முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழகத்தில் தற்போதுள்ள கொந்தளிப்பான நிலையை நான் நன்றாக அறிந்துள்ளேன். உங்கள் உணர்வுகளைப் புரிந்துள்ள நான், என்றும் உங்கள் பக்கமே இருப்பேன்” என்று கூறியுள்ள முதல்வர் ஜெயலலிதா, விடுத்த அறிவிப்பு ஒன்று, இதே பிரச்சினைக்காக கலைஞர் குறித்து வைத்திருந்த தேதி ஒன்றில் மோத, கலைஞரோ, விஜயகாந்த் வைத்திருந்த தேதியில் போய் மோதியுள்ளார்!
இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுத்துள்ள அறிககையில் முதல்வர், “தமிழக மக்கள் இந்த விஷயத்தில் அதிகம் உணர்ச்சி வசப்பட்டு வன்முறைக்கு இடம் கொடுக்கக் கூடாது. உங்கள் உணர்வுகள் எனக்குப் புரிகின்றது. அதே உணர்வுடன்தான் நானும் உள்ளேன். ஆனால், இதற்கான தீர்வுக்கு பதில் வன்முறை அல்ல.
குறிப்பிட்ட ஒரு பகுதியினரே வன்முறையில் இறங்கியுள்ளனர். அவர்கள் வன்முறையைக் கைவிடவேண்டும். உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, நாம் வன்முறைக்கு எதிரானவர்கள் என்பதை உலகுக்கு காட்ட வேண்டும்” என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக வரும் 15-ம் தேதி தமிழக சட்டசபையில் சிறப்பு அமர்வு ஒன்று நடைபெறும் எனவும், முல்லைப் பெரியாறு விஷயத்தில் நாம் எந்த உரிமையையும் விட்டுக் கொடுக்க மாட்டோம் எனறு வலியுறுத்தும் சிறப்பு தீர்மானம் ஒன்று கொண்டுவரப்படும் எனவும் அவர் இன்றைய அறிக்கையில் அறிவித்துள்ளார்.
முதல்வரின் இந்த அறிவிப்பு, தி.மு.க.-வுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம், இதே பிரச்சினைக்காக மாநிலம் தழுவிய அளவில் மனிதச் சங்கிலிப் போராட்டம் ஒன்றை தி.மு.க. நடத்த திட்டமிட்டிருந்த தினமும், இதே 15-ம் தேதிதான். அதே தேதியில் தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் நடக்கவுள்ளதால், போராட்டம் 14-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தி.மு.க., தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.
இவர்கள் தமது மனிதச் சங்கிலிப் போராட்டத்தை 14-ம் தேதிக்கு மாற்றியிருப்பது, விஜயகாந்துக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம் அவரது கட்சியான தே.மு.தி.க. இதே பிரச்சினைக்காக, விஜயகாந்த் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்த தினம், 14-ம் தேதி! அதே தினத்தை பங்குபோட இப்போது தி.மு.க.-வும் வரப்போகின்றது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக