வியாழன், 15 டிசம்பர், 2011

கூடங்குளம் அணு மின் திட்டத்திற்கு அமோக ஆதரவு

கோவை: ""கூடங்குளம் மின் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, கோவை மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் இருந்து ஆதரவு பெருகி வருகிறது. கூடங்குளம் அணு மின் நிலையம் பற்றிய சந்தேகங்களை விளக்க அங்கு பணியாற்றும் அதிகாரிகள் தயாராக உள்ளனர்'' என, கொடிசியா தலைவர் கந்தசாமி தெரிவித்தார்.

கூடங்குளம் அணு மின் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தின் தலைமையில், கோவையில் உள்ள 30 தொழில் அமைப்புகள் இணைந்து உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளன. இதில், அகில இந்திய கிரில் உற்பத்தியாளர்கள் சங்கம், கிரில் வேலை செய்வோர் நலச்சங்கமும் பங்கேற்க உள்ளன.
கோவையில் நடக்கும் உண்ணாவிரதத்தில் பங்கேற்க பொதுமக்களும் பலர் கொடிசியா வை தொடர்பு கொண்டு வருகின்றனர். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், நுகர்வோர் நல அமைப்புகள் பலவும் கொடிசியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

கொடிசியா தலைவர் கந்தசாமி கூறியதாவது: கூடங்குளத்தில் அணு மின் நிலையம் அமைய வேண்டும் என்பதே கோவை மக்களின் ஒட்டுமொத்த கருத்தாக உள்ளது.பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட எட்டு அணு உலைகள், இந்தியாவில் எவ்வித ஆபத்தும் இல்லாமல் தற்போதும் பாதுகாப்பாகவே செயல்பட்டு வருகின்றன. விஞ்ஞான, தொழில் நுட்ப வளர்ச்சி மேம்பட்டுள்ள இந்த சூழ்நிலையில், எவ்வித ஆபத்தும் நேராது என நம்பலாம்.
இயற்கை வளங்களான நிலக்கரியின் தேவை அதிகரித்து வருகிறது. உற்பத்தி குறைந்து வருகுகிறது. இந்த இடைவெளி ஆண்டுக்கு இரண்டு கோடி டன் அளவுக்கு அதிகரித்து வருகிறது. நிலக்கரி பயன்பாடும் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதாக உள்ளது. வேகமான வளர்ச்சியை எட்டிய நாடுகள் எல்லாம், அணு மின் சக்தியை பயன்படுத்தி வருகின்றன. நாட்டின் வளர்ச்சியை எதிர்ப்போரே இத்தகைய அணு மின் நிலையத்தை எதிர்ப்பவர்கள். இதன் பின்னணியை அரசு ஆராய்ந்து, கண்டுபிடித்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
கூடங்குளம் அணு மின் நிலையம் அமைய ஆதரவாக உண்ணாவிரதம் இருக்க ஆதரவு பெருகி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் வரும் 20ம் தேதி அந்தந்த மாவட்டங்களின் தலைநகரங்களில் உண்ணாவிரதம் மேற்கொள்ளவிருக்கின்றனர். தென் மாவட்டங்களைச் சேர்ந்த பலர், கூடங்குளம் வரை சென்று ஆதரவு தெரிவிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
இவ்வாறு, கொடிசியா தலைவர் கந்தசாமி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: