செவ்வாய், 10 ஜனவரி, 2012

நக்கீரன் – மாட்டுக்கறி ! மயிலாப்பூர் மாமி V/S கிசுகிசு மாமா !!

மாட்டுக்கறி சாப்பிடும்- மாமி- நான்
பாசிச ஜெயாவின் காட்டு தர்பாரை அம்பலப்படுத்தி மக்களது பிரச்சினைகளை எழுதுவதற்கு பதிலாக நக்கீரனும் ஜூனியர் விகடன் பாணியில் இப்படி கிசுகிசு செய்திகளை எழுதி கல்லா கட்டுகின்றன
கிசு கிசுவே அரசியலாக....
“போயஸ் தோட்டத்தில் ஞாயிறு நள்ளிரவில் ஒரு வயலெட் நிற பி.எம்.டபிள்யூ கார் வந்தது. அதில் சிறிய சூட்கேசுடன் இறங்கிய மர்ம மனிதர் ஒரு மணிநேரம் இருந்து விட்டு திடீரென்று மறைந்தார்.” இப்படி துணுக்கு மூட்டையில் குடிகொண்டிருந்த சினிமா கிசு கிசு வடிவத்தை அரசியலுக்கும் கொண்டு வந்து அதில் ஒரு புது பாணியையே உருவாக்கியது ஜூனியர் விகடன். சினிமா கவர்ச்சியில் நீந்திக் கொண்டிருக்கும் தமிழகத்திடம் அரசியல் செய்திகளையும் இப்படி கிசுகிசு பாணியில் கொண்டு போனால் கல்லா கட்டலாம் என்று ஜூவி வெற்றியடைந்த பிறகு பல புலனாய்வு பத்திரிகைகள் புற்றீசல் போல தோன்றின.
அதில் வெற்றியடைந்த பத்திரிகை நக்கீரன். ஆரம்பத்தில் ஜெயா ஆட்சியில் நக்கீரன் தண்டிக்கப்பட்டதும், அதை எதிர்த்து போராடியதும் உண்மை என்றாலும் அப்போதே அந்த பத்திரிகை கிசு கிசு இதழியலில் கொடி கட்டிப் பறந்தது. இந்த வடிவத்திற்கு பொருத்தமாக இருந்த படியால் வீரப்பன் கதையும், கடைசியாக வந்த நித்தியானந்தா கதையும் அதற்கு கிடைத்த அட்சய பாத்திரங்களாக இருந்தன. இது போக பாலியல் ரீதியில் வாசகனை தூண்டி விடக்கூடிய கதைகள், தொடர்கள், செய்திகள் ஏராளமாய் வரும். இதற்கும் ஜூ.விதான் முன்னோடி.

மாட்டுக்கறி சாப்பிடும்- மாமி- நான்ஈழப்பிரச்சினையின் போது கூட பிரபாகரன் படத்தையும் பொய்ச் செய்தியையும் போட்டு ஏராளமாக கல்லா கட்டிய நக்கீரன் அதற்கு தோதாக பாதிரி ஜகத் கஸ்பரின் புரட்டு தொடரைப் போட்டு ஏமாற்றியது. இப்படி இழவு வீட்டிலும் ஆதாயம் பார்ப்பதற்கு அவர்கள் வெட்கப்படவில்லை.
கடந்த தி.மு.க ஆட்சியின் போது நக்கீரன் பத்திரிகை அடித்த ஜால்ராவினாலேயே அதன் நம்பகத்தன்மை இழந்து விட்டிருந்தது. அதன் விநியோகமும் வெகுவாகக் குறைந்திருந்தது. தற்போது நக்கீரனை பிடிக்காத ஜெயா ஆட்சிக்கு வந்திருந்தாலும் முன்பு போல அதன் வீச்சு பொது மக்களிடம் எடுபடவில்லை.
இந்நிலையில்தான் சசிகலா நீக்கம் நடக்கிறது. இதையும் அரசியல் ரீதியாக பார்க்காமல் போயஸ் தோட்டத்து படுக்கையறை இரகசியம் போல கடந்த ஒரு மாதமாக எழுதிக் குவித்து வருகிறது நக்கீரன். இதில் சசிகலாவே நேரடியாக நக்கீரனுக்கு விளக்கமளிப்பது போல அட்டைப்படத்திலேயே போட்டு ஏமாற்றியது. ஜூவியும் கூட சசிகலா நீக்கத்தை அரசியல் அற்ற மர்மக் கதை போல சொல்லி வந்தாலும், நக்கீரன் மட்டும் போட்டி கருதி இன்னும் மலிவாக எழுதி வந்தது.
நக்கீரன் பத்திரிகைக்காக கொழும்பிலிருந்து எழில், தில்லியிலிருந்து சிந்துஜா, தென் ஆப்பிரிக்காவிலிருந்து ராகவன், அண்டார்டிகாவிலிருந்து ஆண்டியப்பன் என்ற பெயர்கள் போட்டு எழுதப்படும் கட்டுரைகளும் சரி, எல்லா அரசியல் தலைவர்களது வீட்டுக்குள்ளிரிருந்தும் நக்கீரன் பத்திரிகை நிருபர்கள் நேரில் பார்த்து எழுதுவது போன்ற பாவனைகளும் சரி, இந்த டூப்பு மேட்டரில் நக்கீரனை விஞ்சுவதற்கு ஆளில்லை.
தாக்கப்பட்ட நக்கீரன் அலுவலகம்
அப்படித்தான் சசிகலா நீக்கம் பற்றி ஏராளமாய் எழுதிக் குவித்தார்கள். உண்மையில் சசிகலா நீக்கம் குறித்து எப்படி பார்க்க வேண்டும் என்று வினவில் இரு கட்டுரைகள் வந்திருக்கின்றன. அதையும் நக்கீரன், ஜூவி கட்டுரைகளையும் ஒப்பிட்டு பார்த்தீர்களேயானல் இவர்களது தரத்தையும், விற்பனை நோக்கத்தையும் புரிந்து கொள்ளலாம்.
சசிகலா நீக்கம் குறித்து ஏராளமான திகில் செய்திகளையெல்லாம் வெளியிட்ட போது ஏதாவது அ.தி.மு.கவிலிருந்து மிரட்டல், அடிதடி வரும், அதை வைத்து இமேஜை தூக்கி காசாக்கலாம் என்று நக்கீரன் திட்டமிட்டே செயல்பட்டது. அப்படி ஒன்றும் வரவில்லை என்பதால் இப்போது மாட்டுக்கறி மாமி மேட்டரை எம்.ஜி.ஆர் சொன்னதாகவும், அதை நக்கீரனது இன்றைய நிருபர் டைம் மெஷினில் பின்னோக்கி சென்று கேட்டு எழுதியதாகவும் தெரிகிறது.
மற்ற எதனையும் பற்றி கவலைப்படாத ஜெயாவின் மயிலாப்பூர் கும்பல் இந்த மாட்டுக்கறி மேட்டரை பார்த்து ‘கொலவெறி’ அடைந்ததில் ஆச்சரியமில்லை. ஜெயலலிதா மாட்டுக்கறி சாப்பிடுபவர் என்று ஒரு செய்தியைப் பார்த்தால் துக்ளக் சோவும், சு.சாமி மாமாவும் எவ்வளவு வெறியுடன் கோபம் அடைந்திருப்பார்கள் என்று நாமே யூகித்து தெரிந்து கொள்ளலாம். அந்த கோபம்தான் அ.தி.மு.க குண்டர் படை வரை வந்து ஜானி ஜான் கான் ரோட்டிலிருக்கும் நக்கீரனது அலுவலகத்தை தாக்கியிருக்கிறது. நக்கீரன் அலுவலகத்திற்கு அருகில் இருக்கும் ஒரு புகழ்பெற்ற கடையில்தான் மாலையில் மாட்டுக்கறி வருவல் விற்பனை செய்யப்படும். இங்கு வந்து விரும்பிச் சாப்பிடுபவர்களில் அ.தி.மு.கவினரும் அடக்கம். இவர்கள்தான் இப்போது வந்து அட்டாக் பாண்டி போல ஆடியிருக்கிறார்கள்.
பார்ப்பன விழுமியங்களில் கொழுத்து திரியும் ஜெயாவின் மயிலாப்பூர் கும்பலுக்கு வெறியை வர வைத்து ஆதாயமடைய வேண்டும் என்று நக்கீரன் கவனமாகத்தான இதை வெளியிட்டிருக்கிறது. இப்போது இந்த அடிதடியை வைத்து எப்படியும் ஒரு மாதம் ஓட்டி விடுவார்கள். தற்போது அ.தி.மு.கவும் இதற்காக நக்கீரனது மேல் வழக்கு போட்டிருக்கிறது. தமிழகத்தில் எதெல்லாம் அரசியல் என்று பேசப்பட்டும், எழுதப்பட்டும், வருகிறது பாருங்கள்!
பாசிச ஜெயாவின் காட்டு தர்பாரை அம்பலப்படுத்தி மக்களது பிரச்சினைகளை எழுத வேண்டிய பத்திரிகைகள் இப்படி கிசுகிசு செய்திகளை வைத்து எழுதி கல்லா கட்டும் போது நாம் என்ன செய்வது?
பாசிச ஜெயாவை நாம் எதிர்த்துப் போராடும் போது, இந்த கிசுகிசு பத்திரிகைகளையும் புறக்கணிக்குமாறு மக்களிடம் பரப்புரை செய்ய வேண்டியிருக்கிறது. வேறு வழி?
www.vinavu.com

கருத்துகள் இல்லை: