சோனா பாப்பா.. மாமா வந்திருக்கேன் பாரு.. எந்திரிம்மா’’
இன்டர்நெட்டில் வந்த என்னுடைய ஆபாசப் படங்களை எடுப்பதற்குள் நான் அடைந்த மன உளைச்சலை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. ஒரே வாரத்தில் லட்சக்கணக்கானவர்கள் என் படங்களை நெட்டில் பார்த்திருந்தார்கள். ஹோட்டலில் டிரெஸ்ஸிங் டேபிளுக்குக் கீழே சிறிய கேமராவை மறைத்து வைத்து, அந்தப் படங்களை எடுத்திருந்தது தெரிய வந்தது. எனக்குத் தெரிந்த ஒரு இயக்குநரிடம் சொல்லி, அவர் உதவியுடன் பெரும்பாடுபட்டு அந்த போட்டோக்களை நெட்டில் இருந்து நீக்கினேன்.எனக்கு மட்டுமல்ல, பல நடிகைகளுக்கும் இதுபோல் நடந்திருக்கிறது. அதற்குப் பிறகு எந்த ஹோட்டலில் தங்கினாலும் அந்த அறையை ஒருமணி நேரம் சோதித்த பிறகுதான் எனக்கு நிம்மதி வரும்.
அடுத்து சில மாதங்களில் பிரபல இயக்குநர் ஒருவரின் அலுவலகத்தில் இருந்து போன் வந்தது. ‘சூப்பர் ஸ்டார் நடிக்கும் படத்தில் காமெடி நடிகரின் ஜோடியாக நடிக்க முடியுமா?’ சூப்பர் ஸ்டார் படம் என்றவுடன் சந்தோஷம் வந்துவிட்டது.
‘‘ஆனா எனக்கு காமெடி வராதே.. வசனம் பேசியெல்லாம் பழக்கம் இல்லையே’’ என்று பதற்றத்தோடு பதில் சொன்னேன். உடனே சமாளித்துக்கொண்டு, ‘‘எப்படியாவது நடித்து விடுவேன்’’ என்று சம்மதித்து விட்டேன்.
புராண கதாபாத்திரத்தின் பெயர் கொண்ட அந்தப் படத்தில் Kuselan நடித்த பிறகுதான் நான் பரவலாக நிறையப் பேருக்குத் தெரிய ஆரம்பித்தேன். ஷூட்டிங்கில் என்னை ஒரு நடிகையாக மதித்து நடத்தியதும் அந்தப் படத்தில்தான்.
அந்தப் படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத் ஃபிலிம் சிட்டியில் நடந்து கொண்டிருந்தது. முதல் இரண்டு நாட்கள் எந்தப் பிரச்னையும் இல்லை. மூன்றாம் நாளில் என் அறையின் கதவை யாரோ தட்டினார்கள். அன்று ஷூட்டிங்கின் போதே, அந்த காமெடி நடிகர் என்னிடம் ஏதோ தவறாகப் பேசுகிறார் என்பது புரிந்ததால், அவராக இருக்குமோ என்று நினைத்தேன். என் மொபைல் ஒலிக்கவும், எடுத்துப் பார்த்தால், அந்த காமெடி நடிகரின் நம்பர்தான்.
என் அறையில் இருந்த ‘டச்-அப்’ பையனிடம் போனை எடுக்கச் சொன்னேன். ‘‘மேடம் குளிக்கிறாங்க’’ என அவன் பதில் சொல்லவும், அவர் போய்விட்டார். அந்த காமெடி நடிகரைப் பற்றி அதற்கு முன்பே கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த ஷூட்டிங்கிலும் என்னிடம் எச்சரித்திருந்தார்கள்.
‘‘பார்க்கத்தான் கிராமத்து ஆளு மாதிரி இருப்பாரு. ஆனால் ரொம்ப வில்லங்கமானவர். சிக்கிடாதே’’ என்று சொல்லியிருந்தார்கள்.
அவர் போனதும் டி.வி. சத்தத்தைக் குறைத்து விட்டு, மொபைல் போனை ஆஃப் செய்து விட்டேன். லேண்ட் லைன் ரிசீவரையும் கீழே வைத்துவிட்டேன். இனி அவர் தொந்தரவு செய்ய மாட்டார் என நினைத்து ஏதோ புத்தகத்தைப் புரட்ட ஆரம்பித்தேன்.
அந்த அறையில் குமிழ் வடிவ லாக் இருந்தது. உள்ளே பட்டனை அழுத்தி கதவை மூடினாலும், வெளியில் இருந்தும் சாவி வைத்து திறந்து விடலாம். பெரும்பாலான ஹோட்டல்களில் இப்படித்தான் இருக்கும்.
நாங்கள் கதவைத் திறக்கவில்லை என்றதும், கோபமான அந்த காமெடி நடிகர் ரிசப்ஷனுக்குப் போய் வேறு சாவி வாங்கி வந்துவிட்டார். என்ன சொல்லி கேட்டாரோ தெரியாது. திடீரென கதவு திறக்கும் சத்தமும், தொடர்ந்து அவர் உள்ளே வருவதையும் பார்த்து அதிர்ந்து போனேன். இப்படியெல்லாம் கூட ஒருவர் அத்துமீற முடியுமா? என ஆச்சரியமாகவும், கோபமாகவும் இருந்தது.
கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டதுமே, வெளிச்சத்தைக் குறைத்து விட்டு தூங்குவதுபோல் படுத்துக் கொண்டேன். உள்ளுணர்வு ஏதோ எச்சரிக்க, இதையெல்லாம் அனிச்சையாக செய்தேன் என்றுதான் சொல்ல வேண்டும்.
‘‘பாப்பா நல்லா தூங்குது போல...’’ டச் -அப் பையனிடம் கேட்டார். அந்தக் குரலும், கேட்ட விதமும் எரிச்சலூட்டியது.
‘‘ஆமா சார்.. ரொம்ப டயர்டா இருக்குதுன்னு சொன்னாங்க. அதான் குளிச்சவுடனே தூங்கிட்டாங்க!’’ டச்-அப் பையன்தான் பதில் சொன்னான்.
‘‘சரி மாமா வந்திருக்கேன்னு சொல்லி பாப்பாவை எழுப்பு’’ என்று சொல்லிவிட்டு, அங்கிருந்த சோபாவில் போய் உட்கார்ந்தார். நைட் லேம்பின் அரைகுறை வெளிச்சத்தில் நான் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தேன். கோபத்தில் திகுதிகுவென உடல் எரிந்தது. எவ்வளவு திமிர் இருந்தால் தூங்குகிறாள் என்று சொல்லியும் எழுப்பச் சொல்கிறார்.
டச்-அப் பையன் என்னை எழுப்பாமல் பேசாமல் நின்று கொண்டிருந்தான். கோபத்தில் அவனைத் திட்டிய அந்த காமெடி நடிகர், அவரே எழுந்து என் அருகில் வந்தார்.
‘‘சோனா பாப்பா.. சோனா பாப்பா.. மாமா வந்திருக்கேன் பாரு.. எந்திரிம்மா’’ என கால்களைத் தட்டினார்.
இது அவர் சினிமா டயலாக் இல்லை.. நிஜத்திலும் அவரது டயலாக் இதுதான் என்பதை அன்றுதான் தெரிந்து கொண்டேன். நான் தூங்குவதுபோலவே புரண்டு படுத்தேன். என் அருகில் உட்கார்ந்து என் முதுகில் தட்டி எழுப்பத் தொடங்கினார்.
தூக்கக் கலக்கத்தில் உதைப்பது போல் ஒரு உதை கொடுத்தேன். தொடர்ந்து, ‘‘எவன்டா அவன், தூக்கத்தில் எழுப்புறது’’ என்று சில வார்த்தைகளால் திட்டிவிட்டு மறுபடியும் தூங்குவதுபோல் நடித்தேன். என்ன நினைத்தாரோ கதவைத் திறந்து கொண்டு வெளியே போய்விட்டார். வெறுப்பாகவும், எரிச்சலாகவும் இருந்தது. அன்றிரவு முழுவதும் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தேன். இனி இவரைப் போல் எத்தனை பேரை சந்திக்க வேண்டுமோ?
மறுநாள் ஷூட்டிங் நேரத்தில் அவர் முகம் கடுப்புடன் இருந்ததைப் பார்த்தேன். முன்னணி காமெடி நடிகர் என்பதால் அவர் நினைத்தால் என் ரோலையே காலி செய்து விட முடியும். அதனால் முடிந்தவரை அதைத் தவிர்க்க நினைத்தேன்.
‘‘ஸாரி சார். ராத்திரி வந்தீங்களா? உடம்பு அசதியில் நான் கவனிக்கவேயில்லை. ரொம்ப நேரம் தூங்கிட்டேன். டச்-அப் பையன் சொல்லி காலையில் தான் தெரியும்’’ என்று நிலைமையை சமாளிக்க முயன்றேன். அதைக் கண்டுகொள்ளாதது போல் அவர் போய்விட்டார்.
முந்தைய இரவு நடந்ததை டைரக்டரிடம் கொஞ்சம் சொல்லியிருந்தேன் என்பதால், அந்த காமெடி நடிகரின் தொந்தரவு அன்றிரவு இருக்காது என நினைத்தேன். ரிலாக்ஸாக உட்கார்ந்து செல்போனில் அரட்டை அடித்துக் கொண்டிருந்தேன். டச்-அப் பையனும் அவன் இடத்துக்கு தூங்கப் போய்விட்டான். இரவு பத்துமணி இருக்கும். கதவு திறக்கும் சத்தம்.. திரும்பிப் பார்த்தால் அதே காமெடி நடிகர். உடன் இன்னொருவரும்...
‘‘என்ன சார்.. இவ்வளவு தூரம்?’’ பதற்றத்தை மறைத்து விட்டு கேஷுவலாக கேட்டேன்.
‘‘சும்மா பார்த்துட்டு போலாம்னு வந்தேன். கொஞ்சம் டிரிங்க் சாப்பிடலாமா?’’ என்று கேட்டபடி கட்டிலில் உட்கார்ந்தார்.
‘‘இல்லை வேணாம் சார்.’’
‘‘ஏன் குடிக்கிறதில்லையா? பார்த்தா அப்படித் தெரியலையே?’’
‘‘இல்லை, எப்பவாது குடிப்பேன் தான். ஆனா காலையில் ஷூட்டிங் இருக்கு. இப்ப குடிச்சா முகம் காலையில உப்பித் தெரியும்.. அதான் வேணாம்னு சொல்றேன்!’’ சமாளித்தேன்.
‘‘சரி, பாப்பா வேணாம்னு சொல்லுது. அதுக்காக நாம குடிக்காம இருக்க முடியுமா? எடுத்து வைடா.. நாம ஆரம்பிக்கலாம்!’’ உடன் வந்தவரிடம் அவர் சொன்னார். இருவரும் பாட்டில்களை எடுத்து வைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தார்கள். குடிக்கிற மாதிரியும் காணோம்.. கிளம்புவார்கள் என்றும் தோன்றவில்லை...
ஆஹா... மாட்டிக்கிட்டேன் என யோசிக்கும்போதே, மறுபடியும் கதவு தட்டும் சத்தம் கேட்டது. தாழிடப்படாத கதவைத் திறந்து கொண்டு அந்தப் படத்தில் நடிக்கும் நடிகர் ஒருவர் உள்ளே வந்தார். அந்த காமெடி நடிகரைப் பார்த்து, ‘‘உங்களை எங்கெல்லாம் தேடறது. இங்கேயா இருக்கீங்க’’ என்று அவரும் உட்கார்ந்து கொண்டார்.
அவர்கள் நான் அங்கிருப்பதையோ, அது எனக்கு ஒதுக்கப்பட்ட அறை என்பதையோ, சம்பந்தமில்லாத மூன்று ஆண்கள் அங்கிருப்பது எனக்கு எவ்வளவு சங்கடமாக இருக்கும் என்பதையோ கொஞ்சமும் யோசித்ததாகவே தெரியவில்லை. கதவு திறந்தே இருக்க, அந்த வழியாக கடந்து போன படத்தின் இயக்குநர் திரும்பி வந்து என் அறைக்குள் பார்த்தார். அவருக்கு நிலைமை கொஞ்சம் புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.
‘‘அந்தப் பொண்ணோட ரூமில், இந்த நேரத்துக்கு எல்லோரும் என்ன பண்றீங்க?’’ என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தார். நாகரிகத்துக்கு கொஞ்சம் பேசியவர், ‘‘அடுத்தவங்க தூக்கத்தை ஏன் கெடுக்கறீங்க..? நாளைக்கு காலையில் ஷூட்டிங் இருக்கு. சீக்கிரம் அவங்கவங்க ரூமுக்கு கிளம்புங்க’’ என்று அதட்டினார்.
அவர் பெரிய டைரக்டர் என்பதாலும், அந்தப் படத்தில் நடிக்கும் நடிகர் அவருடைய நண்பர் என்பதாலும், மூவரும் உடனே கிளம்பினார்கள். நான் அந்த இயக்குநருக்கு என் கண்களாலே நன்றி சொன்னேன். ஆனால் வெளியேறிய மூவரில் அந்த காமெடி நடிகர் மட்டும் என்னை வன்மத்தோடு முறைத்துக் கொண்டே வெளியேறி னார்..(mathuraikara comedian!!)
thanks kumudam + angayatkanni madurai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக