செவ்வாய், 10 ஜனவரி, 2012

AIDS நிதியை தவறாகப் பயன்படுத்திய பிரான்ஸ் அதிபரின் மனைவி

Carla Bruni Sarkosi

லண்டன்: எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உதவ வழங்கப்பட்ட நிதியை பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சார்கோஸியின் மனைவி கார்லா புரூனி தனது நெருங்கிய தோழிக்கு கொடுத்துள்ளார். மேலும் தான் நடத்தும் அறக்கட்டளைக்கும் அந்த பணத்தை பயன்படுத்தியுள்ளார் என்று கூறப்படுகின்றது.
தாய்மார்களிடம் இருந்து குழந்தைகளுக்கு ஹெச்ஐவி பரவுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பார்ன் ஹெச்ஐவி ஃப்ரீ என்னும் திட்டத்திற்காக ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரைச் சேர்ந்த குளோபல் பன்ட்ஸ் என்னும் நிறுவனம் நிதி கொடுத்துள்ளது. இந்த நிதியத்துக்கான தூதர் பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சார்கோஸியின் மனைவி கார்லா புரூனி.
புரூனி அந்த நிதியில் இருந்து 2.7 மில்லியன் யூரோவை தனது நெருங்கிய தோழி ஜூலியனின் நிறுவனங்களுக்கு கொடுத்துள்ளார். மிகக் குறைந்த பணத்தையே எய்ட்ஸ் திட்டத்திற்கு செலவிட்டுள்ளார். அவர் நடத்தும் கார்லா புரூனி-சார்கோஸி அறக்கட்டளைக்கும் குளோபல் பன்ட்ஸ் நிதி சென்றுள்ளது என்று பிரான்ஸ் நாட்டின் அரசியல் பத்திரிக்கையான மாரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

எனது நெருங்கிய தோழியின் நிறுவனத்திற்கு பணம் கொடுத்தது உண்மை தான். ஆனால் அது பொது நிதியன்று என்று புரூனி தெரிவித்ததாக இங்கிலாந்து ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மாரியானில் வெளிவந்த செய்தி உண்மையல்ல என்று குளோபல் பன்ட்ஸ் தெரிவித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் பெண் குழந்தையை பெற்றெடுத்த பிறகு புரூனி பொது நிகழ்ச்சிகளில் அவ்வளவாக கலந்துகொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: