காமராஜர் காலத்தில் ஸ்தாபன காங்கிரஸ் கட்சியிலும், பின்னர் மொரார்ஜி தேசாயின் ஜனதா கட்சியிலும் இணைந்து பணியாற்றியவர் பழ.கருப்பையா. பின்னர் பல கட்சிகளுக்கு தாவி, கடைசியாக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அ.தி.மு.க.,விற்கு தாவினார். அ.தி.மு.க.,வில் தலைமைக் கழக பேச்சாளராக மாறிய பழ.கருப்பையா, கட்சிப் பொதுக் கூட்டங்களில் பங்கேற்று வந்தார். தி.மு.க., ஆட்சிக் காலத்தில், இவரது வீடு சமூக விரோதிகளால் தாக்கப்பட்டது.கடந்த சட்டசபை தேர்தலில் துறைமுகம் தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு, எம்.எல்.ஏ.,வானார். அதன்பின், அவருக்கு அ.தி.மு.க., கொள்கை பரப்பு இணைச் செயலர் பதவி வழங்கப்பட்டது. அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவிற்கு நேரடியாக அறிமுகமானவர் என்பதாலும், இயல்பான சுபாவத்தாலும், கட்சி பிரமுகர்களிடம் இவர் அதிகம் நெருக்கம் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது.
இந்நிலையில், இவரை கட்சிப் பதவியில் இருந்து ஜெயலலிதா நீக்கம் செய்துள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "" அ.தி.மு.க., கொள்கை பரப்பு இணைச் செயலர் பொறுப்பில் இருக்கும் பழ.கருப்பையா இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார்'' எனத் தெரிவித்துள்ளார்.
நீக்கம் ஏன்?கட்சி நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது, இலக்கியக் கூட்டங்கள், நூல் வெளியீட்டு விழா என பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும், பத்திரிக்கைகளில் கட்டுரைகளை எழுதுவதும் பழ.கருப்பையாவின் வழக்கம். அது போன்ற சமயங்களில், வெளிப்படையாக பல்வேறு கருத்துக்களை இவர் வெளிப்படுத்தியுள்ளார்.
சமீபத்தில், ஒரு வாரப் பத்திரிக்கையில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., - கருணாநிதி நட்பு குறித்த கட்டுரையில், முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியன் குறித்தும், ஈ.வெ.ரா., குறித்தும் சில கருத்துக்களை அவர் எழுதியுள்ளார். இதன் காரணமாகவும், கட்சி நிர்வாகிகளை அரவணைத்துச் செல்வதில்லை என்ற குற்றச்சாட்டு காரணமாகவும் இவரது பதவி பறிக்கப்பட்டிருக்கலாம் என்று அ.தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.மாவட்டச் செயலர் மாற்றம்:திருநெல்வேலி புறநகர் (தெற்கு) மாவட்டச் செயலர் பொறுப்பு வகித்து வரும் எம்.எல்.ஏ., ராஜேந்திரன் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். எம்.ஜி.ஆர்., மன்ற செயலர் பொறுப்பில் இருந்த முருகையா பாண்டியனை மாவட்டச் செயலராக நியமித்து ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக