செவ்வாய், 10 ஜனவரி, 2012

கே.பாக்யராஜ். இவரது சாதனையை எவரும் நெருங்கவில்லை

இந்திய சினிமாவின் 'திரைக்கதை ஜித்தன்' கே.பாக்யராஜ். பாக்ஸ் ஆபீஸ் வசூல், ரசிகர்களின் விசில் இரண்டும் சம்பாதிக்கும் திரைக்கதைகள் புனையும் கலைஞன். 'மிடாஸ் டச்' இயக்குநரின் வாழ்க்கையில் இருந்து...
* ஈரோட்டில் கோஷா ஆஸ்பத்திரியில் பிறந்த தேதி-ஜனவரி 7. இரண்டு அண்ணன்களுக்குப் பிறகு பிறந்த கடைசித் தம்பி!
* முதல் வகுப்பையே அவரது தாத்தா கட்டாயத்தின் பேரில் இரண்டு தடவை படித்தார். பி.யூ.சி ஃபெயில் ஆன பிறகு, சென்னைக்குப் புறப்பட்டு வந்துவிட்டார்!
* இதுவரை இயக்குநராகவும், நடிகராகவும், கதாசிரியராகவும் 60-க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றி இருக்கிறார். 'மௌன கீதங்கள்', 'தூறல் நின்னு போச்சு', 'முந்தானை முடிச்சு', 'அந்த 7 நாட்கள்' போன்ற படங்களின் திரைக்கதைகள் அபாரமானவை!
* '16 வயதினிலே', 'கிழக்கே போகும் ரயில்', 'சிகப்பு ரோஜாக்கள்' படங்களில் சிறு வேடங்களில் நடித்த பாக்யராஜை, 'புதிய வார்ப்புகள்' ஹீரோவாக அறிமுகம் செய்தவர் அவரது குரு பாரதிராஜா!
* 'புதிய வார்ப்புகள்' படத்தில் 'உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலையா' என ஒரு பெண் கேட்பார். 'நான் அநாதைங்க. அப்பா- அம்மா உயிரோடு இல்லை!' என வசனம் பேசுவார் பாக்யராஜ். அந்தப் படம் வெளியாவதற்கு 10 நாட்களுக்கு முன் இறந்துவிட்டார் பாக்யராஜின் அம்மா. இன்றும் அந்தப் படத்தின் அந்தக் காட்சியைக் கடக்க நேர்ந்தால், கண்ணீர் கட்டும் பாக்யராஜுக்கு!

* ஏவி.எம் நிறுவனத்தினர், அவர்களது ஆஸ்தான இயக்குநர்களான ஏ.சி.திருலோக சந்தர், எஸ்.பி.முத்துராமன் ஆகியோரை வைத்து தான் அப்போது படங்கள் தயாரித்துக்கொண்டு இருந்தனர். முதன்முதலாக அந்தப் பழக்கத்தை விடுத்து, 'முந்தானை முடிச்சு' பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்தது!

* இயக்குர் ஆவதற்கான முயற்சிகளின்போது அறிமுகமான நடிகை பிரவீணா. அவருக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்தபோது, இருவருக்கும் இடையே பூத்த காதல் திருமணத்தில் முடிந்தது. ஆனால், அடுத்த சில வருடங்களில் நோயுற்று இறந்துவிட்டார் பிரவீணா!

* 'ராஜா' எனச் செல்லமாக அழைக்கும் பிரவீணா அளித்த R எழுத்து பதித்த மோதிரம் எப்போதும் பாக்யராஜ் விரலில் மின்னும். இடையில்,அந்த மோதிரம் தொலைந்துபோக, அதே டிசைனில் மோதிரம் அளித்தவர் மனைவி பூர்ணிமா!

* பாக்யராஜ்-பூர்ணிமா தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள். மூத்த மகன் சாந்தனு... தமிழ், மலையாள சினிமாக்களின் அங்கீகாரத்துக்கு உழைத்துக்கொண்டு இருக்கிறார். 'பாரிஜாதம்' படத்தில் அறிமுகமான மகள் சரண்யா, தற்போது நகைகள் வடிவமைப்பில் கவனம் செலுத்துகிறார்!

* பாக்யராஜ் - பூர்ணிமா திருமணத்தை கருமாரி அம்மன் கோயிலில் நடத்திவைத்தவர் எம்.ஜி.ஆர். கூடவே இருந்து ஆசீர்வதித்தவர் சிவாஜி. இரண்டு திலகங்களும் சேர்ந்து அபூர்வமாக நடத்திய திருமணம் இதுவாகத்தான் இருக்கும் என்கிறார்கள்!

* தேனிலவு செல்லக்கூட நேரம் இல்லாமல் பரபரப்பாக இருந்தவர், வருடங்கள் கழித்து தன் குழந்தை, மைத்துனரோடு பெரிய பட்டாளமாகச் சென்று தேனிலவு கொண்டாடியதை இன்றும் சிலாகித்து ரசிப்பார்!

* தமிழகத்தின் மிகப் பெரிய தியேட்டர் மதுரை தங்கம். அங்கு 100 நாட்கள் ஓடிய படம் எம்.ஜி.ஆரின் 'உலகம் சுற்றும் வாலிபன்'. அதற்குப் பிறகு, 100 நாட்கள் ஓடிய படம் பாக்யராஜின் 'தூறல் நின்னு போச்சு'!

* 'ஆக்ரி ராஸ்தா', 'பாபா தி கிரேட்', 'மிஸ்டர் பச்சாரா' என மூன்று இந்திப் படங்கள் இயக்கி உள்ளார். இவருடைய பல திரைக்கதைகளை இந்திப் படங்களில் நடித்து ஸ்டார் அந்தஸ்து எட்டியவர் அனில்கபூர்!

* திருமணப் பரிசாக எம்.ஜி.ஆர் வழங்கிய ஆள் உயரக் குத்துவிளக்குகள் இரண்டு, பாக்யராஜ் வீட்டு பூஜை அறையை அலங்கரிக்கின்றன. அதை எம்.ஜி.ஆரே பாக்யராஜ் வீட்டில் இறக்கிவிட்டு, வரவேற்புக்கு வந்தாராம்!

* "நான் 'சுட்டு' எடுத்த படம் 'வீட்ல விசேஷங்க' மட்டும்தான். மற்றபடி எல்லா படங்களும் என் சொந்தக் கற்பனை!" என்பார் துணிச்சலாக!

* 'மன்ற முரசு' இதழின் ஆண்டு விழாவில், 'பாக்யராஜ்தான் என்னுடைய கலை வாரிசு!' என்று எம்.ஜி.ஆர். அறிவித்தது, அரசியல் அரங்கில் பெரும் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கின!

* சினிமாவில் நெருங்கிய நண்பர், ரஜினி! திடீரென்று கிளம்பி எங்கேனும் நல்ல ஹோட்டலுக்குச் சென்று சாப்பிட்டு, மணிக்கணக்கில் பேசிக்கொண்டு இருப்பார்கள்!

* பிரவீணா, ரதி, ஊர்வசி, ராதிகா, சுமதி, பூர்ணிமா, சரிதா, அஸ்வினி, ஷோபனா, சுலக்ஷணா, பிரகதி, ராதா, பானுப்ரியா, ரோகிணி, ஐஸ்வர்யா, நக்மா என ஏராளமான நடிகைகளோடு ஜோடியாக நடித்த இயக்குநர் - நடிகர் இவராகத்தான் இருப்பார்!

* கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனால், கோயிலுக்குச் சென்று வழிபடும் வழக்கம் இல்லை. திருமண நாள் அன்று மட்டும் தவறாமல் கருமாரி அம்மன் கோயிலுக்குச் செல்வார்!

* பாக்யராஜ் படங்களில் எம்.ஜி.ஆருக்குப் பிடித்தது 'தூறல் நின்னு போச்சு'. " 'டார்லிங் டார்லிங்' படத்தில் வில்லனை நீ அடிச்சிருக்கணும்!" என்று அவரிடம் குறைபட்டாராம் எம்.ஜி.ஆர்!

* நடிக்க ஆசைப்பட்டு வந்த பார்த்திபனை இயக்குநர் ஆக்கி அழகு பார்த்தார் பாக்யராஜ். அவரது புகழ் பெற்ற சிஷ்யர்களில் பாண்டியராஜன், லிவிங்ஸ்டனும் உண்டு!

* ஒருமுறை ராஜ்கபூரிடம், பாக்யராஜை அறிமுகம் செய்து இருக்கிறார் போனிகபூர். 'உன்னைத் தெரியுமே, 'டார்லிங் டார்லிங்' பார்த்திருக்கேன். சூப்பர்!' என்று ராஜ்கபூர் சொன்னபோது, நெகிழ்ந்து இருக்கிறார் பாக்யராஜ்!

* பாக்யராஜ் இசையமைப்பாளராகவும் ஆறு படங்கள் பணியாற்றியிருக்கிறார். 'ஆராரோ ஆரிரரோ' படத்தில் இவர் இசையில் உருவான 'என் கண்ணுக்கொரு நிலவா உன்னைப் படைச்சான்' பாடல் ஜானகியின் மனம் கவர்ந்த பாடல். அதற்காக ஜானகி பரிசளித்த பேனாவை ஞாபக அடுக்கிலும், அலமாரி அடுக்கிலும் பாதுகாத்துவைத்திருக்கிறார் பாக்யராஜ்!

* பாக்யராஜுக்கு மிகவும் இஷ்டமான வகுப்பு ஆசிரியர் பெயர் சண்முகமணி. அவரை நினைவு கூரும் விதமாகத்தான் 'புதிய வார்ப்புகள்', 'சுந்தர காண்டம்' எனத் தனது படங்களில் வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் ஆசிரியருக்கு 'சண்முகமணி' என்று பெயர் சூட்டுகிறார். அமெரிக்காவில் செட்டிலாகிவிட்ட அந்த ஆசிரியருடன் இன்னமும் தொடர்பில் இருக்கிறார் பாக்யராஜ்!

* சிவாஜியை வைத்து 'தாவணிக் கனவுகள்' இயக்கித் தன் தாகத்தைத் தணித்துக்கொண்டார். ஆனாலும், நண்பர் ரஜினிகாந்த்தை வைத்து முழு திரைப்படம் இயக்கியது இல்லை என்ற ஆதங்கம் இப்போதும் உண்டு. இன்னும் அதற்கான வாய்ப்பு இருப்பதாக நம்புகிறார் பாக்யராஜ்!
thanks vikatan

கருத்துகள் இல்லை: