அ.தி.மு.க.,வில் நெடுங்காலமாக ஜெயலலிதாவுடன் சேர்ந்து ஆட்சி செய்து கொண்டு இருந்த சசிகலாவை ஜெயலலிதா பிரிந்த பின்பு , அடுத்து என்ன நடக்கும். சசி மற்றும் நடராஜன் ஆகியோரின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதுதான் பலரது கேள்வி. இதற்கு, தஞ்சாவூரில் பொங்கல் பண்டிகையன்று, புதிய பார்வை ஆசிரியர் நடராஜனால் நடத்தப்படும், "தமிழர் கலை இலக்கியத் திருவிழா' வில் விடை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு அ.தி.மு.க., வினரிடையே ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின், முன்னாள் தோழி சசிகலாவின் கணவர், புதிய பார்வை ஆசிரியர் நடராஜன். இவரது தந்தை மருதப்பாவின், நினைவாக, "மருதப்பா அறக்கட்டளை' சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையன்று துவங்கி மூன்று நாள், தமிழர் கலை இலக்கிய திருவிழா நடப்பது வழக்கம். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நடராஜனே முன்னின்று கவனிப்பார். அடித்தளமே இங்கு தான்: ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் விழாவை முன்னிட்டு, சட்டசபை தேர்தலோ அல்லது லோக்சபா தேர்தலோ நடக்கும் சூழ்நிலை இருந்தால், அதற்கேற்றார்போல் அ.தி.மு.க.,வுடன் கூட்டணிக்கு தேவையான கட்சிகளின் தலைவர்களை விழாவுக்கு அழைத்து வந்து கூட்டணிக்கான அடித்தளம் அமைப்பார். கடந்த 2006 சட்டசபை தேர்தலின் போது நடந்த விழாவில், அப்போதைய ம.தி.மு.க., அவைத் தலைவர் கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், நடிகர் கார்த்திக் ஆகியோரை ஒரே மேடையில் ஏற்றி, அ.தி.மு.க., கூட்டணிக்கு தூபம் போட்டார். அவராலோ அல்லது எதிர்பாராத விதமாகவோ ம.தி.மு.க.,வும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்தன.
கடைசி நேரத்தில் நடிகர் கார்த்திக் கூட்டணியில் இருந்து கழற்றி விடப்பட்டார்.
மேடையேற்றுவது யாரை? இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் விழாவில், அன்றைய அரசியல் சூழ்நிலைக்கேற்ப கூட்டணி கட்சித் தலைவர்கள், ஜாதி சங்க தலைவர்கள்,
நடிகர்கள் ஆகியோரை மேடையேற்றுவது நடராஜனின் வழக்கம். அதேமேடையில், முதல்வர் ஜெயலலிதாவை கண்டிப்பது போன்று பேசுவதும், "அவர் திருந்தவில்லை என்றால், வரும் தேர்தலில் நான் போட்டியிடுவேன்' என, குண்டு போடுவார். அதேபோல், இனி மொபைல் போன்களை, (உளவுத் துறையால் ஒட்டுக் கேட்கப்படுவதால்) இனி பயன்படுத்த மாட்டேன் என, கூட்டத்தினரை நோக்கி வீசியெறிவார். இவையெல்லாம், நடராஜனின் மனைவி சசிகலா
மற்றும் மன்னார்குடி கும்பல், முதல்வர் ஜெயலலிதாவுடன் அதிகார மையமாக இருந்த காலக்கட்டங்களில் நடந்தது. தற்போது, மன்னார்குடி கும்பலை முதல்வர் ஜெயலலிதா துடைத்தெறிந்துள்ள நிலையில், அதிகாரங்களை இழந்துள்ள நிலையில், இந்தாண்டு தமிழர் கலை இலக்கிய திருவிழா நடக்கிறது. தஞ்சாவூரில், 15ம் தேதி துவங்கி இரண்டு நாள் நடக்கிறது. இதில், எப்போதும் நடராஜனுடன் வலம் வரும் மதுரை ஆதீனம், சாமிதோப்பு பிரஜாதிபதி அடிகளார், இயக்குனர் ராஜ்குமார், கவிஞர் சினேகன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். ஈழக்கவிஞர் காசி ஆனந்தன், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு சங்க தலைவர் அப்பாஸ் ஆகியோரும் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மண்டபம் மாற்றம்: விழா நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், விழாவுக்கான பணிகள் நடந்து வருகிறது. கடந்தாண்டுகளில் விழா நடந்த இடமான தமிழரசி திருமண மண்டபம் மாற்றப்பட்டு, அந்த இடத்துக்கு அருகே பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தாண்டு விழாவில் முதல்வர் ஜெயலலிதா, தன்னையும், தன் மனைவி சசிகலா மற்றும் உறவினர்களை தூக்கியெறிந்ததுக்கு பதிலடி கொடுப்பார். புதிய கட்சி துவங்குவது குறித்து அறிவிப்பார் போன்ற பல எதிர்பார்ப்புகளுடன், அ.தி.மு.க.,வினரும், பொதுமக்களும் தமிழர் கலை இலக்கிய விழாவின் இறுதி நாளுக்காக ஆர்வத்துடன் காத்திருக் கின்றனர். காரணம் அன்று தான் நடராஜன் பேசுவார் என, எதிர்பார்க்கப்படுவது தான்.
- நமது சிறப்பு நிருபர் -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக