வியாழன், 15 டிசம்பர், 2011

அனைத்துக் கட்சியினரும் உம்மன் சாண்டி சொல்வதை கேட்பார்களா

Viruvirupu

Trivandirum, India: The Kerala Pradesh Congress Committee (KPCC) has called off all agitations against Tamil Nadu in the Mullapperiyar issue following Prime Minister Dr Manmohan Singh’s appeal to the two states to maintain restraint. The prime minister made the appeal when an all-party delegation led by State Chief Minister Oommen Chandy called on him in New Delhi. 

 கேரளாவில் நடாத்தப்படும் போராட்டங்களில், தமது கட்சியினர் (காங்கிரஸ்) இனி ஈடுபட மாட்டார்கள் என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி அறிவித்துள்ளார்.“முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் நடத்தும் போராட்டங்களை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மற்றைய கட்சிகள் நடாத்தும் போராட்டங்களை நிறுத்துமாறு என்னால் கூற முடியாது. நிறுத்துவதும் தொடர்வதும் அவர்களது இஷ்டம்” என்றும் தெரிவித்துள்ளார் அவர்.

பிரதமர் மன்மோகன் சிங்கின் வேண்டுகோளை அடுத்தே இந்த முடிவுக்கு தாம் வந்திருப்பதாகக் கூறியுள்ள உம்மன் சாண்டி, “இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் எங்களிடம் உறுதியளித்தார். இந்தப் பிரச்னை தொடர்பாக கேரளத்தில் நடைபெறும் அனைத்துப் போராட்டங்களையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்” என்கிறார்.
உண்மையில் என்னதான் நடந்தது?
முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் மத்திய அரசு தமக்கு சாதகமான நிலைப்பாடு எடுக்கும் என்ற நம்பிக்கை கேரளாவின் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் இருந்தது. காங்கிரஸ்காரர் முதலமைச்சராக உள்ளதால், அவரது சொல் சபையேறும் என்பதே நம்பிக்கைக்கு காரணம். பிரதமரிடம் இருந்து தமக்கு ஆதரவான ஸ்டேட்மென்ட் வரும் என்று நம்பிக்கையூட்டி, அனைத்துக் கட்சியினரையும் டில்லிக்கு அழைத்துச் சென்றார் முதல்வர் உம்மன் சாண்டி.
பிரதமரை சந்திப்பதற்கு நேற்று டயம் கொடுக்கப்பட்டிருந்தது. இவர்கள் கூறிய அனைத்தையும் அமைதியாகக் கேட்ட பிரதமர், கேரளத்தில் அனைத்துக் கட்சியினரும் தத்தமது போராட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தெரிவித்துவிட, தமிழகம் மீது புகார் செய்யக் கூட்டமாகச் சென்றிருந்த இவர்கள் திகைத்துப் போனார்கள்.
தேவையில்லாமல் டில்லி வரை அழைத்து வந்து இப்படி குப்புற விழ வைத்துவிட்டாரே என்று மற்றைய கட்சித் தலைவர்கள் அப்செட் ஆனார்கள். ஆனால், பிரதமர் முன்னிலையில் தமது முதல்வரை ஆசைதீர திட்டவும் முடியவில்லை அவர்களால்.
“அனைத்துக் கட்சியினரும் இங்கே வந்திருக்கிறீர்கள். அனைவரும் போராட்டத்தை நிறுத்துவதாக இங்கேயே அறிவித்து விடுங்களேன்” என்று பிரதமர் கேட்டிருக்கிறார்.
தாம் அழைத்துவந்த மற்றைய கட்சித் தலைவர்களை திரும்பிப் பார்த்திருக்கிறார் முதல்வர் சாண்டி. அவர்களது முகங்களைப் பார்த்தவுடனேயே, நிலைமை தமக்கு சாதகமாக இல்லை என்று புரிந்து கொண்டார். உடனே அவசர அவசரமாக, “நாங்கள் இதுபற்றி ஒன்றாக ஆலோசித்துவிட்டு முடிவு எடுக்கிறோம்” என்று கும்பிடு போட்டுவிட்டு அனைவரும் வெளியே வந்துவிட்டனர்.
வெளியே வந்தவர்கள் டில்லியிலேயே தமக்குள் அனைத்துக் கட்சி கூட்டம் ஒன்றை வைத்ததில், அது அடிதடி ஏற்படாத குறையாக முடிந்திருக்கிறது.  போராட்டங்களை நிறுத்த மற்றைய கட்சித் தலைவர்களிடையே ஆதரவு இல்லை.
முதல்வருக்கு இக்கட்டான நிலை. தமது கட்சியைச் சேர்ந்த பிரதமரே சொன்ன பின்னர் இவர் போராட்டம் நடத்த முடியாது. மற்றையவர்களை நிறுத்துமாறு வற்புறுத்தவும் முடியாது. வேறு வழியில்லாமல், கட்டுரையில் ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்ட ஸ்டேட்மென்டை விடுத்திருக்கிறார். “முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் நடத்தும் போராட்டங்களை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மற்றைய கட்சிகள் நடாத்தும் போராட்டங்களை நிறுத்துமாறு என்னால் கூற முடியாது. நிறுத்துவதும் தொடர்வதும் அவர்களது இஷ்டம்”
அனைத்துக் கட்சியினரும் உம்மன் சாண்டி சொல்வதை கேட்பார்களா, இல்லையா என்பதை விடுங்கள்.. இவரது சொந்தக் கட்சியினர் இவர் சொல்வதைக் கேட்டு போராட்டங்களை நிறுத்துகிறார்களா என்று பார்க்கலாம்!

கருத்துகள் இல்லை: