செவ்வாய், 10 ஜனவரி, 2012

Rohini மிஸ் இந்தியா சவுத் அழகியாக சென்னை மாணவி ரோகிணி தேர்வு!

மிஸ் இந்தியா 2011 அழகியாக சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ரோகிணி சுப்பையா தேர்வு செய்யப்பட்டார்.
இரண்டாம் இடத்தைப் பெற்றார் கர்நாடக மாநிலம் ஷிமோகாவைச் சேர்ந்த அஸ்வினி சந்திரசேகர்.
விவெல் மிஸ் இந்தியா சவுத் 2011 போட்டிகள் சென்னை நந்தம்பாக்கம் உள்விளையாட்டரங்கில் நடந்தன. விவெல் நிறுவனத்துடன், மாயா ஈவன்ட்ஸ் மற்றும் இ3 இன்னொவேஷன்ஸ் நிறுவனங்களும் இணைந்து நடத்திய இந்தப் போட்டியில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இறுதிப் போட்டியில் மட்டும் 18 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் சிறந்த தென்னிந்திய அழகியாக சென்னையைச் சேர்ந்த ரோகிணி சுப்பையா தேர்வு செய்யப்பட்டார் (21). இவர் சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பேஷன் டிசைனிங் படிக்கும் மாணவி. சென்னைதான் இவரது சொந்த ஊர்.

ஷிமோகா அழகி

இரண்டாவது சிறந்த அழகியாக கர்நாடக மாநிலம் ஷிமோகாவைச் சேர்ந்த அஸ்வினி தேர்வு செய்யப்பட்டார். இவர் மாடலிங் துறையில் பணியாற்றுகிறார். நிறைய விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். இப்போது நடிகர் மோகன்லாலுடன் ஒரு படத்தில் நடிக்கிறார்.

நடிகர் பிராஷாந்த்

முதலிடம் பெற்ற ரோகிணிக்கு, நடிகர் பிராந்த் கிரீடம் சூட்டி வாழ்த்தினார். போட்டி நடுவராக இருந்தார் கடந்த ஆண்டு தென்னிந்திய அழகிப் பட்டம் சூடிய சாவ்யா.

இந்த விழாவி்ல டிசைனர் பிரியங்கா பங்கேற்றார்.

சிறந்த தென்னிந்திய அழகிப் பட்டம் வென்ற ரோகிணி, இதுகுறித்து கூறுகையில், "எனக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம் இது. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பெரிய அளவில் போட்டி இருந்தது. இறுதிப் போட்டிக்கு மட்டுமே 18 பேர் நான்கு மாநிலங்களிலிருந்து வந்திருந்தனர். தமிழகத்திலிருந்து நான் மட்டுமே இறுதிப் போட்டிக்கு தேர்வானேன்.

இந்தப் போட்டியில் உடல் அழகு மட்டுமல்ல, மன அழகு, அறிவு எல்லாவற்றுக்குமே முக்கியத்துவம் தரப்பட்டது. இந்த மூன்றும் சரிவிகிதத்தில் இருக்கிறதா என்றுதான் பார்த்தார்கள்.

இறுதிச் சுற்றில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்வி: 'உங்களுக்கு ஒரு காதலர் இருப்பதாக வைத்துக் கொள்வோம். இந்தப் பட்டத்தை வென்றால் அதை முதலில் யாரிடம் சொல்வீர்கள்... பெற்றோரிடமா அல்லது காதலரிடமா?' என்று கேட்டார்கள்.

அதற்கு நான், 'நிச்சயம் பெற்றோரிடம்தான் சொல்வேன். அவர்கள் அனுமதியோடு காதலர் அல்லது ஆண் நண்பரிடம் சொல்வேன்' என்றேன்.

இப்போதே நிறைய சினிமா வாய்ப்புகள் வர ஆரம்பித்துவிட்டன. நல்ல படமாக தேர்வு செய்து நடிப்பேன்," என்றார்.

'ஏற்கெனவே நடிக்க ஆரம்பித்துவிட்டேன்'

இரண்டாம் இடத்தைப் பிடித்த அழகியான அஸ்வினி சந்திரசேகர் கூறுகையில், "கர்நாடக மாநிலம் என்றாலும் எனக்கு தமிழ் ரொம்பப் பிடிக்கும். ஏதோ வழக்கமாக சொல்வதாக நினைக்க வேண்டாம். உண்மை அதுதான். ஷிமோகாவில்தான் பிறந்து வளர்ந்தேன். இப்போது பெங்களூரில் இருக்கிறேன்.

ஏற்கெனவே கர்நாடகத்தின் சிறந்த அழகியாக தேர்வாகியுள்ளேன். இது எனக்கு கிடைத்த இரண்டாவது பெரிய டைட்டில். நிறைய விளம்பரப் படங்களில் நடித்துள்ளேன். தமிழ் சினிமாவில் நடிக்க ஆசை. பேசிக் கொண்டிருக்கிறேன். ஏற்கெனவே மலையாளத்தில் மோகன்லாலுடன் ஒரு படத்தில் நடித்துக் கொண்டுள்ளேன். விரைவில் தமிழ் சினிமாவிலும் என்னைப் பார்க்கலாம்," என்றார்.

கருத்துகள் இல்லை: