வியாழன், 12 ஜனவரி, 2012

Pakistan எந்த நேரத்திலும் ஆட்சி காலி?- ராணுவ ஆலோசனை

ராவல்பிண்டி: பெரும் பரபரப்புக்கு மத்தியில் பாகிஸ்தான் ராணுவ தளபதிகள் இன்று ராவல்பிண்டியில் கூடி ஆலோசனை நடத்தவுள்ளனர். இதில் முப்படைத் தலைமைத் தளபதிகளும் இதில் கலந்து கொள்கின்றனர். இதனால் பாகிஸ்தானில் ஆட்சி கவிழ்ந்து ராணுவப் புரட்சி நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பரபரப்பான சூழலால் பாகிஸ்தான் முழுவதும் மக்கள் பதட்டத்துடன் உள்ளனர்.
பாகிஸ்தானில் மக்கள் ஆட்சியை விட ராணுவ ஆட்சியே அதிகம் நடந்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை நீடிக்கவே விடுவதில்லை ராணுவத்தினர். ஜியா உல் ஹக், முஷாரப் வரை என பல ராணுவ தளபதிகள் அந்த நாட்டைக் கைப்பற்றி ஆட்சி புரிந்துள்ளனர்.

இந்த நிலையில் மீண்டும் ஒரு ராணுவ புரட்சியை நோக்கி பாகிஸ்தான் போய்க் கொண்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் ராணுவத்திற்கும், ஐஎஸ்ஐக்கும், பிரதமர் கிலானிக்கும் இடையே கடும் மோதல் மூண்டுள்ளது. ராணுவமும், ஐஎஸ்ஐயும் சட்டவிரோதமாக நடந்து கொள்வதாக பிரதமர் கிலானி கடுமையாக விமர்சித்துள்ளார். இதற்கு ராணுவமும், ஐஎஸ்ஐயும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதற்கான கடும் விளைவுளை பாகிஸ்தான் அரசு சந்திக்க வேண்டும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும் அனைத்து ராணுவத் தளபதிகளின் கூட்டத்தையும் ராணுவமும், ஐஎஸ்ஐயும் கூட்டியுள்ளன. இந்தக் கூட்டம் இன்று ராணுவத் தலைமையகத்தில் நடைபெறுகிறது. இதில் முப்படைத் தளபதிள், அனைத்துப் பிரிவு தளபதிகள் கலந்து கொள்ளவுள்ளனர். இதில் என்ன முடிவெடுக்கப்படவுள்ளது என்பது மர்மமாக உள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவிக்க ராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் முகம்மது அலி தியால் மறுத்து விட்டார்.

முன்னதாக பாதுகாப்புத்துறை செயலாளரை நேற்று முன்தினம் பிரதமர் கிலானி அதிரடியாக நீக்கினார். புதிய செயலாளரை அவர் நியமித்தார். ஆனால் அவருக்கு ஒத்துழைப்பு தர மாட்டோம் என ராணுவம் கூறி விட்டது. இதனால் மோதல் மேலும் வலுத்துள்ளது.

மறுபக்கம், பாகிஸ்தான் அரசுக்கு அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், பிரதமர் கிலானி ஒன்றும் நேர்மையானவர் அல்ல என்றும் அது கடுமையாக சாடியுள்ளது. இதனால் நீதித்துறைக்கும், அரசுக்கும் இடையேயும் மோதல் வெடித்துள்ளது. இதனால் பிரதமர் கிலானி இரு தலைக் கொள்ளி எறும்பாக தவித்து வருகிறார்.

அதேபோல அதிபர் சர்தாரிக்கும், ராணுவத்திற்கும் இடையேயும் நல்லுறவு இல்லை. இது சமீப காலத்தில் மேலும் மோசமடைந்துள்ளது.

பாகிஸ்தான் உருவாகி 60 ஆண்டுகளுக்கு மேலாகி விட்ட நிலையில், இதுவரை எந்த ஒரு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும் தனது பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்ததாக சரித்திரமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: