜி.ஆர். நோய்வாய்ப் பட்டார். அவர் சிகிச்சைக்கு அமெரிக்கா சென்றார். அவருக்கு அறுவை சிகிச்சை. அன்று தமி ழகத்தின் அத்தனை ஆலயங் களிலும் மக்கள் பிரார்த்தனை செய்தனர். தேவாலயங்களில் மணியோசை கேட்டது. மசூதி யிலும் வழிபாடுகள் நடந்தன.

"எம்.ஜி.ஆர். நலம் பெற வேண்டும் என்று நாடே பிரார்த் திக்கிறது; நானும் பிரார்த்திக் கிறேன்' என்று இந்திரா உலக மக்களுக்கு உருக்கமாக ஒரு செய்தி வெளியிட்டார்.

(ஜனவரி 17- எம்.ஜி.ஆர். பிறந்த தினம்)
thanks nakkeeran+raj trichy

கருத்துகள் இல்லை: