திங்கள், 9 ஜனவரி, 2012

நக்கீரன் மீது இன்றும் அதிமுகவினர் தாக்குதல்-திருமாவளவன் கண்டனம்

சென்னை: நக்கீரன் அலுவலகம் மீது இன்றும் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் தாக்குதல் நடத்தினர். வழக்கம் போல போலீஸார் தடுக்காமல் வேடிக்கை பார்த்தனர்.
நேற்று வெளியான நக்கீரன் இதழில் முதல்வர் ஜெயலலிதா குறித்த செய்தி இடம் பெற்றிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் நக்கீரன் இதழ்களை தீயிட்டுக் கொளுத்தி ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவினர் குவித்தனர்.
சென்னை ராயப்பேட்டை ஜானிஜான் கான் தெருவில் உள்ள நக்கீரன் அலுவலகத்தின் மீது அ.தி.மு.கவினரும் ரவுடிகளும் கொடூரத் தாக்குதல் நடத்தினர். சோடாபாட்டில், பாறாங்கல், உருட்டுக்கட்டைகள் ஆகியவற்றால் நக்கீரன் அலுவலகத்தைக் கடுமையாகத் தாக்கி சேதப்படுத்தியதோடு, அங்கு நின்ற கார்கள், டுவீலர்கள் ஆகியவற்றையும் அடித்து நொறுக்கினர். 100க்கும் அதிகமான அ.தி.மு.கவினரும் ரவுடிகளும் இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து நடத்திக்கொண்டிக்க, பாதுகாப்பு என்ற பெயரில் வந்த போலீசார் வேடிக்கை பார்த்தபடியே நின்றனர். தொடர்ந்து அணி அணியாக வந்து தாக்குதல் நடத்தினர்.
இந்த நிலையில் இன்றும் அதிமுகவினர் நக்கீரன் அலுவலகத்தைத் தாக்கினர். சுமார் 100க்கும் மேலானோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டனர். அதிமுகவினர் வீசிய கற்கள் நக்கீரன் அலுவலகத்தின் வழியே சென்ற பொதுமக்கள் மீதும் பட்டது. ஏற்கனவே பாதுகாப்பு என்ற பெயரில் வந்த போலீசார் வழக்கம்போல வேடிக்கை பார்த்தபடியே நின்றனர்.

திருமாவளவன் கண்டனம்

இந்த நிலையில், நக்கீரன் மீதான தாக்குதலுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

சென்னையில் உள்ள நக்கீரன் அலுவலகத்தை அதிமுகவினர் அணி அணியாக சென்று தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

தன்னைப் பற்றி செய்தி வெளியிட்டதற்காக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அவர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டிருக்கலாம் அல்லது சட்டப் பூர்வமாக இதனை சந்தித்திருக்கலாம். அதைவிடுத்து பத்திரிகை அலுவலகத்தை தாக்கியிருப்பது ஜனநாயகத்திற்கு விரோதமான செயல் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை: