செவ்வாய், 10 ஜனவரி, 2012

மதிமுக, பாமக, விடுதலை சிறுத்தைகளை தடை செய்ய வேண்டும்

தஞ்சாவூர்: தமிழர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் மதிமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகளை தடை செய்ய முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் யுவராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
தஞ்சாவூரில் இளைஞர் காங்கிரஸ் மாநில நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்ட யுவராஜா பேசியதாவது,
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பும், நிபுணர் குழுவின் அறிவிப்பும் தமிழகத்துக்கு சாதகமாக உள்ளது. இப்பிரச்னையில் தமிழகத்துக்கு தான் இறுதி வெற்றி கிடைக்கும். எனவே, தமிழர்கள் அமைதி காக்க வேண்டும்.
தமிழர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் மதிமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள் போன்ற சிறிய கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. எனவே, இக்கட்சிகளை தடை செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் மின்தடையால் தொழில்துறை, விவசாயம், மாணவர்களின் கல்வி ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளது. மின்வெட்டு நேரமும் அதிகரித்துக் கொண்டே போகிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்தை செயல்படுத்தினால் தான் தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சனை தீரும். கூடங்குளம் பிரச்னையை உதயகுமார் தான் வெளிநாட்டு சதிகளின் பின்னணியில் பெரிதுபடுத்தி வருகிறார். அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.

கருணாநிதி குடும்ப ஆட்சி நடத்தினார். தற்போது அதிகாரிகளின் ஆட்சி நடக்கிறது. தமிழக அமைச்சர்கள் அதிகாரம் இழந்து வருகின்றனர்.

தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் ஒரு சில மணித்துளிகள் மட்டுமே முதல்வர் செலவழித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரையும் சந்தித்து முதல்வர் ஆறுதல் கூறாதது வேதனை அளிக்கிறது. புயல் பாதித்தப் பகுதிகளில் நிவாரண உதவிகளை மட்டும் வழங்காமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வாதாரம் வழங்கும் வகையில் நிரந்தர திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை: