திங்கள், 9 ஜனவரி, 2012

தமிழர்களின் துயரமும் விஜயகாந்தின் குல்லாவும்

vijayakanth

விஜயகாந்த் தொப்பிக்கு மேல் காவி. நல்ல குறியீடு. எதிர்காலத்தில் பா.ஜ.கவின் தமிழ்நாட்டு தலைமைக்கான  ‘காவித் தலை’ . சபாஷ் சரியான அறிகுறி.
***
டிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் – தமிழக மீனவர்களை, ஈழத் தமிழர்களை சுட்டுக்கொல்கிற, இலங்கை ராணுவத்தை கண்டித்து, அதன் மேல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, டெல்லியில் ‘ஒரேஒரு வேளை’ உண்ணாவிரதம் இருந்தார்.
இந்த உண்ணாவிரதத்தின் போது, தமிழக மீனவர்கள் அணியும் தொப்பி என்று தலையில் நீண்ட குடுவையைப்போன்ற தொப்பியை அணிந்திருந்தார். எந்த ஊரில் மீனவத் தமிழன் இப்படி ஒரு தொப்பியை அணிந்திருக்கிறார்?  இது சினிமாவில் வருகிற மீனவர் அணிகிற காஸ்டியூம்.
தமிழ் சினிமாவில் மீனவர்கள், நீண்ட தொப்பியும், லங்கோட் போன்ற உடையும் அணிந்து முழங்கைக்கு மேல் தாயத்து கட்டி, இறுக்கமான சட்டையும் அணிந்திருப்பார்கள்.
இதுபோன்ற கோமாளித்தனமான காஸ்டியூம்களோடு, தமிழக மீனவர்களை வேடிக்கைப் பொருளாக, மீனவர்கள் அல்லாத தமிழர்களிடம் இருந்து வேறுபடுத்தி,  ‘தமிழ் மீனவர்கள் வேறு யாரோ’ என்பது போன்ற எண்ணத்தை சித்திரித்து பிரபலமாக்கியது,  கடற்கரையை மீனவர்கள் அசுத்தப்படுத்துகிறார்கள் என்பதாக குற்றம் சாட்டி, சென்னை மெரினா கடற்கரையில், மீனவர்களை தன் ஆட்சிகாலங்களில், இன்றைய இலங்கை ராணுவம் போல் சுட்டுக்கொன்ற,  மீனவ நண்பன் எம்.ஜி.ஆர்.
நீண்ட தொப்பியும், லங்கோட் போன்ற உடையும் அணிவது ஆந்திர மீனவர்கள் வழக்கம். ஆரம்ப காலங்களில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களில், இயக்குநர்களில் மிகப் பெரும்பான்மையானவர்கள், ஆந்திராவை சேர்ந்தவர்களே. படகோட்டி படமும் கூட ஆந்திராவைச் சேர்ந்த, நாகிரெட்டியின் திரைப்படம்தான்.
அதனால், அவர்கள் ஆந்திர மீனவர்கள் அணிகிற உடையை, செயற்கையான சினிமா சேர்க்கைகளோடு கொச்சைப்படுத்தி, தமிழக மீனவர்களின் அடையாளமாக காட்டினார்கள்.
தமிழர்களுக்காக தன் வாழ்க்கையையே அர்பணித்து கட்சி நடத்துவதாக சொல்கிற விஜயகாந்த் போன்றவர்கள், தமிழக மக்களில் மிக பெரும்பான்மையான உழைக்கும் மக்களான மீனவர்கள் எப்படி வாழ்கிறார்கள்? அவர்களின் வாழ்க்கைத் தரம், முறை எப்படி இருக்கிறது? என்று தெரிந்து கொள்ளாமல், ‘சாவு வீட்ல பொணமாகவும்-கல்யாண வீட்ல மாப்பிளையாகவும்’ இருக்க வேண்டும் என்கிற சினிமாக்காரர்களின் விளம்பர மனோபாவதில் இருந்து வெளிவராதவர்களாகவே இருக்கிறார்கள். அதனால்தான் தமிழக மீனவர்கள் அணிகிற குல்லா என்று ஒன்றை தன் தலையில் வைத்திருக்கிறார்.
உண்மையில் தமிழ் மீனவர்கள் தலையில் அவர் வைக்கும் குல்லா அது.
‘யார் வீ்ட்டு எழவோ… பாய் போட்டு அழவோ’ என்று ஒரு பழமொழி வட மாவட்டத் தமிழர்களிடம் இருக்கிறது. அதுபோல் கூலிக்கு மாரடிக்கிற இந்தச் சினிமாக்காரர்களுக்கு, அரசியல்வாதிகளுக்கு தமிழக மீனவர் துயரமும், ஈழத்தமிழர் துயரமும், தான் தலைவர் ஆவதற்கும், தான் ஓட்டு வாங்குவதற்கும் ஒரு கருவியாக, பிரச்சாரமுறையாக பயன்படுகிறது.
ஒரு வேளை இந்த பிரச்னை தீர்ந்து விட்டால் தன் மூலம் பெரும் அதிர்ச்சிக்கும், நஷ்டத்திற்கும் உள்ளாகுபவர்கள் இந்த அரசியல்வாதிகளாகத்தான் இருப்பார்கள்.
வாய்க்கரிசியையும் புடுங்கி, கள்ள மார்க்கெட்ல வித்து காசு பாத்துடுவாங்க.
படம்; தினகரன்

கருத்துகள் இல்லை: