புதன், 14 டிசம்பர், 2011

பெரியார் இஸ்லாமிய மதமாற்றத்தை முன்வைத்தார் என்பதைவிட தீண்டப்படாதவர்களின் ‘சுபாவ மனமாற்றத்தை


www.tamilpaper.net
இந்து மதத்தையும் பார்ப்பனீயத்தையும் கடுமையாக விமரிசனம் செய்த இரு பெரும் தலைவர்களான அம்பேத்கரும் பெரியாரும் மத மாற்றம் குறித்து உரையாடியிருக்கிறார்கள். இந்துக்கள் என்று சொல்லப்படுபவர்கள் தங்கள் மதத்தில் இருந்த வெளியேறி பௌத்தத்தைத் தழுவவேண்டும் என்றார் அம்பேத்கர். ஏன் பௌத்தம் என்பதற்கான காரணங்களை விரிவாகவும் ஆழமாகவும் அம்பேத்கர் பதிவு செய்திருக்கிறார். மத மாற்றத்துக்கு அம்பேத்கர் முன்வைத்த காரணங்களை பெரியார் ஏற்றுக்கொண்டார் என்றாலும், அம்பேத்கரைப் போல் அவர் பௌத்தத்தை ஒரு தீர்வாக முன்வைக்கவில்லை. மாறாக, அவரது தேர்வு இஸ்லாமாக இருந்தது என்று படித்திருக்கிறோம். இந்த இடத்தில் ஒரு கேள்வி எழுகிறது. மதங்களை நிராகரித்து பகுத்தறிவை முன்வைத்த பெரியார், இஸ்லாத்தை ஏன் தேர்வு செய்யவேண்டும்? இஸ்லாத்தில் மூடநம்பிக்கைகளே கிடையாதா? இஸ்லாத்தை பகுத்தறிவு ஏற்றுக்கொள்கிறதா?
இந்தக் கேள்விக்கு விடை தேடுவதற்கு முன்னால், மதம் குறித்த பெரியாரின் சிந்தனைகளும் செயல்பாடுகளும் எப்படி இருந்தன என்று பார்ப்போம்.
மதம் பற்றிய பெரியாரின் பார்வை ஐந்து அம்சங்களை உள்ளடக்கியதாக இருந்தது. முதலாவதாக, அவர் பார்ப்பனர்களையும் பார்ப்பனீயத்தையும் கடுமையான விமரிசனத்துக்கு உள்ளாக்கினார். இரண்டாவதாக, புனித நூல்களை ஊடுருவிச் சென்று உண்மை கண்டறிந்து, தோலுரித்தார். மூன்றாவதாக, மதம் முன்வைக்கும் உலகப் பார்வையை விமரிசித்தார். மதத்தின் புனிதத்தன்மை பற்றியும், மதச் சார்பின்மை பற்றியும் கேள்விகள் எழுப்பினார். நான்காவதாக, மத நம்பிக்கைகளை கேள்விக்கு உட்படுத்துவதன் மூலம், கடவுள் நம்பிக்கை உருவான பின்புலத்தையும் சித்தாந்தத்தையும் விமரிசித்தார். ஐந்தாவதாக, சடங்குகளையும் விழாக்களையும் சம்பிரதாயங்களையும் சாடினார்.
அம்பேத்கரைப் போலவே பெரியாரும் இந்து மதக் கட்டுமானத்தையும் சாதியப் படிநிலை அமைப்பையும் நிராகரித்தார். பார்ப்பனீயம் எப்படி அதிகாரத்தைக் குவித்துக்கொண்டது என்பதையும் எப்படிப் பிற பிரிவினரை ஆதிக்கம் செய்கிறது என்பதையும் குறித்து அவர் விரிவாக உரையாடினார். இந்து மதம் வலுக்கட்டாயமாக தமிழர்கள்மீது திணிக்கப்பட்டது என்னும் முடிவுக்கு பெரியார் வந்து சேர்ந்தார்.
ஆனால், இதற்கு தீர்வாக இந்து மதத்துக்கு மாற்றாக இன்னொரு மதத்தை நிறுவவேண்டிய அவசியத்தை பெரியார் ஏற்கவில்லை. அம்பேத்கர் பௌத்தத்தை ஏற்றது போல், வேறொரு மதத்தை ஏற்கவோ சிபாரிசு செய்யவோ பெரியார் துணியவில்லை. ஒரு கடவுளுக்கு மாற்றாக இன்னொரு கடவுள் முன்னிறுத்தப்படுவதை அவர் பகுத்தறிவு கொள்கை ஏற்கவில்லை. பெரியாரைப் பொருத்தவரை, மத நம்பிக்கையாளர்கள் அனைவரும் ஒரே ஓட்டை படகில்தான் பயணம் செய்கிறார்கள். ஒரு மனிதனுக்கு நிச்சயம் மதம் தேவைதானா? மதத்தை மனிதனிடம் இருந்து பிரித்து எடுத்துவிட்டால் அங்கே ஓர் வெற்றிடம் உருவாகிவிடுமா? அதை எதைக் கொண்டாவது நிரப்பியாகவேண்டுமா? இந்தக் கேள்விகளுக்கு பெரியாரின் பதில்:‘மதம் மனிதனுக்குத் தேவையற்றது!’ இது பெரியாரின் இறுதியும் உறுதியுமான முடிவு என்று கொள்ளலாம்.
சுயமரியாதை இயக்கம் ஆரம்பமான புதிதில் பெரியார் இஸ்லாத்தின் மீது நாட்டம் கொண்டிருந்தது உண்மை. செப்டெம்பர் 1929ல், கோயம்புத்தூர், சத்தியமங்கலத்தில் நடைபெற்ற நபிகள் நாயகம் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோது, இஸ்லாத்துக்குச் சாதகமான கருத்துகளை வெளிப்படுத்தினார். ‘நான் ஒரு முஸ்லிமாக இறக்கவே விரும்புகிறேன்!’ என்று அவர் பேசியதாகவும் ஒரு குறிப்பு இருக்கிறது.
அக்டோபர் 6, 1929 அன்று 69 ஆதி திராவிடர்கள் முகமதியர்களாக மதம் மாறினார்கள். இது நடந்த சில தினங்களில், பெரியார் ஈரோட்டில் ஓர் உரை நிகழ்த்தினார். அக்டோபர் 10 குடி அரசு இதழில் இந்த உரை முழுமையாக இடம்பெற்றிருந்தது. இஸ்லாத்துக்கு மதம் மாறியவர்களுக்குச் சார்பாகவும் இஸ்லாத்துக்குச் சார்பாகவும் பெரியார் தன் கருத்துகளை இதில் முன்வைத்தார். நாம் பஞ்சமர்களாகவோ முஸ்லிம்களாகவோ மாறினாலொழிய நமக்கு நீதியும் மரியாதையும் முன்னேற்றமும் கிடைக்காது என்று பிறிதோரிடத்தில் பெரியார் பேசியிருக்கிறார். அவர் குறைந்த அளவு விமரிசனம் செய்த மதம் இஸ்லாம் என்பதையும் நாம் கவனிக்கவேண்டும்.
ஆனால், இஸ்லாமிய மதமாற்றத்தை அவர் தொடர்ந்து முன்வைக்கவில்லை என்பதையும் நாம் கணக்கில் கொள்ளவேண்டும். அதை ஓர் இயக்கமாகவும் போராட்டமாகவும் பிரசாரமாகவும் அவர் உருமாற்றவில்லை. ஆதி திராவிடர்கள் மதம் மாறவேண்டும் என்று 1935ல் அம்பேத்கர் அழைப்பு விடுத்தபோது, பெரியார் அவருக்குத் தன் ஆதரவை வெளிப்படுத்தினார். ஆனால், அம்பேத்கரைப் போல் மதமாற்றத்தை முனைப்புடன் ஒருபோதும் அவர் மேற்கொண்டதில்லை.
1929ல் பெரியார் இஸ்லாத்துக்குச் சாதகமாக பேசியதற்கு வேறு வலுவான காரணங்கள் இருக்கின்றன. அவருடைய உரையிலேயே அதற்கான விடையைத் தேடுவோம். ‘சகோதரர்களே, 69 ஆதிதிராவிடர்கள் முகமதியர்களாகி விட்டதால், அவர்களுடைய பாவங்களெல்லாம் மன்னிக்கப்பட்டு விட்டதென்றோ, அவர்களுக்கு ‘மோட்ச லோகம்’ கூப்பிடும் தூரத்திற்கு வந்துவிட்டதென்றோ, ‘கடவுளோடு கலந்து விட்டார்கள்’ என்றோ கருதி நான் மகிழ்ச்சி அடையவில்லை. இவைகளை நான் ஏற்றுக்கொள்ளுவதும் இல்லை. மற்றவர்களை நம்பும்படிச் சொல்வதும் இல்லை. அன்றியும், ஒரு மனிதன் மதம் மாறுவதால் அவனுடைய செய்கைக்கும், எண்ணத்திற்கும் தகுந்த பலன் அடைவதில் வித்தியாசமுண்டு என்பதை நான் ஒப்புக்கொள்வதில்லை… உலகத்தில் உள்ள சகல மதங்களும் மூட நம்பிக்கையின் மீதே கட்டப்பட்டிருக்கின்றன.’
எனில் ஏன் அவர்களுடைய மதமாற்றம் பெரியாரை மகிழ்ச்சியடைய வைத்தது? ‘இந்து மதம் என்பதிலிருந்து மதம் மாறினதாகச் சொல்லப்படும் 69 ஆதிதிராவிடர்களும், பிறவியின் காரணமாக அவர்களுக்குள்ள இழிவிலிருந்து விடுதலை அடைந்ததோடு, பாமரத் தன்மையும் காட்டுமிராண்டித் தனமுமான மிருகப் பிராயத்திலிருந்தும், அறியாமையிலிருந்தும் சிறிது விடுதலை அடைந்தவர்களானார்கள் என்பதற்காகவே மகிழ்ச்சியடைகிறேன்.
அவர் தொடர்கிறார். ‘69 பேர்களுக்கும் தீண்டாமை என்பது போய்விட்டது. இனி ஒருவன் அவர்களைப் பறையன், சக்கிலி, சண்டாளன் என்று இழிவாய்க் கூற முடியாது. அவர்களும் மற்றவர்களை ‘சாமி, சாமி, புத்தி’ என்று கூப்பிட்டுக் கொண்டு தூர எட்டி நிற்க வேண்டியதில்லை. மற்ற மனிதர்களின் காலில் விழுந்து கும்பிட வேண்டியதில்லை. ஊரை விட்டு வெளியில் குடி இருக்க வேண்டியதில்லை. குளிக்கத் தண்ணீரில்லாமல், குடிக்கத் தண்ணீரில்லாமல் திண்டாட வேண்டியதில்லை.’
பெரியார் இந்து மதத்தை மட்டுமல்லாமல், கிறிஸ்தவத்தையும் இஸ்லாத்தையும் சேர்த்தே விமரிசித்து வந்தார். இருந்தும் இந்து மதத்துக்கு நிகராகப் பிற மதங்களை அவர் சாடாமல் இருந்ததற்குக் காரணம், வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர் இந்து மதத்தின் தீமைகளை அதிகம் சந்திக்க நேர்ந்ததுதான். உயர்வு, தாழ்வு பிரிவினைகள் அனைத்து மதங்களிலும் வெவ்வேறு வடிவங்களில் இயங்கிவந்தாலும், அப்பட்டமான, மிருகத்தனமான தீண்டாமையை அதன் முழுவடிவில் இந்து மதத்தில் மட்டுமே அவர் கண்டார்.
இந்தக் காரணத்தால் இந்து மதத்தில் இருந்து ஒருவர் வெளியேறினால் அவர் விடுதலையடைந்துவிட்டார் என்றே பெரியார் பொருள் கொண்õர். ‘இவர்கள் பொருதாரக் கஷ்டத்திலும், அறிவு வளர்ச்சித் தடையிலும், சமூக இழிவிலும், சுயமரியாதைக் குறைவிலும், அரசியல் பங்குக் குறைவிலுமிருந்து ஒருவாறு விடுதலை அடைந்துவிட்டார்கள் என்பது போன்றவற்றை நினைக்கும்போது மகிழ்ச்சியடையாமலிருக்க முடியவில்லை. ஏனென்றால், தீண்டாமை, நெருங்காமை, பார்க்காமை, பேசாமை முதலாகிய சகிக்க முடியாத கொடுமைகள் முதலாவதாக மதத்தின் பேரால், வேத சாஸ்திரங்களின் பேரால், கடவுள்களின் பேரால் உள்ளவைகள் எல்லாம் அடியோடு நீங்க வேண்டும் என்கின்ற தீவிர ஆசையே இம்மாதிரி நினைக்கச் செய்கின்றது.’
பெரியார் தொடர்கிறார். ‘தீண்டாமை முதலிய கொடுமை ஒழிய வேண்டும் என்கின்ற கருத்துள்ளவர்களுக்கும், ஒற்றுமையை எதிர்பார்க்கும் கருத்துள்ளவர்களுக்கும், மக்களுக்கு சுயமரியாதை உணர்ச்சியை ஊட்ட வேண்டும் என்னும் கருத்துள்ளவர்களுக்கும் நமது நாட்டில் இப்போது உள்ள முக்கிய வேலை, முதலில் தீண்டப்படாதவர்கள் முகமதியராவதை ஆட்சேபியாதருப்பதேயாகும் என்பது, எனது தாழ்மையானதும், கண்ணிமானதுமான அபிப்பிராயம்.’
மதம் மாறுவதற்கு இந்து மதத்தின் தீண்டாமை ஒரு வலுவான காரணம் என்பதை ஏற்க முடிகிறது. ஆனால் எதற்காக இஸ்லாம்? கிறிஸ்தவத்துக்கோ பௌத்தத்துக்கோ சமணத்துக்கோ மாறலாமே? ‘சிலர் முகமதிய மதம் முரட்டு சுபாவத்தை உண்டாக்குகின்றது என்று எனக்கு எழுதி இருக்கிறார்கள். அது வாஸ்தவமானால், தீண்டப்படாதவர்களுக்கு அவர்களது தீண்டாமை ஒழிய முகமதிய மதத்தைச் சிபாரிசு செய்வதற்கு அதுவே ஒரு நல்ல காரணம் என்றே கருதுகிறேன். முகமதிய மதம் முரட்டு சுபாவத்தை உண்டாக்குவது உண்மையானால், அதில் சேர்ந்த இவர்கள் இனிமேலாவது இவ்வளவு தாழ்மையான நடந்து கொள்ள மாட்டார்கள் அல்லவா? மற்றவர்களும் அவர்களது முரட்டு சுபாவத்தைக் கண்டு பயந்து மரியாதையாய் நடந்து கொள்ள இடமேற்படும் அல்லவா?’
மிக மிக நேரடியான ஒரு விளக்கம் இது. தீண்டப்படாதவர்கள் அவ்வாறு நீடித்திருப்பதற்குக் காரணம் அவர்களுடைய பலவீனம். இந்த சுபாவத்தை மாற்றவேண்டுமானால் போராட்ட குணம் தேவை. பௌத்தமும் சமணமும் கிறிஸ்தவமும் அன்பையும் சகோதரத்துவத்தையும் போதிப்பவை. எனவே, பெரியார் இஸ்லாத்தைத் தேர்ந்தெடுத்திருக்கவேண்டும். அப்படியென்றால் பெரியார் இஸ்லாத்தை முரட்டுத்தனமான மதம் என்று சொல்கிறாரா? இல்லை.‘ஒடுக்க முடியாத, தாழ்மையும் இழிவையும் ஒப்புக் கொள்ள இஷ்டமில்லாத தைரிய சுபாவம்’ இஸ்லாத்தில் இருக்கிறது என்று திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டுகிறார் பெரியார்.
அந்த வகையில், பெரியார் இஸ்லாமிய மதமாற்றத்தை முன்வைத்தார் என்பதைவிட தீண்டப்படாதவர்களின் ‘சுபாவ மனமாற்றத்தை’ முன்வைத்தார் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். அந்த 69 ஆதிதிராவிடர்களும் இந்து மதத்தை விட்டு வெளியேறினார்கள் என்பது பெரியாரின் முதல் மகிழ்ச்சி. இரண்டாவது மகிழ்ச்சி, ‘துணிச்சல் சுபாவத்தோடு’ அடையாளப்படுத்தப்படும் இஸ்லாத்தை அவர்கள் தழுவிக்கொண்டார்கள் என்பது. கட்டுரையின் தொடக்கத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கான விடை இதுவே.
தன் உரையை நிறைவுசெய்யும்போது பெரியார் தன் கருத்தை கூர்மையாகவும் தெளிவாகவும் முன்வைக்கிறார். ‘அந்த சுபாவம் (தைரியம்) இப்போதுள்ள தீண்டப்படாதவர்கள் என்பவர்களுக்கு வந்து விட்டால் கூடப் போதுமானது என்றும் மதம் மாற வேண்டிய அவசியமில்லை என்றும் சொல்லலாம். ஆனால், அவர்கள் இந்துக்களாக இருக்கும் வரை சுலபத்தில் அவர்களுக்கு அந்தச் சுபாவம் வராது என்பதோடு, மேல் வகுப்புக்காரர்கள் என்பவர்கள் சுலபத்தில் வரவிட மாட்டார்கள் என்றே சொல்லுவேன்.’
0
நந்தன்

கருத்துகள் இல்லை: