சனி, 14 ஜனவரி, 2012

தில்லியின் தாழ்வு மனப்பான்மை Google Facebook youtube

கூகிள் - ஃபேஸ்புக் - தில்லி உயர்நீதிமன்றம்

சீனாவில் செய்கிறார்களே  தில்லியின் தாழ்வு மனப்பான்மை 
கூகிள், பேஸ்புக் போன்றவை தத்தம் தளங்களில் உள்ள ‘ஏற்கத்தகாத விஷயங்களை’ (Objectionable materials) நீக்குவதற்கு ஒரு முறையை ஏற்படுத்தாவிட்டால், சீனாவில் நடப்பதைப் போல அவர்களுடைய தளங்கள் தடை செய்யப்படும் என்று தில்லி உயர்நீதிமன்றத்தில் இப்போது நடந்துகொண்டிருக்கும் வழக்கு ஒன்றில் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

நீதிபதிக்கு தொழில்நுட்பம் பற்றிய புரிதல் இல்லை என்று நினைக்கிறேன். கூடவே, கூகிள், ஃபேஸ்புக் இன்னபிற சோஷியல் தளங்கள் பற்றிய புரிதலும் குறைவாக உள்ளது என்றே கருத வாய்ப்புள்ளது. அவர் எதிர்பார்ப்பதைச் செய்வது என்பது தொழில்நுட்ப ரீதியில் மிகக் கடினமானது. சொல்லப்போனால் செய்யவே முடியாத ஒன்று.

இப்படிப் பேச்சு வரும்போதெல்லாம் சீனாவில் செய்கிறார்களே என்ற கேள்வி எழுகிறது. சீனாவில் எம்மாதிரியான தணிக்கை முறை இணையத்தில் நிலவுகிறது என்பதை விக்கிபீடியாவில் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.


மேற்கண்ட பக்கத்திலிருந்து, சீனாவில் என்னவெல்லாம் தடை செய்யப்பட்டது என்று பார்ப்போம்:
  1. அரசியல் அமைப்புச் சட்டத்தை, அரசு விதித்துள்ள சட்டங்களை, நிர்வாக ஆணைகளை எதிர்க்க அல்லது உடைக்கத் தூண்டுவது
  2. அரசையோ, சோஷலிச முறையையோ தூக்கி எறியத் தூண்டுவது
  3. தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிக்குமாறு அல்லது நாட்டைத் துண்டாடுமாறு தூண்டுவது
  4. தேசியங்களுக்கு இடையில் வெறுப்பை ஊட்டுவது, பாரபட்சம் காட்டுவது அல்லது தேசியங்கள் ஒன்றிணைந்து இருப்பதற்கு ஊறு விளைவிப்பது ஆகியவற்றைத் தூண்டுவது
  5. பொய் பேசுதல், உண்மையைத் திரித்தல், வதந்திகளைப் பரப்புதல், சமூக ஒழுங்கைக் குலைத்தல்
  6. பழங்கால மூட நம்பிக்கைகள், பாலுணர்வைத் தூண்டும் விஷயங்கள், சூதாட்டம், வன்முறை, கொலை ஆகியவற்றை ஊக்குவிப்பது
  7. பயங்கரவாதத்தை அல்லது குற்றச் செயல்களை ஊக்குவித்தல், பிறரை வசைபாடுதல், உண்மையைத் திரித்து பிறரை அவதூறு செய்தல்
  8. அரசு அமைப்புகளின் பெருமைக்கு பங்கம் வருமாறு செய்தல்
  9. அரசியல் அமைப்புச் சட்டத்துக்கும் அரசு சட்டங்களுக்கும், நிர்வாக ஆணைகளுக்கும் எதிரான பிற நடவடிக்கைகள்
  10. பெயரை மறைத்துக்கொள்ளுதல் - அநாமதேயம்
இதுபோன்ற சட்டங்களும் தணிக்கை முறையுமா நமக்குத் தேவை?

இப்போது நம் நாட்டில் அரசியல்வாதிகளும் சில ப்யூரிட்டன்களும் என்ன எதிர்பார்க்கிறார்கள்? மேலே உள்ளதில் இரண்டு விஷயங்களைத்தான். ஒன்று, பாலுணர்வைத் தூண்டும் விஷயங்களைத் தடைசெய்வது குறித்து. இரண்டாவது பிறரை வசைபாடுதல், அவதூறு செய்தல் ஆகியவற்றைத் தடை செய்வது குறித்து. இவை இரண்டைப் பற்றியுமே எனக்கு மாற்றுக் கருத்துகள் உள்ளன.

1. பாலுணர்வைத் தூண்டக்கூடிய விஷயங்கள், மனிதர்களுக்கு அவசியமான ஒன்று என்று நினைக்கிறேன். அதற்கான வசதிகள், வாய்ப்புகள் அனைவருக்கும் சட்டபூர்வமாகவே தரப்படவேண்டும். ‘அனைவருக்கும்’ என்றால் சிலரையும் சிலவற்றையும் தவிர்த்து. உதாரணமாக, 18 வயது நிரம்பாதோருக்கு இவை சென்று சேரக்கூடாது. அதேபோல 18 வயது நிரம்பாதோரை வைத்து எடுக்கப்படும் படங்கள்/வீடியோ, சுய அனுமதியின்றி சுரண்டி எடுக்கப்படும் படங்கள்/வீடியோ, வன்முறையையும் பாலுறவையும் சேர்த்துக் காட்டும் படங்கள்/வீடியோ... இப்படி சட்டத்தால் ஏற்கெனவே விலக்கப்பட்டவை. அதே நேரம் ஒருபால் சேர்க்கை, பிற ‘பிறழ்’ விஷயங்கள் இருப்பதில் கருத்துரீதியாக எனக்குப் பிரச்னை இல்லை. அவையும் அனுமதிக்கப்படவேண்டும்.

இங்கே, இந்த விஷயங்கள் 18 வயதுக்குக் கீழே உள்ளவர்களை எப்படிச் சென்று சேராமல் இருக்கவேண்டும் என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தேவை. இதை நடைமுறைப்படுத்துவதில் உள்ள நுட்பச் சிக்கல்களை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இது தனி டாபிக். எனவே இங்கே பேசப்போவதில்லை.

2. வசை, அவதூறு. இதில் முதலாவது முழுமையாகவே அனுமதிக்கப்படவேண்டும் என்ற கருத்தை வந்தடைந்துள்ளேன். எனவேதான் நான் வினவை, அதன் வசவை ஆதரிக்கிறேன். வகைதொகையின்றி, என்னையும் சேர்த்து, வசை பாடுவதில் அவர்கள் வல்லவர்கள். வசையை ஏற்பது, மறுப்பது, கொதித்துக் களத்தில் இறங்குவது, கத்திச் சண்டை போட்டு ஒருவர் உயிரை விடுவது என்பதெல்லாம் பழங்காலம். பெரும்பாலும் வசை என்பது பாலுறுப்புகளில் தொடங்கி, உறவுமுறையினரை இழுத்து, ஒருவர் செய்யும் வேலையை, ஒருவர் புனிதமாகக் கருதுவனவற்றை எல்லாம் இழுத்து அசிங்கப்படுத்துவது. அடுத்து, ஒருவர் தான் எது இல்லை என்று சொல்கிறாரோ அதுதான் அவர் என்று சித்திரிப்பது.

வசை ஒரு கட்டத்தில் அவதூறாகிறது. எப்போது என்றால், அதனால் அவரது புகழுக்கும், கௌரவத்துக்கும், அவரது வாழ்க்கை முன்னேற்றத்துக்கும் குறை ஏற்படும்போது. அப்போது சட்டரீதியான நடைமுறை அவசியமாகிறது. குறைந்தபட்சம் அதன்மூலம் பிறரை நம்பவைப்பதற்காவது.

இந்தியாவில் அவதூறை எதிர்கொள்ளக்கூடிய வழக்காடுமன்றச் செயல்பாடுகள் திருப்திகரமாக இருந்ததில்லை. எனவே மான நஷ்ட வழக்கு போன்றவை நீங்கள் முதல்வர் ஜெயலலிதாவாக இருந்தால் மட்டுமே செல்லுபடியாகும்.

வேண்டுமானால், இந்த இடத்தில் சட்டம் கொஞ்சம் கடினமாக ஆவது நல்லது. அவதூறு என்று நிரூபிக்கப்பட்டால், அதனால் அவதூறு செய்தவர் தண்டனையாக அடையவேண்டிய பொருளாதார நஷ்டம் கடுமையானதாக இருக்கவேண்டும். இங்கும், அவதூறு என்பது உயர்தரத்தில் நிரூபிக்கப்படவேண்டும். வசையா, அவதூறா; மனம் நோகவேண்டும் என்பதற்காக மட்டும் செய்யப்பட்டதா அல்லது எதிராளியின் புகழ் பாதிக்கப்பட்டு அவர் பணரீதியாக நஷ்டம் அடையவேண்டும் என்ற உள்நோக்கத்துடன் செய்யப்பட்டதா என்று கவனமாகப் பிரித்துப் பார்க்கவேண்டும்.

*

இப்போது மீண்டும் கையில் உள்ள பிரச்னைக்கு வருவோம். இணைய நிறுவனங்கள் இதற்காக தொழில்நுட்பத்தைக் கிண்டி எதையாவது செய்தாகவேண்டுமா?

என் கணிப்பில், தேவை இல்லை. இது தொழில்நுட்பம் உருவாக்கிய ஒரு பிரச்னை இல்லை. எனவே தொழில்நுட்பம் இதைத் தீர்க்கவேண்டாம். திட்டுவது மனிதர்தான். மனிதர்கள் ஒருவரை ஒருவர் வசைபாட நிறையக் காரணங்கள் உள்ளன. என்னைத் திட்ட வினவுக்கு நிறையக் காரணங்கள் உள்ளன. அவர்களுக்கு இணையம் ஒரு கருவி. இணையத்தில் திட்டக்கூடாது என்று சட்டம் இருந்தால் போஸ்டர் அடித்து ஒட்டுவார்கள். செலவு கொஞ்சம் அதிகமாகும். இங்கே இணையம் செலவைக் குறைக்கிறது. எளிதாகப் பரவ வழிவகை செய்கிறது. ஆனால் ஆதாரமான வசை/அவதூறு மனநிலையை அது உருவாக்குவதில்லை. எனவே பழியை இணையத்தின்மீது போடுவதில் நியாயம் இல்லை.

இணையத்தில் செய்தாலும் வேறு எங்கு செய்தாலும் அவதூறு அவதூறுதான். அதனை சம்பந்தப்பட்ட நபர்கள் சட்டரீதியாகத்தான் தீர்த்துக்கொள்ள முடியும். அதுவும் இந்தியாவில் அதற்கு ஒரு மாமாங்கம் ஆகிவிடும்.

ஆனால் இதனைத் தாண்டி இன்னொரு பிரச்னை இருக்கிறது. அதுதான் அநாமதேயம். மெய் உலகில் அவதூறு செய்தவரைக் கண்டுபிடித்து அவர்மீது நடவடிக்க எடுக்க முயற்சி செய்யமுடியும். ஆனால் இணையத்தில் அநாமதேயங்கள் அவதூறைப் பரப்பி, பரவவிட்டு, காணாமல் போய்விடுவார்கள். இதுதான் அரசியல்வாதிகளுக்கும் பிரபலங்களுக்கும் கடும் எரிச்சலை ஏற்படுத்துகிறது.

ஆனால், மாறிவரும் உலகில் இதனையும் நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும் என நினைக்கிறேன். ஒருவர் நம்மை அவதூறு செய்வதால் ஏற்படும் பண நஷ்டங்களையும்கூட நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். இன்று மோசமான அரசு பதவியில் இருப்பதன் காரணமாக நம் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் பண நஷ்டம் ஏற்படுகிறதல்லவா? அதனை ஏற்றுக்கொள்கிறோம் அல்லவா? அதேபோல, இணையம் தரும் வசதிகளை அனுபவிக்கும் நாம், அவதூறு காரணமாக நம்மில் சிலருக்கு ஏற்படும் தொல்லைகளையும் ஏற்கவேண்டியிருக்கும்.

தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி தன் கருத்தை மாற்றிக்கொள்வார் என்றே நினைக்கிறேன். இல்லாவிட்டால் உச்ச நீதிமன்றம் சென்று கருத்துரிமையை நிலைநாட்டவேண்டியதுதான். வசையுரிமை, அவதூறு உரிமை ஆகியவற்றையும் சேர்த்துத்தான்.

கருத்துகள் இல்லை: