வெள்ளி, 13 ஜனவரி, 2012

Kollywood வசூல் மழை என்பதெல்லாம் சும்மாதாங்க...!' - பிலிம்சேம்பர்

சென்னை: விளம்பரத்துக்காக படங்கள் வெளியானதும் 'மகத்தான வெற்றி... வசூல் மழை' என்றெல்லாம் நாங்களே விளம்பரம் செய்கிறோம். அதை நம்பி சேவை வரி கேட்கிறது மத்திய அரசு என்று புலம்பினர் திரையுலகின் முக்கிய சங்க நிர்வாகிகள்.
சினிமாவுக்கான சேவை வரியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இது சினிமாக்காரர்களுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
இதுகுறித்து தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (பிலிம்சேம்பர்) நிர்வாகிகள் மற்றும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் கூட்டாக நேற்று அளித்த பேட்டியில், "திரைப்படங்களுக்கு தமிழ்நாட்டில் ஏற்கனவே பொழுதுபோக்கு வரி இருக்கிறது. இந்த நிலையில், இந்தியா முழுவதும் திரைப்படங்களுக்கு மத்திய அரசு சேவை வரி கொண்டு வர இருக்கிறது. சேவை வரியை கொண்டு வந்தால், திரையுலகம் ஒட்டுமொத்தமாக அழிந்துவிடக்கூடிய அபாய நிலை ஏற்படும்.

திரையுலகம் ஏற்கனவே நசிந்த நிலையில் உள்ளது. 8 சதவீத படங்கள்தான் வெற்றி பெறுகின்றன. 92 சதவீத படங்கள் தோல்வி அடைகின்றன. தமிழ்நாட்டில் 2,500 ஆக இருந்த தியேட்டர்களின் எண்ணிக்கை, 1,300 ஆக குறைந்து விட்டது. திரைக்கு கொண்டு வர இயலாத நிலையில், 300 படங்களுக்கு மேல் 'லேப்'பில் உள்ளன. அதன்மூலம் ஆயிரம் கோடி ரூபாய் முடங்கிக் கிடக்கிறது.

எங்கள் தவறு...

படங்களை விளம்பரப்படுத்துவதற்காக, நாங்கள் சில தவறுகளை செய்கிறோம். படம் திரைக்கு வந்த மறுநாளே, 'மகத்தான வெற்றி' என்றும், 'வசூல் மழையில்' என்றும் விளம்பரப்படுத்துகிறோம். அதை உண்மை என்று நம்பி, மத்திய அரசு சேவை வரியை கொண்டு வருகிறது.

இதுபற்றி இந்திய அளவில் திரையுலகின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் சென்னையில் கூடி விவாதித்தோம். அந்த கூட்டத்தில் ஒரு முக்கிய முடிவு எடுத்து இருக்கிறோம்.

அதன்படி, மத்திய அரசு சேவை வரியை நீக்க வேண்டும் என்று மத்திய நிதி மந்திரியை சந்தித்து மனு கொடுக்க இருக்கிறோம். இதுதொடர்பாக, பொங்கலுக்கு முன்பாகவே மத்திய நிதி அமைச்சரை சந்தித்து, திரையுலகின் தற்போதைய நிலையை விளக்குவோம்.

மூடப்படும்

அதையும் மீறி மத்திய அரசு சேவை வரியை கொண்டு வந்தால், ஒட்டுமொத்தமாக திரையுலகை இழுத்து மூட வேண்டியிருக்கும். இந்தியா முழுவதும் புதிய படங்களுக்கு பூஜை போட மாட்டோம். படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படும். தியேட்டர்கள் மூடப்படும்.

ஏற்கனவே தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் அதிகமாக உள்ளது என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதற்கு மேல் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது என்பதற்காகவே இந்த முடிவை எடுத்து இருக்கிறோம்,'' என்றனர்.

இந்த கூட்டத்தில் பிலிம்சேம்பர் தலைவர் கல்யாண், செயலாளர்கள் ரவி கொட்டாரக்கரா, கே.எஸ்.சீனிவாசன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், துணைத்தலைவர் டி.சிவா, செயலாளர் பி.எல்.தேனப்பன், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் அண்ணாமலை, இணைச்செயலாளர் ஸ்ரீதர், பட அதிபரும் இயக்குநருமான ஏ.எஸ்.பிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை: