வியாழன், 15 டிசம்பர், 2011

அணையில் உண்ணாவிரதம்... டேம் 999 இயக்குநரின் அடுத்த ட்ராமா!


Sohan Roy
முல்லைப் பெரியாறு அணையை உடைத்தால்தான் ஆச்சு என்று முரட்டுப் பிடிவாதம் காட்டும் மலையாளிகளை இன்னும் உசுப்பேற்றும் விதமாக டேம் 999 என்ற படத்தை எடுத்த சோஹன் ராய், தன் படத்துக்கு தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக மிரட்டியுள்ளார்.
இந்த உண்ணாவிரதத்தை சர்ச்சைக்குரிய முல்லைப்பெரியாறு அணையில் வரும் டிசம்பர் 18-ம் தேதி இருக்கப் போவதாகக் கூறி அரசியல் விளையாட்டில் குதித்துள்ளார் சோஹன் ராய். தமிழகம் - கேரளா இடையே முல்லைப் பெரியாறு அணை விவகாரம் பல ஆண்டுகளாக நீருபூத்த நெருப்பாக இருந்து வந்தாலும், அதை ஊதிப் பற்ற வைத்தது டேம் 999 என்ற படம்தான்.
இந்தப் படத்தில் முல்லைப் பெரியாறு அணை உடைந்து லட்சக்கணக்கான மக்கள் இறப்பதைப் போல பொய்களைச் சித்தரிந்திருந்தார்கள்.
தமிழக, கேரள மக்களை பீதிக்குள்ளாக்குவது, அணை இருக்கும் பகுதியில் பதட்டைத்தை ஏற்படுத்துவது போன்றவைதான் இந்தப் படத்தின் பிரதான நோக்கம். இதற்கு கேரள மாநில அரசே நிதி உதவியும் செய்திருந்தது.
படத்தை தமிழில் மொழி பெயர்த்து தமிழகத்தில் வெளியிட சேஹன் ராய் திட்டமிட்டிருந்தார். இந்த உண்மை தெரிந்ததும் வைகோ உள்ளிட்ட தமிழ் தலைவர்கள் பொங்கி எழுந்து படத்துக்கு எதிராகப் போராடி, ஒரே நாளில் தமிழகத்தில் வெளியாகாமல் செய்து விட்டனர்.
திரையரங்குகளைத் தர உரிமையாளர்கள் மறுத்துவிட, விநியோகஸ்தர்களும் வாங்க மாட்டோம் என்றனர். மீறித் திரையிட்டால் தியேட்டர்களுக்குப் பாதுகாப்பு தர முடியாது என அறிவிக்கப்பட்டது.
இறுதியில் படத்தை தமிழகத்தில் வெளியிடக்கூடாது என தமிழக அரசு அறிவித்தது.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்துக்குப் போனார் சோஹன் ராய். விசாரணையின்போது, தமிழக அரசிடம் உரிய விளக்கம் அளிக்குமாறு சோஹன் ராய்க்கு உத்தரவிட்டனர் நீதிபதிகள்.
உடனே ஏக போலீஸ் பாதுகாப்புடன் சென்னைக்கு வந்து விளக்கமெல்லாம் சொல்லிவிட்டுப் போனார் இந்த சோஹன் ராய். அதில், முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக நான் எதையுமே சொல்லவில்லை என்று பச்சையாகப் புளுகினார்.
ஆனால் வாக்குமூலம் அளித்த 24 மணி நேரத்துக்குள், கேரளாக்கு ஓடிய சோஹன் ராய், அங்கே போய் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்துள்ளார். அதுவும் எங்கே தெரியுமா... பிரச்சினையின் மையப் புள்ளியான முல்லைப் பெரியாறு அணை முன்பாக.
இதுகுறித்து தமிழுணர்வாளர்களிடம் பேசியபோது, "படத்தில் முல்லைப் பெரியாறு குறித்து நான் எதுவுமே சொல்லவில்லை என்று கூறிய இந்த ஆசாமி, அடுத்த நாளே முல்லைப் பெரியாறில் உண்ணாவிரதம் இருந்தது எதற்காக? இது கேரளாவின் இன்னொரு திட்டமிட்ட அரசியல் நாடகம், சூது. இந்த சேஹன் ராய் உண்ணாவிரதமிருந்தால் படம் வெளியாகிவிடுமா... அதையும் பார்த்துவிடுவோம்," என்று ஆவேசப்பட்டனர்.
இந்த டேம் 999 படம் திரையிடப்பட்ட அனைத்து இடங்களிலும் படுதோல்வியைத் தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: